சொந்த செலவில் தொகுதிக்கு அனைத்தையும் செய்வேன் – திருச்சியில் பாரிவேந்தர் பேச்சு

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 300 மாணவர்களுக்கு SRM பல்கலைகழகத்தில் இலவச உயர்கல்வி வழங்கப்படும் என பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.
திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள SRM ஹோட்டலில் இந்திய ஜனநாயக கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் கூறும்போது தேர்தல் பிரச்சாரத்தில் தான் வழங்கிய வாக்குறுதியின்படி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 50 பேர் வீதம் மொத்தம் 300 பேருக்கு இலவச உயர்கல்வி SRM பல்கலைகழகத்தில் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதில் சேர விரும்பும் மாணவர்கள் இந்திய ஜனநாயக கட்சியின் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து பயன்பெறும்படி கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் உள்ள நதிகளை முதலில் இணைக்க வேண்டும், ஆறுகளில் தடுப்பணைகளும், குளங்களை ஆழப்படுத்தியும் நீரை பாதுகாக்க வேண்டும் கடலில் வீணாக கலக்கும் நீரை தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆழ்குழாய் கிணறு மூலம் தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

பெரம்பலூர் தொகுதி பிற்படுத்தப்ட்ட தொகுதி என அனைவரிடமும் எண்ணம் உள்ளது அதனை மாற்றி மத்திய அரசிடம் தொகுதியின் மக்களுக்கான தேவைகளை கேட்டுப்பெற்று முதன்மை தொகுதியாக மாற்ற முயற்சி செய்வேன் என்றும் கூறினார்.
உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணியில் இணைந்து செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
தான் வெற்றி பெறுவதற்கு உதயசூரியன் சின்னமும் தோழமைக்கட்சிகளின் வழிகாட்டுதலும் முக்கிய காரணம் என்றார்.
பெரம்பலூருக்கு கரூர், நாமக்கல், துறையூர் வழியாக அரியலூரை இணைக்கும் வகையில் ரெயில் பாதை அமைத்து பெரம்லூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கனவான ரெயில் திட்டத்தை நிறைவேற்றுவது தனது முதல் குறிக்கோள் எனவும் தெரிவித்தார்.
