இந்திக்கு எதிராக நூதன முறையில் போராட்டம்

0
1 full

தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் இந்தி மொழி கட்டாயம் படிக்க வேண்டும் என்ற அறிவிப்பிற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அதனை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற்று, 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்து விருப்பப்பட்டு அதனை படிக்கலாம் என்று தெரிவித்தது. இந்தி மொழிக்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து கருத்துகள் கூறி வருவதால் தமிழகத்தில் இந்திக்கு எதிரான நெருப்பு இன்னும் புகைந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களான தலைமை தபால் நிலைய அலுவலகத்தின் பெயர் பலகை, தபால் பெட்டிகள், பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் பெயர் பலகை, விமானநிலையத்தின் வெளியே அறிவிப்பு பலகை ஆகியவற்றில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகள் கருப்பு மையினால் அழிக்கப்பட்டிருந்தது. திருச்சியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தி எழுத்துகளை அழித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தி எதிர்ப்பாளர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என கருதி விசாரித்து வருகின்றனர். மேலும் மாநகர பகுதியில் ஆங்காங்ேக பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ரெயிலிலும் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டிருப்பது நேற்று தெரியவந்தது.

2 full

மன்னார்குடியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதி என்ற ஊருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பகத் கீ கோதியில் இருந்து மன்னார்குடி வந்த பின் பராமரிப்பு பணிக்காக திருச்சி வரும் போது சிறப்பு பயணிகள் ரெயிலாக இயக்கப்படும். இந்த ரெயில் நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்த போது அதில் உள்ள பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துகள் கருப்பு மையினால் அழிக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் நேற்று காலை ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தெரியவந்தது. மேலும் ஜங்ஷன் யார்டில் ரெயில் பராமரிப்பு பணிக்கு சென்ற போது அங்கிருந்த ஊழியர்கள் கண்டனர்.

இதற்கிடையில் திருச்சி ஜங்ஷனில் நடைபாதை மேம்பாலத்தில் பார்சல் அலுவலகம் நுழைவு வாயில் பகுதியில் இருந்து படிக்கட்டுகள் ஏறி நடைமேடைகளுக்கு செல்லும் பாதையில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகை மற்றும் அதே நடைபாதை மேம்பாலத்தில் 6,7-வது நடைமேடைக்கு இறங்கும் இடத்தில் உள்ள பலகையிலும் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். இந்திக்கு எதிராக நூதன முறையில் மத்திய அரசின் அலுவலகங்கள், ரெயில் நிலையம் ஆகியவற்றில் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 half

Leave A Reply

Your email address will not be published.