ஸ்மார்ட் சிட்டி திருச்சியில் ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப்படுமா ?

0
gif 1

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானம் மற்றும் அரசு, தனியார் பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் கிரிக்கெட், வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


இதனால், பல விளையாட்டுகள் பற்றிய விவரங்கள் குழந்தைகளுக்கு தெரியாமலேயே போய் விடுகின்றன. அதையும் தாண்டி குழந்தைகளுக்கு வேறு விளையாட்டில் ஆர்வம் இருக்கும் பட்சத்தில் அதற்கான விளையாட்டு மைதானம் இல்லாமல் அவதியுறும் சூழ்நிலையே இன்னும் நிலவுகிறது.
உதாரணமாக, ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டிற்கான விளையாட்டு மைதானம் இல்லாததால் உறையூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள சாலைகளில் விளையாடிக்கொண்டிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர், திருப்பூர், கோவை, மதுரை, சென்னை ஆகிய மாவட்டங்களில் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி செய்வதற்கென அரசாங்க பயிற்சி (RINK 200 METER) இடங்கள் இருக்கிறது.

 

ஆனால், தமிழ்நாட்டின் மத்திய பகுதியான திருச்சியில் இல்லாமல் இருப்பது. குழந்தைகளுக்கு ஸ்டேடிங் மீதான ஆர்வத்தை குறைப்பாதாக மட்டும் இல்லாமல், திருச்சி விளையாட்டு துறை அலுவலகத்தின் செயல்பாட்டின்மையையும் காட்டுகிறது. இதனால், திருச்சி சார்ந்த ஸ்கேட்டிங் விளையாடும் குழந்தைகள் திறமைகள் இருந்தும், முறையான பயிற்சி இல்லாத காரணத்தினால் மாநில அளவிலான போட்டிகளுக்கு செல்லும் போது மற்ற மாவட்ட போட்டியாளர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற சிரமப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, சாலைகளில் பயிற்சி மேற்கொள்வதால், சாலையில் செல்வோருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், விபத்து ஏற்படும் சூழலும் நிலவுகிறது.

gif 3
gif 4

இது குறித்து ஸ்கேட்டிங் விளையாடும் குழந்தைகளின் பெற்றோர் ஒருவர் கூறுகையில், தமிழகத்தின் முக்கிய நகரமான திருச்சியிலேயே ஸ்கேட்டிங் விளையாட்டிற்கு மைதானம் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. சிறந்த மைதானம் இருந்தால் மட்டுமே எந்த விளையாட்டிலும் குழந்தைகளால் முழுத்திறமையையும் வெளிப்படுத்த இயலும்.

அதுமட்டுமின்றி, மைதனாம் இல்லாததால் பெற்றோர்கள் அதிக பணத்தை பயிற்சி கட்டணமாக கட்டவேண்டியுள்ளது. இதனால், நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஸ்கேட்டிங்க ஒரு பணக்கார விளையாட்டு போன்ற எண்ணம் தோன்றுகிறது. மேலும், அவர்களுக்கு இந்த விளையாட்டு கனவாகவே போய்விடுகிறது. எனவே, அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஸ்கேட்டிங்கான மைதானத்தை அமைக்கவேண்டும். இதனால், பல குழந்தைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி தேசிய அளவில் சாதிப்பர்கள் என்றார்.


இது குறித்து திருச்சி மாவட்ட ஸ்கேட்டிங் விளையாட்டின் செயலாளர் மனோகரன் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டிற்கு மைதானம் அமைக்கவேண்டும் என திருச்சி விளையாட்டு துறை அலுவலர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், அரசியல் தலைவர்கள் உட்பட பலரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால், இன்னும் ஒரு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை. ஸ்மார்ட்டி சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்கேட்டிங் விளையாட்டிற்கு மைதானம் அமைக்கலாம்.
ஆனால், மாநகராட்சி அலுவலர்கள் இதுவரையில் அதற்காக ஒன்றும் செய்யவில்லை. இருப்பினும், ஸ்கேட்டிங்காக மைதானம் அமைக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டே வருகிறோம் என்றார்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.