திருச்சியில் நேற்று நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் 48 சதவீதம் பங்கேற்பு

திருச்சி மாவட்டத்தில் நேற்று 13 மையங்களில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்திய குடிமைப்பணிகளுக்கான (சிவில் சர்வீஸ்) முதல்நிலை தேர்வு நடந்தது. இந்த தேர்வினை எழுதுவதற்காக திருச்சி மாவட்டத்தில் 5,627 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர்.
இவர்களில் 2,550 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இது 48.41 சதவீதம் ஆகும். 2,717 பேர் அதாவது 51.59 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுத வந்தவர்களை விட வராதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

துணை கலெக்டர் நிலையில் ஒரு அதிகாரி, துணை வட்டாட்சியர், இளநிலை வருவாய் ஆய்வாளர், ஆயுதம் ஏந்திய போலீஸ்காரர் ஆகியோர் கண்காணிப்பில் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டன.

போலீசாரின் கடுமையான சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் தேர்வு கூட அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறைகளில் 24 பேருக்கு 2 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு, திருச்சி பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரி மற்றும் திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
