அறிவோம் தொல்லியல்-18 பயணங்கள் முடிவதில்லை…

0
1
அசோகன் ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட பிராமி எழுத்து

சென்ற இதழில் குறியீடுகள் மற்றும் எழுத்துக்களின் உருவாக்கம் குறித்து கண்டோம். இவ்வாரம் தமிழி அல்லது பிராமி எழுத்துக்களை காண்போம்.

பிராமி:

4

தமிழகத்தில் கிடைத்த தொன்மையான எழுத்து வடிவங்களுக்குப் பெயரிடுவதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு சிலர் தமிழி என்று குறிப்பிடுகின்றனர். வேறு சிலர் தமிழ்-பிராமி  என்று குறிப்பிடுகின்றனர்.

இந்தியாவின் வடபகுதியில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் ஆட்சி புரிந்தான். இவன் ஆட்சிக்காலத்தில் பிராமி என்னும் எழுத்து வடிவங்கள் அங்குப் பயன்படுத்தப் பெற்றுள்ளன. தமிழக தொன்மையான கல்வெட்டுகளும் இதே காலத்துக்கு உரியவை என கருதப்பட்டன. ஆனால் அவன் காலத்திற்கு சுமார் 200-300 வருடங்கள் முந்தைய கல்வெட்டுகள் பெருங்கற்கால சின்னங்களிலும், சில நடுகற்களிலும் கிடைத்தன. இந்தக்  கல்வெட்டு எழுத்து வடிவங்களுக்கும் வடநாட்டில் பயன்படுத்தப் பெற்ற பிராமி எழுத்து வடிவங்களுக்கும் சிற்சில ஒற்றுமைகள் உள்ளன. இதனால் பிராமி என்னும் பொது எழுத்து வடிவில் இருந்து தமிழ்நாட்டில்  கல்வெட்டு எழுத்துகளும் , வடநாட்டில் பிராமி எழுத்துகள் உருவாகின என் முதலில் கருதப்பட்டது. இக்கருத்தின் அடிப்படையில் வடபிராமி, தென்பிராமி என்று பெயரிட்டு அழைப்பதும் உண்டு. தமிழகக் கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் பழமையான கல்வெட்டு எழுத்து வடிவங்களைத் தமிழ்-பிராமி என்று பெயரிட்டு அழைப்பார்.

 

கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் சமணசமயநூலான சமவயங்கசுத்தா வில் 18 வகையான எழுத்துகளை குறிக்கின்றது.

 

1.பம்பி(பிராமி)

2.யவநாளி

3.தொசபுரியா

4.கரோத்தி

5.புக்கரசரியா

6.போகவையா

7.பஹாரையா

8.உயகம்தரிக்கியா

9.அக்கரபித்தியா

2

10.தேவானையா

11.கினின்ஹையா

12.அம்கலிபி

13.கணிதலிபி

14.கம்தவ்வலிபி

15.ஆதம்சலிபி

16.மஹேசரி

17.தமிழி

18.பொலிம்தி

 

இதில் 17 வதாக இடம்பெற்றிருக்கும் தமிழி என்பது நம் தமிழையே குறிக்கும். சங்ககாலத்தில் புலவர்கள் இயற்றிய பாடல்கள் இவ்வெழுத்து வரியிலேயே எழுதப்பட்டிருக்கும். இவ்வெழுத்திலிருந்தே காலப்போக்கில் மாற்றம் நிகழ்ந்து இன்றைய தமிழ்மொழி எழுத்துருவாக்கம் தோன்றியது.

 

தமிழகத்தில் ஆரம்பகாலத்தில் இவ்வெழுத்துகள் கண்டறியப்பட்டதும் இவ்வெழுத்துகளின் பொருள் படித்துணரப்படவில்லை எனவே வட்டெழுத்து, கிரந்தம், போன்ற பிற தமிழ் கல்வெட்டுகள்   வடஇந்திய பிராமி எழுத்துக்களிலிருந்துதான் தோன்றியது எனும் கருத்தை அன்றைய ஆய்வாளர்களான டி.ஏ கோபிநாதராவ், சிவராமமூர்த்தி போன்றோர் முன்வைத்தர். 1887 ம் ஆண்டு தமிழ்த்தாத்தா என புகழப்பட்ட உ.வே.சாமிநாதஅய்யர் அவர்களால் வெளிக்கொணரப்பட்ட சங்ககால இலக்கியங்கள் பல புதியபார்வையை நம் தமிழி எழுத்துக்களில் தோற்றுவித்தது. புறநானூறு, பதிற்றுப்பத்து போன்றவை நம் தமிழரின் தொன்மையை எடுத்துரைத்தது. நம் தமிழ்சமூகம் கடமைப்பட்டுள்ளவர்களில் இவரே முதன்மையானவர்.

அசோகரின் பிராமிக்கு இணையான எழுத்துக்கள் தமிழகத்தில் கிடைக்க ஆரம்பித்ததும் நம் தொன்மை இன்னும் முன்னே சென்றது.

இராபர்ட்சீவல் எனும் ஆங்கிலேயரால் முதன்முதலாக 1882 ல் மாங்குளம் எனும் இடத்தில் தமிழி எழுத்து கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் 1906ல் திரு.வெங்கய்யா அவர்களால் இதற்கு பொருள் கூறப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழகத்தில் ஏகப்பட்ட இடங்களில் தமிழி எழுத்துகள் கிடைத்து வருகிறது!

தொல்லியல்அறிஞர் ஐராவதம் மகாதேவன் இத்தகைய தமிழி எழுத்துக்களை படித்து பொருள் கண்டு நிறைய ஆவணப்படுத்தியுள்ளார்.

வரும் வாரம் தமிழத்தில் இதுவரை கிடைத்துள்ள தமிழி எழுத்தில் காலத்தால் முந்தைய கல்வெட்டை காண்போம். அதன்பின் தொடர்ச்சியாக அனைத்து தமிழி எழுத்துக்களையும் காண்போம்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்