உயிர் வளர்ப்போம்-23

கதை வழி மருத்துவம் (அருளமுதம் எனும் அருமருந்து)

0

அக்கு யோகா எனும் ஞான மருத்துவம்

அதுவரை அங்கு அமர்ந்திருந்த முதியவருடைய உடல் பிரகாசமாக ஒளிவீச தொடங்கியது. அங்கு ஒளிவெள்ளத்தில் முதியவரின் உருவம் மறைந்து தாடி மற்றும் ஜடாமுடியுடன் எழில் மிகுந்த ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைப் தனது ஆசான் போகர் பெருமான் என அறிந்து கொண்ட யோகியார் “என் அன்பிற்கு இனிய ஆசானே, போகர் பெருமானே வருக! வருக!” என யோகியார் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

இதனை கண்டு மகிழ்வுற்ற போகர் பெருமான் அங்கிருந்த அனைவருக்கும் இறையருள் கிடைக்கட்டும் என வாழ்த்து கூறினார். மேலும் அக்கு யோகா எனும் இந்த ஞான மருத்துவம் எட்டு திக்கும் தழைத்து ஓங்கட்டும் எனவும் நல்லாசி கூறி மறைந்தார். இதனை அதிசயத்துடன் கண்ணுற்ற அனைவரும் யோகியரிடம் வந்திருந்த அந்த மகா புருஷர் யார் என வினவினர். அதற்கு யோகியார் “அவர் பதினெண் சித்தர்களுள் ஒருவரான போகர் பெருமான். அவரே என்னுடைய ஆசான் ஆவார்” என பதிலுரைத்தார். இதனைக் கேட்டு மகிழ்வுற்ற மன்னன் யோகியரிடம் “அய்யனே, போகர் பெருமானின் வருகையால் இந்த பூமி புண்ணிய பூமியாக மாறிவிட்டது.

இந்த பெரும்பேற்றை  நம் நாட்டிற்கு கிடைக்க செய்த தங்களுக்கு கோடான கோடி நன்றிகள். போகர் பெருமான்  வைத்த சோதனையின் உட்பொருளை அறிய ஆவலாக உள்ளோம். தயை கூர்ந்து அந்த 96 கை பெருவிரல் அங்குஷ்டங்களின் தாத்பரியத்தை விளக்கி அருளுங்கள்.” என பணிவுடன் வேண்டினான்.

இதனை கேட்ட யோகியார் மகிழ்ச்சியுடன் விளக்கத் தொடங்கினார்.

ஒரு மனிதனுடைய உடலிலுள்ள பாதிப்புகளை நாம் தெளிவாக அறிந்துகொள்ள மனித உடலைப் பற்றிய தெளிவான புரிதல் அவசியமாகும். இந்த உடலில் பொருந்தி இருக்கக்கூடிய அடிப்படை தத்துவங்களை நாம் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய இந்த உடலானது நம்முடைய கட்டைவிரலால் 96 விரற்கடை அளவு நீண்டிருக்கின்றது. இந்த அடிப்படையினை நவீன அளவீட்டு முறைகள் கொண்டு அளந்து பார்க்கின் தவறான விடைக்கு வழிவகுக்கும். உயிரற்ற பொருட்களை அளப்பதற்கு வேண்டுமானால் நவீன அளவீட்டு முறைகள் துல்லியமான விடைகளை கொடுக்கலாம். ஆனால் உயிருள்ள ஒரு மனித உடலில் அம்மனிதன் தன்னுடைய கட்டைவிரலின் அகலத்தால் தன்னுடைய பாதம் முதல் உச்சி வரை அளந்து பார்க்கும் பொழுது நிச்சயமாக 96 அங்குஷ்டங்கள் இருக்கும். இது ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய அனுபவ ஞானத்தால் அளந்து பார்த்து உணரவேண்டிய மெய் ஞானம் ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டே உடலில் அடிப்படையில் 96 தத்துவங்கள் பொருந்தி நிற்பதை சித்தர் பெருமக்கள் தன்னுடைய மெய்ஞானத்தால் உணர்ந்து உலகுக்கு உரைத்தனர்.  அந்த 96 தத்துவங்களை ஒவ்வொன்றாக காணலாம்.

