சுய உதவிக்குழு தலைவியின் மோசடியால் விஷம் குடித்த தம்பதி

0
Business trichy

திருச்சி அருகே தம்பதி விஷம் குடித்ததில் மனைவி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக அவர்களிடம் பணமோசடியில் ஈடுபட்ட மகளிர் சுய உதவிக்குழு தலைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அப்பகுதியில் உள்ள இரும்பு பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி (வயது 42). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்பவர் அந்தப் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வந்தார். ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் லட்சுமிக்கும், பூங்கொடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் அவருடைய குழுவில் லட்சுமி உறுப்பினராக இருந்தார்.

  

இதனால் பூங்கொடி, குழுவில் பணம் வாங்கி தருவதாக லட்சுமியிடம் கூறியுள்ளார். அதற்கு லட்சுமி தனக்கு தற்போது பணம் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் பூங்கொடி அவரை விடவில்லை. இந்நிலையில் தனக்கு பணம் தேவைப்படுவதால், லட்சுமி பெயரில் குழுவில் பணம் வாங்கி தருமாறும், அதனை தானே கட்டி விடுவதாகவும், லட்சுமியிடம் பூங்கொடி வலியுறுத்தியுள்ளார்.

இதனால் லட்சுமி, அவருடைய கணவர் பாஸ்கர் ஆகியோர் இணைந்து குழுவில் இருந்து சுமார் ரூ.1½ லட்சம் பெற்று பூங்கொடிக்கு கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் ஓரிரு வாரங்கள் மட்டுமே பணம் கட்டிய பூங்கொடி, பின்னர் பணம் கட்ட மறுத்துள்ளார். இதனால் குழு நிறுவன அதிகாரிகள், லட்சுமியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து லட்சுமி, பூங்கொடியிடம் பலமுறை சென்று பணம் கட்டுமாறு வலியுறுத்தி உள்ளார். ஆனால் பூங்கொடி அதற்கு மறுத்து, நீயே கட்டிக்கொள் என்று கூறியதாக தெரிகிறது.

ஒருபுறம் பூங்கொடி பணம் கட்ட மறுத்ததாலும், மறுபுறம் குழு நிறுவன அதிகாரிகள் லட்சுமியிடம் பணம் கட்ட வலியுறுத்தி மிரட்டியதாலும் லட்சுமியும், பாஸ்கரும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டனர். இந்நிலையில் கடந்த 28-ந் தேதி பூங்கொடி வீட்டை காலி செய்துவிட்டு தலைமறை வானார். இதனால் கடந்த 31-ந் தேதி வீட்டில் இருந்த லட்சுமியும், பாஸ்கரும் விஷம் குடித்தனர். அவர்களுடைய நடவடிக்கைகள் மீது சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர், அவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது விஷம் குடித்தது பற்றி லட்சுமி கூறியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் லட்சுமியையும், பாஸ்கரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட லட்சுமி, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். கவலைக் கிடமான நிலையில் உள்ள பாஸ்கருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பூங்கொடியை தேடி வருகின்றனர். மேலும் விசாரணையில், பூங்கொடி அப்பகுதியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட குழுவுக்கு தலைவியாக இருந்து, பலருடைய பெயரில் பணத்தை பெற்றுக்கொண்டு இதுவரை ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்துள்ளதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதற்கிடையே மோசடியில் ஈடுபட்ட பூங்கொடியை கைது செய்யும் வரை லட்சுமியின் உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் அரசு மருத்துவமனையில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுபோன்று சிறிய நிதி நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுவினரில் தொழில் செய்பவர்களுக்கு பணம் அளிக்கிறோம் என்ற பெயரில் முறையான ஆவணங்கள், விசாரணைகளின்றி பணம் அளித்து வருவதால் இது போன்ற மோசடிக்கு வழிவகை செய்கிறது என்று அப்பகுதியினர் கூறினர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.