போதை மறுவாழ்வு மையத்தில் இறந்தவரின் உடல் மீண்டும் பரிசோதனை

0

திருச்சி கே.கே.நகர் அன்பழகன் தெருவில், ‘லைப் அண்ட் கேர் சென்டர்’ என்ற பெயரில் போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து வந்து 25 பேர் இங்கு சிகிச்சை பெற்று வந்தனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை அடுத்த கண்டமங்கலத்தை சேர்ந்த போலீஸ்காரர் தமிழ்ச்செல்வன் (வயது 34) என்பவர், மது போதைக்கு அடிமையானதால், அவரால் பணிக்கு சரிவர செல்லமுடியவில்லை. இதனால், பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

போதை பழக்கத்தை மறந்து மீண்டும் பணியில் சேர முடிவு செய்த தமிழ்ச்செல்வன் திருச்சி கே.கே.நகரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சில நாட்களுக்கு முன்பு சேர்ந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த தமிழ்ச்செல்வன் கடந்த 1-ந் தேதி இறந்து விட்டதாக காட்டுமன்னார் கோவிலில் உள்ள பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு மையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

‌சந்தா 1

அதாவது, சிகிச்சைக்காக மாத்திரைகள் கொடுக்கப்பட்டபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்றும், உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. உடனடியாக உறவினர்கள், அவரது உடலை பெற்றுச்சென்று சொந்த ஊரில் அடக்கம் செய்தனர்.

சந்தா 2

நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வனின் உடைமைகளை எடுத்து செல்வதற்காக திருச்சி போதை மறுவாழ்வு மையத்திற்கு உறவினர்கள் சிலர் வந்தனர். அப்போது மையத்தில் சிகிச்சை பெற்ற ஒருவர், தமிழ்ச்செல்வனை அடித்து கொன்று விட்டதாக கூறியுள்ளார். அதைகேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக திருச்சி கே.கே.நகரில் போலீசில் உறவினர்கள் புகார் கொடுத்தனர். தமிழ்ச்செல்வன் சாவில் சந்தேகம் இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் போதை மறுவாழ்வு மையத்திற்கு சென்றனர். அங்கு சிலர் கை, கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு கிடந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சங்கிலிகள், கயிறுகள் அகற்றப்பட்டன. அம்மையம் அரசின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. .

புதைக்கப்பட்ட போலீஸ்காரர் தமிழ்ச்செல்வன் உடலை தோண்டி எடுக்க திருச்சி கே.கே.நகர் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்பேரில் அவர்கள் காட்டுமன்னார் கோவில் வந்து, தாசில்தார் தமிழ்செல்வன் மற்றும் காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் ஆகியோரை சந்தித்து பிரேத பரிசோதனை செய்ய உள்ள தகவலை தெரிவித்தனர்.

இதையடுத்து தாசில்தார் முன்னிலையில் போலீஸ்காரர் தமிழ்ச்செல்வனின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி உடலை வெளியே எடுத்தனர். தொடர்ந்து அதே இடத்தில் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் உடல் அதே பகுதியில் புதைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.