 

  1. உயிர்:

நம்முடைய உடலில் முதல் தத்துவமாக விளங்குவது அறிவு. இவ்வறிவினை பயன்படுத்தியே யோகியரும் ஞானியரும் தன்னை அறிந்து கொள்கிறார்கள். இந்த அறிவானது நமது உடலையும் உயிரையும் கடந்து அனைத்தையும் தானாக அறியக்கூடிய வல்லமை உடையது. தன்னை அறிதல் என்பது தன் அறிவை அறிதல் ஆகும்.  உலகில் பல்வேறு வழிபாடுகள் யோகம், தியானம் என விளங்கக்கூடிய பல்வேறு வழிமுறைகளும், இந்த அறிவை அறிவதற்கான அடிப்படை பயிற்சிகளே ஆகும். மதங்களும் அடிப்படையில் இந்த பேரறிவையே இறைவன் என பகர்கின்றன. இதனாலேயே இறைவனை அனைத்தும் அறிபவன், அறிவிற்கு அறிவானவன் என எல்லா மதங்களும் எடுத்து இயம்புகின்றன.

 

இருவினைகள்

நாம் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் வினை ஆகும்.

  1. நல்வினை:

மனதில் தூய்மையான எண்ணங்களைக் கொண்டு நல்ல நோக்கத்தோடு செய்யக்கூடிய செயல்கள் யாவும் நல்வினை ஆகும். இது நல்ல ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் ஆரோக்கியமாகவும் நிம்மதியுடனும் வாழ விரும்பினால் நல்வினைகளை அதிகம் செய்து ஒழுக வேண்டும்.

  1. தீவினை:

மனதில் தூய்மையற்ற எண்ணங்களைக் கொண்டு தீய நோக்கத்திற்காக செய்யக்கூடிய செயல்கள் யாவும் தீவினை ஆகும். இது ஒருவருக்கு உடலிலும் மனதிலும் நோயை உண்டாக்கும். தீவினையால் உண்டான நோய்களை ஒருவர் நல்வினைகளை செய்தும், தீவினைகளுக்கு இறைவனிடம் மன்றாடி மன்னிப்பு பெற்றும் தீர்த்துக்கொள்ளலாம்.

 

மும்மலம்:

நம்முடைய உடலையும் மனதையும் பிடித்து இருக்கக்கூடிய மூன்று பெரும் மலங்கள் ஆணவம், கன்மம் மற்றும் மாயை ஆகியனவாகும்

  1. ஆணவம்:

ஆணவம் என்பது நான் என்கின்ற பிடிப்பு, என்னால் எதையும் செய்துவிட முடியும் என்கின்ற இறுமாப்பு ஆகும். இது ஒருவருடைய உடலில் தற்பெருமையை அதிகரித்து, சுயநலத்தை வளர்த்து தீராத இருதய நோய்களை தரவல்லது. ஆணவத்தை ஒழித்து அறவழியில் வாழ்வது நம் ஆரோக்கியத்திற்கு வித்திடும்.

  1. கன்மம்:

கன்மம் எனப்படுவது நம்மைப் பற்றி தொடர்ந்து வருகின்ற நமது முந்தைய செயல்களில் தொடர்ச்சியாகும். இதனை கர்மா என்றும் அழைப்பர். நமது முந்தைய செயல்களின் விளைவால் நம்முடைய உடலில் ஒரு நோய் தோன்றி இருந்தால் அதனை குறிப்பிட்ட காலம் வரை அனுபவித்து கழித்து விடுதல் வேண்டும். மீண்டும் அந்த நோய் தொடராமல் இருக்க இனி செய்யக்கூடிய கர்மங்களை நேர்வழியில் அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

  1. மாயை:

மாயை என்பது இறைவனின் விளையாட்டு ஆகும். நாம் நமது ஐம்புலன்களின் மூலமாக உணருகின்ற அனைத்துமே மாயையாகும். இருப்பதை இல்லாமலாக்கும், இல்லாததை இருப்பது போல் காட்டிடவும் வலியது மாயை. மாயையின்  பீடிப்பால் நோய் உண்டானது போன்ற பிம்பத்தை சிலவேளைகளில் நாம் உணர நேரிடலாம். மாயையின் விளைவால் உண்டான நோய்களுக்கு இறைவழிபாடு ஒன்றே உற்ற மருந்தாக அமையும்.

