10 இலட்சம் பேரில் ஒருத்தி வனிதா!

0
1

28 வயதில் வனிதா என்ற பெண்ணுக்கு 06.06.2019 அன்று தில்லைநகர் பாத்திமா மருத்துவமனையில் சிசேரியன் மூலம் ஆண்குழந்தை பிறந்தது. இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் வனிதா 10 இலட்சம் பேரில் ஒருத்தி. தமிழகத்தில் பிரபல மருத்துவர்களால் அவளுக்கிருக்கும் குறைப்பாட்டினால் திருமணம் செய்து்கொள்ள வேண்டாம். திருமணம் செய்தாலும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று அறிவுரை சொல்லியிருந்தனர். ஆனால், வனிதாவுக்கு தற்போது திருச்சியில் பாத்திமா மகப்பேறு மருத்துவமனையில் டாக்டர் ரொஹையா அவர் முயற்சியில் அழகிய ஆண்குழந்தை பிறந்துள்ளது. இது எப்படி சாத்தியம்? அவளுக்கு இந்த நோய் என்ன? அந்த குறைபாடுகளோடு எப்படி குழந்தை பிறந்தது என்பதை அந்த மருத்துவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம்..

 

நம்ம திருச்சி இதழுக்காக அவர்களிடம் பேசிய போது…
வனிதாவுக்கு சொந்தவூர் கும்பகோணம், அவளுக்கு ஒன்பது வயது இருக்கும் பொழுது கீழே விழுந்து அடிப்பட்டு ரத்தப்போக்கு அதிகமானதால் சி.எம்.சி. வேலூர் மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார். அவருக்கு இரத்தத்தில் இருக்கும் (Platlet Dysfenction) தட்டணுக்களின் செயல்பாடு குறைவாக இருப்பதால், இரத்தம் உறையும் தன்மை (Glanzmann Thrombasthenia) மிகக்குறைவாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற குறைபாடு 10 இலட்சம் பேரில் ஒருவருக்கு இருக்கும்.

வனிதாவின் 13 -வது வயதிலிருந்து மாதாவிடாய் கிட்டதட்ட மாதத்தில் 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை இருக்கும். அவளின் சராசரி வாழ்க்கை என்பது மாதத்துக்கு 10 நாட்கள் மட்டுமே. திருமணம், குழந்தைபேறு என்பது வனிதாவின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்களின் பரிந்துரை செய்தனர்.

 

2
4

ஆனால், வனிதா ரயில்வே துறையில் வேலைக்கு சேர்ந்ததும், அதே துறையில் பணிபுரியும் விஜயகுமார் அவளை திருமணம் செய்து கொள்ள விருப்பபட்டார். வனிதாவின் பிரச்சினைகள் தெரிந்திருந்தும் திருமணம் செய்து கொண்டார். பிறகு, ஆலோசனைக்காக என்னிடம் வந்தபோது, இத்தகைய பிரச்சினையால் நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று அறிவுரை வழங்கினேன். ஆனால், சில மாதங்களிலே வனிதாவுக்கு கரு உருவானது. சில நாட்களிலே கலைந்தும் போனது. அப்போதும் நான் வனிதாவிடம், நீ கர்ப்பம் அடைவது உன் உயிருக்கு ஆபத்து. இதை ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருந்தேன். இருந்தும் ஏன் இப்படி செய்கிறார் என்று கேட்டேன். அப்போது வனிதாவோ, மேடம் எனக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருக்கு என்று தெரிந்து அவர் என்னை திருமணம் செய்து கொண்டார். இப்படி என்னை நேசிக்கும் ஒருவருக்கு என் உயிரை கொடுத்தாவது ஒரு குழந்தையை அவருக்கு கொடுக்க ஆசைப்படுகிறேன் என்று உருக்கமாக பேசினார். அன்புக்கு முன்னால் அறிவியல் தோற்றுப்போனாலும் வனிதாவின் உண்மையான அன்பு எனக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது.

 

தொடர்ந்து 3 முறையாக கருத்தரித்த போது, தொடர்ந்து 9 மாதங்களும் பெரும்பாலும் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழ்நிலை. தொடர்ந்து சிகிச்சை அளித்து, கிட்டதட்ட 30 யூனிட் இரத்தம் ஏற்றி, நானே சிசேரியன் செய்தேன். என்னுடன், சிஎம்சி வேலூர் மருத்துவர் Haemotologist டாக்டர்.அபிரஹாம் மற்றும் திருச்சி டாக்டர் ரத், மயக்கவியல் மருத்துவர் டாக்டர் சீனிவாசன், குழந்தை நல மருத்துவர் டாக்டர் செந்தில், டாக்டர் தங்கவேலு டீம் முயற்சியால் அம்மாவும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள் என்றார். முறையான சிகிச்சையின் மூலம் வனிதா – விஜயகுமார் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது.

 

Glanzmann Thrombasthenia என்ற இரத்தம் உறையும் தன்மை இல்லா நோய் 10 லட்சம் பேரில் ஒருவருக்கு பாதிப்புள்ளது. மரபணுக்களின் பிரச்சினையால் தட்டணுக்களின் மேல்பகுதியில் இருக்கும் IIb, IIIa என்ற Glycoprotein குறைந்து, இரத்தம் உறைதலை தடுத்துவிடும். இதுபோன்ற குறைபாடு, அகில இந்திய அளவில் 137 பேருக்கு பாதிப்பு இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மிக ஆபத்தான சூழ்நிலையை இது ஏற்படுத்தும் இந்த பாதிப்புகள், முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் இதில் பெண்கள் கர்பம் என்பது மிகப்பெரிய சவால். பேறுகாலம் என்பது மிக கடினமான ஒன்று என்றார். டாக்டர் ரொஹையா ‘நம்ம திருச்சி’ இதழ் சார்பாக வாழ்த்துகள் !

3

Leave A Reply

Your email address will not be published.