திருச்சியின் 20வருட பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எப்போது?

திருச்சி மாநகராட்சி தற்போது 65 வார்டுகளை உள்ளடக்கி செயல்படுகிறது. மாநகரில் சுகாதாரம் பேனுவதற்கு அங்குள்ள குப்பைகளை அகற்ற வேண்டிய முக்கிய பணி மாநகராட்சியை சார்ந்தது. இந்த பணியை மேற்கொள்ள மாநகராட்சி மூலம் 4 வகையான வாகனங்கள் பயன்படுத்தி துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பைகள் அகற்றப்படுகிறது.
அப்படி அகற்றி வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படும் குப்பைகள் 1967ம் ஆண்டு முதல் நகராட்சியாக இருந்த காலத்திலிருந்தே அரியமங்கலத்தில் 47 ஏக்கர் பரப்பளவில் அமையப்பெற்ற மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இப்படி தினசரி கொட்டப்படும் குப்பைகள் சுமார் 436டன்னுக்கும் மேல் இருக்கும். அப்படி கொட்டப்படும் குப்பைகளில் ஒரு பகுதி இயற்கை உரமாக தயாரிக்கின்றனர்.
இதற்காக 31 இடங்களில் இதுவரை நுண்உர செயலாக்க மையம் ஏற்படுத்தப்பட்டு 155டன் வரை மட்கும் குப்பைகள் உரமாக மறுசுழற்சி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வீடுகளில்,நிறுவனங்களிலேயே மட்கும் குப்பைகளை உரமாக்கும் திட்டத்தின் மூலம் 43டன் வரை உரமாக மாற்றப்படுகிறது. அதே போல் மட்காத குப்பைகள் நாள் ஒன்றுக்கு 50டன் வரை சேகரித்து விற்பனை செய்யப்பட்டு விடுகிறது. இதனால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 225 முதல் 250டன் வரை மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதனால் மீதமுள்ள கட்டிட கழிவுகள், தலையணை, பெட்சீட், பாய், துணிவகைகள், சிறிய பிளாஸ்டிக் வகைகள் போன்றவகைள் தான் அரியமங்கலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இவைகளை சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு மாற்று எரிபொருளாக பயன்படுத்திட அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கென தனி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் விரைவில் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு தேக்கி வைக்காத சூழல் ஏற்படும். ஆனால் ஏற்கனவே குப்பைகிடங்கில் தேங்கியிருக்கும் குப்பைகள் (7.59லட்சம் கனமீட்டர்) 5 லட்சம் டன்னிற்கும் மேல் இருக்கும். இவற்றின் வயதோ சுமார் 25 ஆண்டுகள் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படி தேங்கியிருக்கும் குப்பைகளில் அடிக்கடி தீ பிடிப்பது தொடர்கதையாகி உள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் தூர்நாற்றம், நிலத்தடிநீர் மாசுபட்டதால் போர்போடமுடியாத நிலை, தோல்நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்திட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன்
தெரிவித்ததாவது: குப்பை கிடங்கு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் திருச்சி மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 31 இடங்களில் உரம் செயலாக்க மையங்கள் அமைக்கப்பட்டு குப்பை அரியமங்கலம் கிடஙகுக்கு செல்வது தவிர்க்கப்பட்டுவருகிறது. அரியமங்கலத்தில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதன்படி பயோ-மைனிங் முறையில் அப்புறப்படுத்த ரூ.49 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்காக டெண்டர் விடப்பட்டுவிட்டது. தற்போது தனியார் நிறுவனம் ஒன்று இதனை செயல்படுத்த உள்ளது. இதற்காக 2 ஏக்கர் நிலம் அவர்களுக்கு ஒதுக்கி தந்துள்ளோம். தற்போது குப்பைகளை உலர வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு 18கோடி மதிப்பில் இயந்திரங்களை நிறுவ உள்ளனர். குப்பை கிடங்களில் 7.59லட்சம் கனமீட்டர் குப்பை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவைகளை தினமும் மூன்று ஷிப்ட்களாக பணியில் ஈடுபட்டு தினமும் 1500கனமீட்டர் குப்பைகளை மறுசுழற்சி செய்து இங்கிருந்து அப்புறப்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் இரண்டரை வருடத்திற்குள் இங்குள்ள குப்பைகள் அனைத்தும் மறுசுழற்சி செய்து அப்புறப்படுத்தப்பட்டு விடும். 3 மாதங்களில் இதற்கான துவக்க பணிகள் முடிக்கப்பட்டு குப்பையை அகற்றும் பணி துவங்கும். இதனால் 47 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் கட்டிடங்கள் போக 40 ஏக்கர் நிலம் மாநகராட்சியின் பயன்பாட்டுக்கு கிடைக்கும். அதன்பின்பு இந்த இடத்தில் மிகப்பெரிய பொழுது போக்கு பூங்கா அமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
source: dinakaran.com
