ஆதிமகள் 19

கரணும், காயத்ரியும் சந்தித்த நேரங்களும் பகிர்ந்து கொண்ட விசயங்களும் குறைவு என்பதை இருவரும் உணராததால், ஒருவர் பற்றிய மற்றொருவரின் புரிதல் முரண்பாடாகவே இருந்தது.
பல்வேறு குழப்பங்களுடன் கரண், சண்முகநாதனையும், காயத்ரியையும் அவர்களது வீட்டில் இறக்கி விட்டு விட்டு, கரணும், விசாலியும் அவர்களது வீட்டை அடைந்தனர். கரணோ தனது அறைக்குள் செல்ல மனமில்லாமல் மெதுவாக படியேறி மொட்டை மாடிக்கு சென்றான்.
இதே நிகழ்வுடன் காயத்ரியும், தான் நின்றிருந்த தனது வீட்டு மொட்டை மாடியிலிருந்து வானத்தை பார்த்தாள். வானம் பளிச்சென்று சிறு துண்டு மேகம் கூட இல்லாமல், அலை இல்லா பெருங்கடலென, நீர் சொட்டாமல் கவிழ்ந்திருந்தது. கருப்பும், வெள்ளையுமாய், இனம் தெரியாத பறவைகள் ஒருசேர கூட்டமாய் பறந்து சென்று கொண்டிருந்தன. சீராக ஒரே அளவு வேகத்துடன், ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளாமல் இடைவெளி மாறாமல், அந்த பறவைகள் பறந்து சென்றதில் மனதை பறிகொடுத்தாள் காயத்ரி. அவளது ஆடையை கலைக்காமல் அவளைத் தழுவி செல்லும் அளவில் காற்று வீசியது. அந்த காற்றை வாரி அணைத்து, கைகளை இறுக கட்டி, ஆழ்ந்த பெருமூச்சுடன் இன்ப ஜ்வாலையை தனது உயிருக்குள் தனக்குத்தானே மூட்டிக்கொண்டாள் காயத்ரி.

இருவரும் ஒரே மனநிலையில் பல சந்தர்ப்பங்களில் சந்தித்து பேசிக்கொண்டாலும், ஒருவர் மனநிலையை மற்றவர் உணர்த்தாமல், பகிர்ந்து கொள்ளாமல், சற்று விலகியே, ஏதோ அடையாளம் தெரியா ஒரு மைய புள்ளியில் இருவரும் இணைந்திருந்தனர்.
நாட்கள் நகர்ந்தன. கரண் சென்னையில் தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு, புதிதாக ஆரம்பித்த கார் கம்பெனியில் கவனம் செலுத்தி, முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான். பொறுப்புகளினாலும், வேலைப்பளுவாலும், சில சந்தர்ப்பங்களில் காயத்ரியை மறந்திருந்தான். ஆனாலும், மீண்டும் அவள் நினைவு வரும்போது, அவளை சந்திப்பதற்கும், அவளுடன் பேசுவதற்கும், மனம் அவளை தேடியது.
காயத்ரியிடமிருந்து விலகியிருக்க, தான் ஆரம்பத்தில் யோசித்ததை கரண் சௌகரியமாய் மறந்திருந்தான். காலப்போக்கில் எதற்காக அவளிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என அவனுக்குள் அவனே கேட்டுக் கொண்டது நகைப்புக்குரிய விஷயமாகி போனது.
பல சமயங்களில் திட்டமிட்டே பொய்யாக, சில சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொண்டு இருவரும் சந்தித்தனர். இன்று தனது முடிவை கரணிடம் கூறிவிட வேண்டும். அவன் முடிவையும் கேட்டுவிட வேண்டும் என எண்ணி எத்தனையோ நாட்கள் காயத்ரி கற்பனையாக வார்த்தைகளை தனக்குத்தானே பேசிக்கொண்டு, கரணை பார்க்க செல்பவள் அவனை பார்த்ததும், அவன் பதில் தன்னை அலட்சியப்படுத்தி விட்டால் என்ன செய்வது என்று பயந்தவண்ணம் அந்த எண்ணங்களை மறைத்து, அவனுடன் தான் என்ன பேச வேண்டும் என நினைத்திருந்தாளோ அதை கைவிடுவாள்.
ஜானகி அம்மாளும் காயத்ரியின் போக்கை கவனிக்க தவறவில்லை. அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் காலக்கட்டத்தில், யாரையும் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருந்த காயத்ரி, இன்று கரணின் பக்கம் அவளது முழு கவனமும் குவிந்திருப்பது, சில நாட்களுக்கு முன் காயத்ரியே தானாக முன் வந்து, தன்னிடம் கரணைப்பற்றி பேசியது என இந்த சம்பவங்களை வைத்தே காயத்ரியின் மனதை ஜானகி அம்மாள் நன்றாகப் புரிந்து வைத்திருந்தாள்.

