திருச்சி மைக்ரோ பைனான்ஸ் என்கிற பெயரில் கந்துவட்டியில் சிக்கும் பெண்கள் !

மகளிர் சுய உதவி குழுவில் மைக்ரோ பைனான்ஸ் என்கிற பெயரில் கந்துவட்டி !
திருச்சி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சிவராசு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் திரண்டு வந்து கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர்.


அந்த மனுவில், தங்களுடைய கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை எனவும், 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாகவும், ஊராட்சி செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றும் கூறப்பட்டிருந்தது.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சியினர், பெரியார் திராவிடர் கழகத்தினர் அளித்த மனுவில், ‘‘தனியார் மகளிர் சுய உதவிக்குழுக்கள் என்ற பெயரில் குழுக்கள் பெருகிவிட்டன. குழு உறுப்பினர்களில் கடன் பெற்றவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் தவணை தொகையை கட்ட முடியவில்லை என்றால் அவர்களை கேவலப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. ரிசர்வ் வங்கியின் நடைமுறைகளை தனியார் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடைப்பிடிப்பதில்லை. கந்து வட்டி கொடுமையில் பெண்கள் சிலர் சிக்கி தவிக்கின்றனர். எனவே மைக்ரோ பைனான்சாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களை தடை செய்ய வேண்டும். என்று கூறியிருந்தனர்.
