தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வேட்பாளர்கள் யார் சடுகுடு ஆரம்பம்

0
Business trichy

வரும் ஜூலை மாதம் தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள். ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்யப்பட 39 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கைப் பெறவேண்டும். இந்தத் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இதில் தேர்வு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர் 6 ஆண்டுகள் உறுப்பினராக இருப்பார்.

 

ஜூலை மாதம் 24ஆம் தேதியோடு தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினர்களான கனிமொழி (திமுக) கே.ஆர்.அர்ஜுணன், ஆர். இலட்சுமணன், டி.இரத்தினவேல், வி.மைத்ரேயன்(அதிமுக) டி.இராஜா (சிபிஐ) இவர்களின் பதவி காலம் முடிவடைகின்றது. இதனால் ஜுன் மாதம் 19ஆம் தேதி மாநிலங்களவைக்குத் தேர்தல் நடைபெறும். இதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் பின் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் நிலவரப்படி திமுக+காங்கிரஸ்+மூஸ்லீம் லீக் உட்பட 110 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதால் அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இரு வாரங்களுக்குள் ராஜினாமா செய்வார். இதனால் திமுக கூட்டணியின் பலம் 109ஆக குறையும். அதிமுக இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 பேருடன் 123ஆக உயர்ந்துள்ளது.

 

UKR

அதிமுக 3 இடங்களை எளிதாக வென்றுவிடும். திமுக இரண்டு இடங்களை எளிதாக வென்றுவிடும். எஞ்சிய ஒரு தொகுதிக்கு அதிமுக போட்டியிட்டால் திமுக 31 வாக்குகளையும் அதிமுக 6 வாக்குகளையும் பெறும் நிலையில் 31 வாக்குகளை வாங்கும் திமுக வெற்றிபெறும். எனவே, திமுக மற்றும் அதிமுக தலா 3 இடங்களில் போட்டியிடும் வாய்ப்பு அதிகம். 6 பேர் மட்டும் போட்டியிட்டால் அனைவரும் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்தல் நடைபெறாது. 7ஆவதாக ஒருவர் போட்டியிட்டால் தேர்தல் நடைபெறும்.
மாநிலங்களவை தேர்தலில் திமுக, மக்களவை தேர்தலின்போது மதிமுகவோடு ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் படி ஒரு இடத்தை மதிமுகவுக்கு ஒதுக்கும். அந்த இடத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதன் மூலம் மீண்டும் நாடாளுமன்றத்தில் வைகோ இடம் பெறுவார்.

2ஆவது இடத்திற்குக் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மன்மோகன் சிங் அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்படுவார். இவரின் பதவிக் காலம் ஜூன் 14ஆம் தேதியோடு முடிவடைகிறது. அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 26 இடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் மன்மோகன் சிங் அசாமில் போட்டியிடும் வாய்ப்பில்லை என்பதால், தமிழ்நாட்டில் போட்டியிடுகிறார். இது குறித்துக் காங்கிரஸ் கட்சித் தலைவர் இராகுல்காந்தி திமுக தலைவர் ஸ்டாலினிடம் தகவல் தெரிவித்துள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

3ஆம் இடத்திற்குத் திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. தற்போது நடந்து முடிந்த மக்களவை மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு நட்சத்திரப் பேச்சாளராகப் பிரச்சாரம் செய்தார். இது குறித்துத் திமுக செய்தி தொடர்பாளர்
டி.கே.எஸ்.இளங்கோவன் பேசும்போது,“தலைவர் மகன் என்பதால் உதயநிதி பிரச்சாரம் செய்யவில்லை. அவர் திமுக அறக்கட்டளையின் தலைவர். பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களிடம் மிகவும் பரிச்சயமானவர். அவர் பிரச்சாரத்தின்போது கூடிய கூட்டம் அதை உறுதி செய்தது” என்று கூறினார்.

BG Naidu

இந்நிலையில் திமுகவின் இளைஞர்களின் பிரதிநிதியாக உதயநிதி முன்னிறுத்தப்பட அவருக்கு எம்.பி. பதவி வழங்கப்பட வேண்டும் என்று திமுகவின் முன்னணியினர் குறிப்பிடுகின்றனர். கலைஞர் மகள் என்பதால் தான் கனிமொழி
எம்.பி. ஆனார். அது போலத் தலைவர் மகன் உதயநிதி எம்.பி.யாகக்கூடாதா? என்ற இளைஞர் ஒருவர் கேள்வியை எழுப்பினர். தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உழைத்த உதயநிதி மாநிலங்களவையில் எம்.பி.யாகும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது எனலாம்.

