எளிதாக மக்களை சென்றடைய தொலைக்காட்சியே சிறந்த வழி

0
Business trichy

விஜய் டிவியில் தொடராக வந்து தமிழகம் முழுவதும் பிரபலமான “லொள்ளு சபா” என்கிற தொடர் மூலமாக மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் லொள்ளு சபா பழனியப்பன். தன்னுடைய நடிப்பு திறமையின் மூலம் தொடர்ந்து, தொலைக்காட்சி தொடர்கள், சினிமாவில் குணச்சித்திர கதாப்பாத்திரம் என கலைத்துறையில் படிப்படியாக முன்னேறியவர். இந்நிலையில், “நம்ம திருச்சி” சார்பாக லொள்ளுசபா பழனியப்பனிடம் எடுக்கப்பட்ட சிறப்பு நேர்காணல்,

உங்களைப் பற்றி அறிமுகம்?

என் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ஒழுகினசேரி. மறைந்த நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் ஊரில் பிறந்தேன். என்னை நடிகராக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ராம் பாலா. “சின்ன பாப்பா பெரிய பாப்பா” என்கிற தொடரில் நான் சிறிய வேடத்தில் நடித்தேன். அப்போது, அதன் துணை இயக்குனராக இருந்தவர் ராம்பாலா. அதன் மூலமாகவே எனக்கு லொள்ளு சபாவில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

loan point

லொள்ளு சபாவின் அனுபவங்கள்?

nammalvar

லொள்ளு சபா போன்ற முழுமையான நகைச்சுவை தொடரில் நடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. ராம் பாலா நடித்து காட்டுவார், அதை அப்படியே நடித்து விடுவேன். தினம் தினம் கற்றுக்கொண்டே இருந்தேன். அந்த சூழலே என்னை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது. என்னுடைய நடிப்பை பார்த்து பல நேரங்களில் இயக்குனர் ராம்பாலா மற்றும் நடிகர் சந்தானம் பாராட்டியுள்ளனர். என்னுடைய இந்த அளவிற்கான வளர்ச்சிக்கு ராம்பாலாவே காரணம் அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொலைக்காட்சி- சினிமா வித்தியாசம்?

சினிமாவில் என்னை அறிமுகம் செய்தவர் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர். அவர் இயக்கிய “தோஸ்த்” திரைப்படம் மூலமாகவே நான் சினிமாவில் அடியெடுத்து வைத்தேன். சினிமாவில் பெரிய இயக்குனர்களின் படத்திலோ அல்லது பெரிய ஹீரோக்களின் படத்திலோ நடித்தால் தான் நாம் மக்களிடையே சென்றடைய முடியும். ஆனால் தொலைக்காட்சி தொடர்களில் அப்படி இல்லை.

சிறிய தொடரில் நடித்தாலே போதும் மக்களிடைம் எளிதில் சென்று விடலாம்.
சினிமாவில் ஒரு நாளுக்கு ஒரு சீன் அல்லது இரண்டு சீன்கள்தான் எடுப்பார்கள். ஆனால் சீரியலில் 10 சீன்கள் எடுப்பார்கள். காஸ்ட்யூம்ஸ் மாற்றி மாற்றி நடிக்க வேண்டும். ஆகையால், நடிப்பு திறன் மேம்படும்.

நழுவவிட்ட வாய்ப்புகள்?

இது நடிகர்களுக்கே உண்டான சாபம்! வாய்ப்புகளே இல்லாமல் வீட்டில் ஒரு வாரம் சும்மா இருப்போம். ஆனால், வாய்ப்புகள் வந்தால் ஒரேயடியாக வரும். அப்படி வந்து நழுவ விட்ட வாய்ப்புகள் ஏராளம். “பரட்டை என்கிற அழகுசுந்தரம்,” “காதல்” போன்ற திரைப்படங்கள் மற்றும் நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் எனக்கு வாய்ப்புக்கள் வந்தது. தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததால் அந்த வாய்ப்புகள் நழுவிப் போய்விட்டது

நடிகர்களுக்குள் சண்டைகள் வருமா?

web designer

அவ்வப்போது, ஒரிரு சண்டைகள் வந்துள்ளது. தற்போது அவையெல்லாம் மாறிவிட்டது. டேய் மச்சி அங்கா பாலா சார் ஷீட்டிங்டா, இங்க சங்கர் சார் ஷீட்டிங்டா போலாமா? என்று சக நடிகர்கள் உதவி செய்கின்றார்கள். சார் இந்த கேரக்டருக்கு பழனியப்பன் சரியாக இருப்பார்னு இயக்குனரிடம் சிபாரிசு செய்கின்றார்கள். இது ஆரோக்கியமான விஷயம்.

பணம் தராமல் ஏமாற்றியுள்ளார்களா?

நிறைய நபர்கள் ஏமாற்றியுள்ளார்கள். ஆரம்ப காலத்தில் நடித்து முடித்ததும் அலுவலகத்தில் வந்து வாங்கிக்கொள்ள சொல்வார்கள். அலுவலகத்திற்கு சென்றால் பூட்டிக் கிடக்கும். பக்கத்தில் விசாரித்தால் அலுவலகத்தை நேற்றே காலி செய்து விட்டார்கள் என பதில் வரும். இப்படி நான் ஏமாந்த தொகையே ஒரு லட்சத்திற்கும் மேல் இருக்கும். நான் மட்டும் ஏமாறவில்லை நடிகர்கள் செந்தில், மயில்சாமி போன்றவர்களும் ஆரம்ப காலத்தில் ஏமாந்துள்ளார்கள். இப்போது அப்படி இல்லை. நடிப்பு ஏற்ற ஊதியம் சரியாக கிடைத்து விடுகிறது.

சினிமாவில் எதை நம்ப கூடாது?

சினிமாவில் உழைப்பை நம்ப வேண்டும். முயற்சியினை நம்ப வேண்டும். “நான் சினிமா வாய்ப்பினை தருகிறேன் பணம் கொடுங்கள்” என்று கூறும் ஆசாமிகளை ஒருபோதும் நம்பக்கூடாது.

பெரிய சாதனையாக நீங்கள் நினைப்பது?

சார், நீங்கள் தானே அந்த தொடரில் நடிக்கிறீங்க? ஒரு ‘செல்பி’ சார் என்று என்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். இதுவே எனது மிக பெரிய சாதனை.

உங்களுக்கு சினிமாத்துறையில் பிடித்தவர்கள்?

எனக்கு சினிமாவில் பிடித்தவர்கள் இருவர். நடிகர் கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா. ஒரு முறை கமல் சார் அலுவலகத்திற்கு சென்றேன். நீங்கள் தான் லொள்ளுசபா நடிகர்? என்று என்னை சரியாக அடையாளம் கண்டார். அவர் என்னை அடையாளம் கண்டது. என் வாழ்வில் மறக்கவே முடியாது. அதேபோல் சென்ற ஆண்டு இசைஞானி இளையராஜா அவர்களை, அவரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினேன். இவ்வருடம் எனக்கு பல வாய்ப்புகள் வந்துள்ளது.

எதிர்கால திட்டம்?

திட்டம் எல்லாம் ஒன்றும் கிடையாது. நல்ல படங்களில் நடிக்கவேண்டும். நன்றாக பணம் கிடைத்தால் ஏழைக்குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். இல்லையெனில் மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல் இருந்துவிட்டு போக வேண்டும் என்று பேட்டியை முடித்தார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.