அறிவோம் தொல்லியல்-16 பயணங்கள் முடிவதில்லை…

யானைகளை பிடிப்பதற்கு ஓவியத்தின் மூலம் குறிப்பிடப்படும் முறைகள்
முதலாவது முறை காடுகளில் யானைகள் வழக்கமாக செல்லும் தடங்களில் ஆழமான பெரிய குழிகளைத் தோண்டி, மூங்கில் படல் பரப்பி குழிகளை மறைத்து, மேலே இலைகளோடு மண்ணை பரப்பி வைத்து யானைகளுக்கு பிடித்த உணவுகளை வைத்து, காத்திருந்து, அது உண்ணவரும் வழித்தடத்தில் குழியில் விழச்செய்கின்றனர்,அந்தக் குழியை இலக்கியங்கள் பயம்பு என்று குறிப்பிடுகிறது. இவ்வாறு வெட்டப்படும் குழியில் விழுந்த யானை நீண்ட கொம்புகளும் உடல் வலிமையும் வாய்க்கப்பெற்ற பெரிய யானையாக இருப்பின் அது அந்தக் குழியை கொம்பால் குத்தி மேடாக்கி வெளியேறுவது உண்டு என்பதனை,
மாப் பயம்பின் பொறை போற்றாது,

நீடு குழி அகப் பட்ட
பீடு உடைய எறுழ் முன்பின்
கோடு முற்றிய கொல் களிறு,
நிலை கலங்கக் குழி கொன்று,
கிளை புகலத் தலைக்கூடி யாங்கு புறம் 17
என்று குறுங்கோழியூர் கிழார் பாடிய புறநானூற்றின் 17ஆம் பாடல் வரிகள் தெரிவிக்கின்றன. யானைகளைப் பிடிக்க வெட்டும் குழிகளை பயம்பு என்று இந்தப் பாடல் குறிப்பிடுகிறது.

குழியில் விழுந்த பெண் யானைகள் குழியை விட்டு வெளியேற இயலாததாய் தவிக்க நேரிடும் பொழுது அதன் துணை யானை அதனை குழியில் இருந்து மீட்க உதவிக்கு வருமாறு தனது கூட்டத்தை பயங்கரமாக பிளிறிக்கொண்டு அழைக்கும். குழியில் விழுந்த யானையின் குட்டி யானை பயந்து கூட்டத்தை விட்டும் பிரிந்து மேய்ச்சலுக்கு வந்த கன்றுகளுடன் ஊருக்குள் புகுந்த செய்தியை,

கயந்தலை மடப்பிடி பயம்பில் பட்டெனக்
களிறுவிளிப் படுத்த கம்பலை வெரீஇ,
ஒய்யென எந்த செவ்வாய்க் குழவி
தாதுஎரு மறுகின் மூதூர் ஆங்கண்
எருமை நல் ஆன் பெறுமுலை மாந்தும் 165
அகம் 165 ஆம் பாடல் வரிகள் தெரிவிக்கின்றன. கூட்டத்தை விட்டு பிரிந்த குட்டி யானை அனிறையோடு தங்கள் ஊரினை அடைந்து கன்று ஈன்ற எருமை இடம் பாலூட்ட செய்துள்ளனர் என்பதையும் இப்பாடல் வரிகள் தெரிவிக்கின்றன.
குழியில் வீழ்த்திபிடிக்கப்பட்ட காட்டுயானைகளை பாகன்களின் கட்டளைக்கு கீழ்படிய செய்ய சில காலம் பழகி நாட்டு யானைகள் ஆகிபின் அவற்றை பரிசுப் பொருளாக வழங்குவதற்கான வழக்கத்தை வேந்தர்களும் குறுநில மன்னர்களும் மேற்கொண்டிருந்தனர் என்பதனை,

திருவீழ் மார்பின் தென்னவன் மறவன் –
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறுவரை அல்லது,
வரைநிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
வள்வாய் அம்பின் கோடைப் பொருநன்- அகம் 13
யானைகளை பயம்பில் வீழ்த்திப் பிடிப்பது செலவு குறைவானது .முயற்சியும் அதிகம். தேவைப்படாத எளிய வழி குழியில் விழுந்த யானையை பழகிய யானையின் உதவியுடன் வெளியேற்றுவார். அதன் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த ஒருவன் சிறிது நேரம் அதனை அங்குசத்தால் குத்தியும் அடித்துத் துன்புறுத்துவான் இன்னொருவன் வந்து அவனை அடித்து துரத்திவிட்டு யானைக்கு கரும்பு தளிர் முதலானவற்றைத் தின்னக் கொடுப்பான். இது யானை அவனிடத்தில் நம்பிக்கை வைத்து அவன் சொற்படி நடக்க வழிவகுக்கும்.

யானை பிடிக்கும் இரண்டாவது முறை வாரி முறை
பயம்பில் பிடிக்கும் முறையிலும் வேறுபட்டதும் இன்னொரு யானை பிடி பிடிக்கும் முறை வாரி முறையாகும் இம்முறையினை கையாண்டு பல யானைகளில் ஒருசேர பிடிக்கலாம். இதற்கு பல யானைப்பாகன் துணையும் பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் ஒத்துழைப்பும் தேவை. பெரிய உயரமான தேக்கு மரங்கள் அடர்ந்த இடங்களில் கூட்டமாக வாழும். கூட்டங்களும் யானை அடைப்புக்குள் துரத்தி பின் பழகிய யானைகள் மீது இருந்து அவரின் கால்களுக்கு சுருக்கிட்டு பயிற்சி நிலையத்திற்கு கொண்டு செல்வார் இதற்கு மிகுந்த பொருட்செலவு முயற்சியும் தேவைப்படும். கர்நாடக ஹைதர் அலி, திப்பு சுல்தானும் இந்த முறையில்தான் பிடித்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழக எல்லைப்பகுதியிலிருக்கும், மறையூர் பாறை ஓவியம் சிறப்பு வாய்ந்தது. இங்கு முதன்முதலாக பாலைத்திணை தெய்வமான கொற்றவை குறித்த ஓவியம் வருகிறது! பாறை ஓவியத்தில் கொற்றவை இருப்பது அரிதான ஒன்று. இவ்வோவியத்தின் வயதை 5000 ஆண்டு என கணிக்கின்றனர். கொற்றவை ஓவியமருகே மான், விலங்குககள், நெற்பயிர் போன்றவை காட்டப்பட்டுள்ளது. இதேபோன்ற ஒரு தாழி ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்மொழி, தமிழரின் தொன்மை இதிலிருந்து நன்றாய் விளங்கும்.
குறியீடுகள் குறித்து அடுத்து காண்போம். அதன்பின் தமிழியின் தோற்றம், வளர்ச்சியை காண்போம்.