அதிமுகவிற்கான 3 இடங்களில், முதல் இடம் தற்போது உறுப்பினர் பதவி முடிகின்ற மைத்ரேயனுக்கு மீண்டும் மாநிலங்களவைக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியாகத் தெரிகிறது. மைத்ரேயன் பாஜகவில் இருந்தவர். பின்னர் அதிமுகவுக்கு வந்தவர் என்பதால் பாஜகவே இவர் பெயரை முன்மொழிந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.2ஆம் இடம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது பாமகவோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, பாமகவுக்கு இந்த இடம் வழங்கப்படும். அப்படி வழங்கப்பட்டால் தருமபுரி மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த, அக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் இராமதாசின் மகன் அன்புமணிக்கு வழங்கப்படும் என்று பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3ஆம் இடத்திற்குத் துணை முதல்வர்

ஓ.பி.எஸ். ஆதரவாளர் மற்றும் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மக்களவையில் தோல்வியடைந்த கே.பி.முனுசாமிக்கு வழங்கப்படவேண்டும் என்பதைப் பாஜக வழியாக முதல்வர் எடப்பாடிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோபம் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. முதல்வரின் மனநிலை 3ஆவது இடத்தைப் பொறுத்தவரை திருச்சியை நோக்கி அமைந்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திருச்சியில் தேமுதிக போட்டியிட்டு ‘டெபாசிட்’ இழந்துள்ளது.

மேலும் அதிமுகவின் இரும்புக்கோட்டை என்று வருணிக்கப்படும் ீரங்கம் தொகுதியில் 68 ஆயிரம் வாக்குகள் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசு பெற்றுள்ளது அதிமுக வாக்கு வங்கி சரிவைக் காட்டுகின்றது.
தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் மீண்டும் அதிமுகவைத் தூக்கி நிறுத்த, மக்களவையில் 2 இருமுறை உறுப்பினராக இருந்து, ஊழல், கெட்டபெயர் என எந்த அவப் பெயருக்கும் உள்ளாகாதருவரும் தற்போதைய மாநகர் மாவட்டச் செயலர் பொறுப்பில் உள்ளவருமான முன்னாள் எம்.பி. பி.குமார் அவர்களை மீண்டும் எம்.பி.யாக்க முதல்வர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. (குமார் எடப்பாடி ஆதரவாளர்) இதனால் பாஜகவைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் ஓ.பி.எஸ்.க்கும் செக் வைத்தது போல் ஆனது என இந்த முடிவை முதல்வர் மேற்கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. திருச்சி பி.குமார் மீண்டும் எம்.பி.யானால் அதிமுகவின் சரிந்துபோன வாக்குவங்கியைச் சரிசெய்வார் என்று அதிமுக வக்கீல் அணியில் உள்ள தொண்டர் ஒருவர் கூறினார். இரண்டு இடங்களில் ஒன்றை பாஜக கேட்டுப்பெறும் என்கிறார்கள்.

இதற்கு இடையில் தமிழகத்தில் சார்பின் மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் தோல்வியைத் தழுவியதையடுத்து, மத்திய அமைச்சரவையில் தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தின் சார்பாக ஒருவரை மத்திய அமைச்சராக தேர்ந்தெடுக்க பாஜக விரும்புவதால், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்கும் எனத் தெரிகிறது. ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய இணைஅமைச்சர் ரயில்வே துறையில் பதவி வேண்டும் என்றால், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஒதுக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் நிபந்தனை விதிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பாஜகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படவாய்ப்புள்ளது.
தம்பிதுரை, வைத்தியலிங்கம், கோகுலஇந்திரா, வைகை செல்வன், ஆகியோர் இந்த பதவியை குறிவைத்து காய்நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
எது எப்படியோ தமிழகத்தில் மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் மக்கள் யாரும் வாக்களிக்கமுடியாது என்பதுதான் இதில் உள்ள சோகமான செய்தி.

BG Naidu 1

Leave A Reply

Your email address will not be published.