ஆதிமகள் 17

காயத்ரியின் வீட்டிற்கு வந்த கரண், காயத்ரியை உள் வாங்கிய நொடியிலிருந்து தடுமாறினான். அவள் எதிரிலிருந்து அவள் பார்வையிலிருந்து தொலை தூரத்திற்கு சென்றுவிட பரிதவித்தான். தொலை தூரம் சென்றாலும் விடுபடாத மனச்சிக்கல் புரியாமல், அங்கிருந்து கடந்து விட அவனது எண்ணம் முனைப்பு காட்டியது தனது அம்மா விசாலியை எதிர்பார்த்து காத்திருந்தவனிடம் காயத்ரி கேட்டாள் ” உங்களது முழுப்பெயரே கரணா” எனக் கேட்டதும் தன்னிலை உணர்ந்த கரண், என்ன குழந்தைத்தனமான கேள்வி என உள்ளூர நினைத்துக் கொண்டு, அவளை பார்க்காமல் சிரித்தான். காயத்ரிக்கு குழப்பம் மேலிட்டது. என்ன கேட்டுவிட்டோம், எதற்கு சிரிக்கும் பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தவள், ” ஏன் சிரிக்கிறீங்க” என்றாள்.
“ஒன்றுமில்லை குழந்தைகளிடம் பேச வேண்டுமே என்பதற்காக, பெரியவர்கள் பெரும்பாலும் கேட்கும் கேள்வி உன் பெயரென்ன, உன் முழுப்பெயரென்ன, என்பதாகத்தான் இருக்கும். அதுதான் அதை நினைத்தேன் சிரித்தேன்” என்று சொன்னவன். தனது முழுப்பெயர் “மனோகரன்.” எனது தாத்தா பெயரான அதைச் சொல்லி கூப்பிட சங்கடப்பட்ட எனது அப்பாவும் அம்மாவும் கரண் என சுருக்கிவிட்டார்கள் என கூறினான்.
தன்னிடம் ஏதாவது கரண் கேட்பான் என காயத்ரி எதிர்பார்த்தாலும், அவளது எண்ணம் அமைதியிழந்து குறுகுறுவென அலைந்தது.

கரண் யோசித்தான். தன்னைப்பற்றி, தனது குடும்பம் பற்றி, காயத்ரிக்கு முழுமையாக தெரியும் போலிருக்கிறது. அதுதான் ஏதாவது பேச வேண்டுமே என அவளுக்கு விடை தெரிந்த கேள்வியை கேட்கிறாள் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டான். வெளியில் அமைதி இருந்தாலுமே, மனம் கூச்சலிட்டு நேரத்தை கடத்திக் கொண்டிருந்தது.
மனக்குழப்பத்துடன் கரண் ஒரு முடிவுக்கு வந்தான். இவளை பார்த்து தடுமாறியது. நிலை குலைந்தது, முழுதுமாய் நாம் சரணாகதி அடைந்தது, என எதுவுமே இவளுக்கே தெரியாமல் இவளிடமிருந்து நாம் மீள வேண்டுமானால், இவளை வலுக்கட்டாயமாக தவிர்ப்பதைத் தவிர்த்து யதார்த்த, சகஜ மனநிலைக்கு தான் மாறிக்கொள்வதைத் தவிர வேறு எந்த மந்திர தந்திரமும் பலிக்காது என தனது புத்தியில் உரைத்துக் கொண்டான்.
அப்போது அவன் சகஜமாக இருக்க முயற்சி செய்தான் என்றுதான் கூற வேண்டும். “காதலையும், கர்ப்பத்தையும்” மறைக்க முடியாதென கவிஞன் ஒருவன் சொன்னது அவன் நினைவுக்கு வந்த போனது. நாம் ஏன் இவள் மீது உள்ள ஈர்ப்பை காதல் என முடிவு செய்கிறோம் என அவன் தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். அவளை பற்றிய நினைவு சார்ந்த எண்ணங்களை அவன் எவ்வளவுதான் தவிர்க்க முயற்சித்தாலும் அதில் அவன் இடறியே விழுந்தான்.
