ரயிலில் இருந்து தவறி விழுந்த என்ஜினியர் பலி

0
1

தூத்துக்குடி மாவட்டம் மாரமங்கலம் அருகே தளவாய்புரம் மேலத்தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியனின் மகன் ராமச்சந்திரன் (வயது 21). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்திருந்தார். ராமச்சந்திரனின் அண்ணன் செந்தில்குமார் (31). இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ளார். இருவரும் கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை தேடி செல்ல திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக ராமச்சந்திரனும், அவரது அண்ணன் செந்தில்குமாரும் தூத்துக்குடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் விருத்தாசலத்திற்கு முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து பயணம் செய்தனர். ரெயிலில் முன்பதிவில்லா பெட்டியில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் படிக்கட்டில் இருவரும் ஆளுக்கு ஒருபுறம் தனித்தனியாக அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.

தவறி கீழே விழுந்தார்

2

இந்த நிலையில் ரெயில் நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி அருகே பூங்குடி பக்கம் வந்து கொண்டிருந்தது. அப்போது ராமச்சந்திரன் ஓடும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனை கண்ட சக பயணிகள் சத்தம் எழுப்பினர். இந்த நிலையில் ரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தது. அப்போது செந்தில்குமார் தனது தம்பியின் பெயரை கூறி அழைத்துள்ளார். ஆனால் அவர் இல்லாததால் செந்தில்குமார் சந்தேகமடைந்தார். அங்கிருந்த பயணிகளிடம் அவர் கேட்டபோது, கீழே விழுந்த பயணியின் அடையாளத்தை அவர்கள் கூறினர்.

4

இதையடுத்து ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தது தனது தம்பி ராமச்சந்திரன் தான் என அவருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஜங்ஷன் ரெயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை முதல் பூங்குடி அருகே ராமச்சந்திரனை தேடினர். அப்போது தண்டவாளம் அருகே தலையில் பலத்த காயங்களுடன் ராமச்சந்திரன் பிணமாக கிடந்தார். அவரது உடலை பார்த்து அண்ணன் செந்தில்குமார் கதறி அழுதார்.

பிரேத பரிசோதனை

பிணமாக கிடந்த ராமச்சந்திரனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை முடிந்ததும் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ஜங்ஷன் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த வேலை தேடி சென்றவர் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.