 

குணங்கள் 3 : ராஜஸம், தாமஸம், ஸாத்வீகம்.

மலங்கள் 3 :

ஆணவம், கன்மம், மாயை.

பிணிகள் 3 :

வாதம், பித்தம், சிலேத்துமம்.

ஏடனை 3 :

லோக ஏடனை, தார ஏடனை, புத்திர ஏடனை.

ஆதாரங்கள் 6 :

மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா.

அவத்தைகள் 5 :

சாக்கிரம்(நனவு), சொப்பனம்(கனவு), சுழுத்தி(உறக்கம்), துரியம்(நிஷ்டை), துரியாதீதம்(உயிர்ப்படக்கம்)

தாதுக்கள் 7:

இரசம், இரத்தம், மாமிசம், மேதஸ், அஸ்தி, மச்சை, சுக்கிலம், சுரோணிதம்.

பஞ்ச கன்மேந்திரியங்கள் 5:

வாக்கு(வாய்), பாணி(கை), பாதம்(கால்), பாயுரு(மலவாய்), உபஸ்தம்(கருவாய்)

பஞ்ச தன் மாத்திரைகள் 5:

சுவை(ரசம்), ஒளி(ரூபம்), ஊறு(ஸ்பரிசம்), ஓசை(சப்தம்), நாற்றம்(கந்தம்)

பஞ்ச கோசங்கள் 5:

அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்.

மூன்று மண்டலங்கள் 3:

அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம்.

ராகங்கள் 8

காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம், இடம்பம், அகங்காரம்

தச நாடிகள் 10:

இடை கலை (இடப்பக்க நரம்பு), பிங்கலை (வலப்பக்க நரம்பு) , சுழுமுனை (நடு நரம்பு), சிகுவை (உள்நாக்கு நரம்பு), புருடன் (வலக்கண் நரம்பு), காந்தாரி (இடக்கண் நரம்பு), அத்தி (வலச்செவி நரம்பு), அலம்புடை (இடச்செவி நரம்பு), சங்கினி (கருவாய் நரம்பு), குகு (மலவாய் நரம்பு).

தச வாயுக்கள் 10

பிராணன் – உயிர்க்காற்று, அபாணன் – மலக்காற்று, வியானன் – தொழிற்காற்று, உதானன் – ஒலிக்காற்று, சமானன் – நிரவுக்காற்று, நாகன் – விழிக்காற்று, கூர்மன் – இமைக்காற்று, கிருகரன் -தும்மற் ககாற்று, தேவதத்தன் – கொட்டாவிக்காற்று, தனஞ்செயன் – விக்கல் காற்று.

உடலின் தத்துவங்கள் 10

அறிவு -1, இருவினை (நல்வினை, தீவினை)- 2, மூவாசைகள் (மண், பொன், பெண்) – 3, அந்தக் கரணங்கள் (மனம், புத்தி, சித்தம், ஆங்காரம்) – 4,

பஞ்ச பூதங்கள் 5

பிருதிவி -(பூமி-நிலம்-மண்), அப்பு -(ஜலம்-நீர்-புனல்), தேயு-(அக்னி-நெருப்பு – அனல்), வாயு-(கால்-காற்று-கனல்), ஆகாயம்-(வெளி-வானம்-விசும்பு)

பஞ்ச ஞானேந்திரியங்கள் 5

மெய், வாய், கண், மூக்கு, செவி.

ஆக மொத்தம் 96

 

Leave A Reply

Your email address will not be published.