
ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
2014-19 காலகட்டத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள், ஜிஎஸ்டி, மாட்டிறைச்சித் தடை, நீட், எட்டுவழிச் சாலை போன்ற பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராடிவந்தன. ஆனால் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் கண்மூடிக்கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட அவர், தோல்வியைத் தழுவினார்.
தொடர்ந்து பாஜகவுடன் நெருக்கம் காட்டிவந்த கிருஷ்ணசாமி, தற்போது பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் நிகழ்விலும் கலந்துகொண்டிருக்கிறார். நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று (ஜூன் 16) ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கான மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம் (TritiyaVarsh) நிறைவு விழா நடைபெற்றது.

அதில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியும், அவரது மகனும் கட்சியின் இளைஞரணிச் செயலாளருமான ஷ்யாம் கிருஷ்ணசாமியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
அவரை அறிமுகப்படுத்திய ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி, புதிய தமிழகம் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், தேவேந்திர குல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்ற கோரிக்கை குறித்தும் எடுத்துரைத்தார். நிகழ்வில் உறுதிமொழியேற்கும் சமயத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் போலவே கிருஷ்ணசாமியும் நெஞ்சில் கைவைத்து உறுதிமொழியேற்றுக் கொண்டார். நிகழ்வுக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை நேரில் சந்தித்துப் பேசினார்.