இந்த சூழ்நிலை, காயத்ரியின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம், இவற்றை பற்றியே இடைவிடாது யோசித்து வந்த ஜானகி அம்மாள், சண்முகநாதனிடம் இதைப்பற்றி பேசி, ஒரு முடிவுக்கு வர வேண்டும் என எண்ணியிருந்தாள்.
காயத்ரியின் செயல்களில், வார்த்தைகளில், அவள் உடல்மொழியில் ஏற்பட்டிருந்த மாற்றங்களை சண்முகநாதன் ஏதும் கூர்ந்து கவனித்ததாக தெரியவில்லை. ஆனால் அவர் ஒன்றை மட்டும் அவ்வப்போது உணர்ந்திருந்தார். தனக்கும் காயத்ரிக்கும் ஏதோ ஓர் இடைவெளி ஏற்பட்டிருப்பதைப்போல் புகைமூட்டமாய் அவ்வப்போது திடீர், திடீரென ஓர் உணர்வு அவருக்குள் தோன்றி மறையும். அது தன்னால்தான் இந்த இடைவெளியோ என்றும், வேலைப்பளு காரணமாக நாம்தான் தனது மகளின் நினைவில் இருந்து உள்ளார்ந்து விலகி நிற்கிறோமோ என்று கூட சில நேரம் இரவு உறங்க போவதற்கு முன் யோசிப்பவர், பின் உடல் அயற்சியால் உறங்கி போவார். மீண்டும், விடியல், வேலைப்பளு, உடல் அயற்சி, உறக்கம் என சண்முகநாதன் களைத்து போய் ஓடிக்கொண்டிருந்தார்.
இன்று இரவு சண்முகநாதன் வீட்டிற்கு வந்தவுடன் காயத்ரியையும் வைத்துக்கொண்டு வீட்டில் நிலவும் யதார்த்த சூழ்நிலையை பற்றி மூவருமாக பேசிவிட வேண்டும் என ஜானகி அம்மாள் முடிவு செய்தாள். தன் மனதுக்கு தெரிந்த ஒன்றை, தன்னுடைய உள்ளங்கையில் தான் என்ன மறைத்து வைத்திருக்கிறேன் என்று மறைமுகமாக காயத்ரி உணர்த்திய விஷயத்தை, சண்முகநாதனிடம் இதுவரை தான் பேசாதது தவறாகி விடுமோ என்ற குற்ற உணர்ச்சியால், ஜானகி அம்மாள் சண்முகநாதனின் வரவை எதிர்பார்த்து பரபரத்தாள்.
காயத்ரி, கரணைப் பற்றி தன்னிடம் சொல்லியும் தான் மேற்கொண்டு எதுவும் காயத்ரியிடமோ அல்லது அப்பாவிடமோ எதுவும் பேசாமலிருக்கிறாளே என்று தன்னைப்பற்றி காயத்ரி மனதுக்குள் தவறாக ஏதேனும் முடிவு செய்து கொள்வாளோ என்று பலவாறாக தன்னைத்தானே குழப்பிக் கொண்டவளாய் ஜானகி அம்மாள், மெதுவாக காயத்ரியின் அறைக்கதவை திறந்து, காயத்ரியை பார்த்தாள். காயத்ரி தலையணையில் முகம் புதைத்து கால்களை பின்னி அசைத்தவறே படுத்திருந்தவள் கதவை திறந்து அம்மா வந்ததை பார்த்தவள், தன்னை சரி செய்து கொண்டு, ” என்னம்மா” என்றாள். “ஒன்றுமில்லை ஹாலுக்கு எழுந்து வா” என்று கூறிவிட்டு, ஜானகி அம்மாள் அங்கிருந்து சென்றவள், சண்முகநாதனை மீண்டும் எதிர்பார்த்து ஹாலில் அமர்ந்தாள்.
சிறிது நேரத்தில் வீட்டின் வெளியே சண்முகநாதன் யாருடனோ பேசிக் கொண்டிருப்பதும் பின் பேசிவிட்டு வீட்டிற்குள் வரும் சத்தமும் கேட்டது. காயத்ரியும் தன் அறையை விட்டு ஹாலுக்கு வந்தவள், டிவியை ஆன் செய்துவிட்டு அங்கு போடப்பட்டிருந்த சோபாவில் “எதுக்கும்மா கூப்பிட்ட” என கேட்டுக்கொண்டே அமர்ந்தாள். டிவியில் சேனல்கள் மாறிக்கொண்டே இருந்தது.
தான் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல், ஜானகி அம்மாள் யோசித்தவாறு இருந்தாள். சண்முகநாதன் சாப்பிட்டு முடித்துவிட்டு “நீ சாப்பிட்டியாம்மா” என காயத்ரியை பார்த்து வழக்கம் போல் கேட்டுவிட்டு அறைக்கு செல்ல திரும்பினார். அப்போது “ஏங்க கொஞ்சம் உட்காருங்க காயத்ரிக்கிட்ட பேசணும்” என்றாள் ஜானகி அம்மாள். காயத்ரி தானாக டிவியை ஆப் செய்தாள்.
காயத்ரிக்கு அம்மா பேசப்போகும் விசயம் மின்னலாய் தோன்றி மறைந்தது. தான் கரணை பற்றியே யோசித்துக் கொண்டிருப்பதையும், தான் அவனை நேசிப்பதையும், அதே போல் அவன் மனதிலும் தான் இருக்கிறோமா, தன்னையும் அவன் நேசிக்கிறானா என்பதையும் தெரிந்த பிறகு, அப்பா, அம்மாவிடம் தெளிவாக பேசிக்கொள்ளலாம் என அவள் முடிவு செய்து வைத்திருந்தாள். ஆனால் அதற்குள் அம்மா இந்த விசயத்தைப் பேசி அதை தீவிரமாக்கி விடுவாளோ என அஞ்சினாள் காயத்ரி.
எந்த ஒரு விசயத்தையும் தனக்குள் போட்டு குழப்பிக்கொண்டு விடை தெரியாமல் அலையும் சூழல் காயத்ரிக்கு ஏற்பட்டது இல்லை. அவள் அத்தகைய மனச்சிக்கலை ஏற்படுத்திக்கொண்டதுமில்லை. ஏனெனில் அவளது உலகம் மிகச்; சிறியதாகவே இருந்தது. அந்த உலகத்தை அவள் நேசிப்பதும் அந்த உலகம் அவளை நேசிப்பதுமாகவே அவளது வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்தது.