ஜானகி அம்மாள் சில பலகாரங்களும் காபியும் கொண்டு வருவதற்கும், விசாலியின் கார் ஹாரன் சத்தம் வீட்டிற்கு வெளியே கேட்பதற்கும் சரியாக இருந்தது.
அவர்களின் வீட்டை நோட்டமிட்டபடி வீட்டினுள் வந்த விசாலி, கரணுடனும் வீட்டிலுள்ள அனைவருடனும் சேர்ந்து அங்கு வைத்திருந்த இனிப்புகளையும், காபியையும் குடித்துவிட்டு, அங்கிருந்து சண்முகநாதனுடன் கிளம்பினாள். “எதுவும் வேலை இருக்கா காயத்ரி, வேணா நீயும் எங்க கூட வயேன் என்றாள்.” அப்போது காயத்ரி ஜானகி அம்மாளை பார்த்தாள். ஜானகி அம்மாளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கரண் அவள் வருவதை எதிர்பார்த்தானா, அல்லது அவள் வராததை எதிர்பார்த்தானா என அவனுக்கே புரியாமல், பெரும் காற்றில் அகப்பட்ட கருமேகமாய் கனத்து அலைந்தான்.
சண்முகநாதனிடமும், ஜானகி அம்மாளிடமும் என்ன சமிக்ஞையை அறிந்தாளோ காயத்ரி, “சரி” என அவர்களுடன் காரில் புறப்பட்டு சென்றாள்.
காரை கரண் ஓட்ட, முன்புறம் விசாலி அமர்ந்து கொண்டாள். காயத்ரி அப்பாவுடன் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு ஆட்டோவில் ஒரு சில தினங்களுக்கு முன் கரணின் வீட்டிற்கு சென்றது நினைவுக்கு வந்தது. யாரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாத சூழலில், விசாலி, தான் புதிதாக ஆரம்பிக்கப் போகும் கார் கம்பெனியின் கட்டிடத்தை மாற்றி அமைக்கும் விதம் பற்றி சண்முகநாதனிடம் பேசினாள். சண்முகநாதனுக்கு மனதளவில் உற்சாகம் பற்றிக் கொண்டது. அடிக்கொருதரம் தான் கட்டிடம் குறித்த ஆலோசனையில் மாற்றங்களை தெரிவிக்கும் போதெல்லாம், காயத்ரியையும், ஒரு முறை பார்த்து சிரித்துக் கொண்டார். காயத்ரி தனது அப்பாவின் இந்த இயல்பை பலமுறை பார்த்திருந்தாலும், இந்த சூழலில் அவற்றை அவளால் ரசிக்க முடியவில்லை. காரின் பக்கவாட்டில் முகத்தை திருப்பி ஜன்னல் வழியே, வெளியே பார்த்தாள். இந்த சூழ்நிலைக்கு தன்னை விசாலி அழைத்ததும், தான் வந்திருக்கக் கூடாதோ என எண்ணினாள். இவர்கள் அனைவரும் கரணின் கார் கம்பெனியின் விசயமாக கலந்தாலோசிக்க செல்லும்போது, தான் ஒரு அந்நியனைப் போல அவர்களினுடே இருப்பதாக காயத்ரிக்கு தோன்றியது.
தனது முகத்தை திருப்பி கரணை பார்த்தாள் காயத்ரி. அவன் மனச்சோர்வு அடைந்தாற் போல் காணப்பட்டான். கார் மெதுவாக அவர்களது இலக்கை அடைந்து நின்றது. காரை விட்டிறங்கி அனைவரும் கார் கம்பெனிக்குள் சென்றனர். விசாலி, சண்முகநாதன், கரண் என மூவரும் புதிதாக வரும் கார்களை நிறுத்துவதற்கு, செய்ய வேண்டிய நவீன ஏற்பாட்டை, எப்படி செய்வது, என பேசிக் கொண்டனர். காயத்ரி கரணை கவனித்தபடி இருந்தாள். அவன் சொல்லும் பல விஷயங்களை அப்பா உணர்ந்து கொள்ள, புரிந்து கொள்ள சற்று சிரமப்பட்டார். காயத்ரி சிறிது சிறிதாக தன்னுள் கரணை புரிந்து கொண்டிருந்தாள்.
