வீடு வாங்கும் ஆசை நிறைவேற வேண்டுமா?

0
Full Page

நாம் அனைவருக்கும் வீடு கட்டும் அல்லது வீடு வாங்கும் ஆசை மனதில் எந்த மூலையிலாவது இருக்கும். அதுவும் வாங்கும் வீடு எந்தவிதமான தோஷமும் இல்லாமல் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறோம். அதற்காக வாஸ்து பார்க்கிறோம்.

வீடு கட்டுதல், வசிக்கும் வீடு மற்றும் வியாபாரத் தலங்களின் அமைப்பு, நோக்கும் திசை, அறைகளின் நீளம், அகலம் என அனைத்திலும் வாஸ்து தோஷம் உள்ளதா எனப் பார்ப்பது தற்போது அனைவரும் கடைப்பிடித்து வரும் வழக்கமாக  உள்ளது மனை தொடர்பான அனைத்து நற்காரியங்களைத் தொடங்கும் முன் வாஸ்து தோஷம் பார்ப்பதும் தற்போதைய நடைமுறையே.

இவை அனைத்திற்கும் காரணமான வாஸ்து பகவான் பெரும்பாலும் யோக நிலையிலேயே இருப்பார். அவர் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே விழித்திருப்பார் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அப்படி அவர் விழித்திருக்கும் நாட்கள் வாஸ்து நாட்கள் என அழைக்கப்படுகின்றன. அந்த நாட்களில் மனை, வீடு, பூமி சம்பந்தப்பட்ட அனைத்து நற்காரியங்களையும் தொடங்கினால் மங்கலம் பெருகி நன்மை கிடைக்கும்.

இப்படிப்பட்ட வாஸ்து நாயகருக்கு திருச்சியில் ஓர் ஆலயம் உள்ளது. திருச்சியிலுள்ள காந்தி மார்க்கெட்டிற்கு பின்புறமுள்ள கீழப்புலிவார் சாலையில் இந்த ஆலயம் அமைந்துள்ள பூலோகநாத ஸ்வாமி திருக்கோயிலே அந்த ஆலயம். அங்கு அருள்பாலிக்கும் பூலோகநாத ஸ்வாமிதான் வாஸ்து நாயகராகத் திகழ்கிறார். இவர் வாஸ்து தோஷங்களை நீக்கும் வல்லமை படைத்தவர். இவரிடம் வாஸ்து தொடர்பான குறைபாடுகளை சமர்ப்பித்து பிரார்த்தித்துக் கொண்டால் அவை அறவே தீருகின்றன. ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் வாஸ்து நாட்களில் சிறப்பு வாஸ்து ஹோமம் நடத்தப்படுகிறது. புதிதாக வீடு கட்டுபவர்களும், பழைய, புதிய வீட்டில் தோஷம் இருப்பதாக கருதுபவர்களும், வாஸ்து நாட்களில் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால் வாஸ்து தோஷம் நீங்குகிறது; மற்றவர்களுக்கு வீடு, மனை வாங்கும் யோகம் கிட்டுகிறது.

வாஸ்து ஹோமத்தன்று பூமிக்கு அடியில் விளையும் பெரும்பாலான கிழங்குகளைக் கொண்டு விசேஷ கதம்ப கிழங்குகள் சாதம் தயாரித்து வாஸ்து பகவானுக்கு படையல் இடப்படுகிறது. பின்னர் இதை பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கின்றனர். இந்த ஆலயம் கிழக்கு திசைநோக்கி அமைந்துள்ளது. முகப்பைக் கடந்ததும் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுரத்தின் வெளியே இடது புறம் விநாயகர், வலதுபுறம் முருகன் மற்றும் கருப்பண்ணசாமி சந்நதிகள் உள்ளன. கோபுரத்தைக் கடந்ததும் அகன்ற பிராகாரமும், கொடிமரமும், நந்தியும் உள்ளன. அடுத்துள்ள யாக மண்டபத்தின் வலதுபுறம் இறைவி ஜகதாம்பிகையின் சந்நதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள்.

மேலிரு கரங்களில் பத்மம் மற்றும் அல்லி மலரைத் தாங்கியுள்ள அன்னை, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருட்பாலிக்கிறாள். முன்புறம் இரு துவாரபாலகர்கள் கொலுவிருக்கிறார்கள். அடுத்துள்ள மகா மண்டப நுழைவாயிலில் இடது புறம் விநாயகரும், வலதுபுறம் வள்ளி, தெய்வானையுடன் முருகனும் அருட்பாலிக்கின்றனர். அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் பூலோகநாத ஸ்வாமி லிங்கத் திருமேனியராக ஆசி வழங்குகிறார். இறைவனின் தேவகோட்டத்தின் தெற்கில் விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் லிங்கோத்பவரும், வடக்கில் துர்க்கையும் பிரம்மாவும் அருள்கின்றனர்.

ஆலயத்தின் மற்றுமொரு சிறப்பு

Half page

இந்த ஆலயத்தில்

அத்தி, மகிழம், வில்வம், குருந்தை, வன்னி

என ஐந்து தல விருட்சங்கள் உள்ளன.

ஆலய திருச்சுற்றின் மேற்கில் தல விருட்சமான வன்னிமரம், வன்னிமர விநாயகர், ஆஞ்சநேயர், வள்ளி, தெய்வானை, முருகன் ஆகியோரும் வடக்கில் சண்டிகேஸ்வரர் சந்நதியும், வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்களும் கால பைரவரும் தரிசனம் நல்குகின்றனர். இத்தல மூலவருக்கு வாஸ்து நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகின்றன.

விழாக்கள்

தைப்பூசம், மாசி மகம், ஆருத்ரா தரிசனம், ஆகிய நாட்களில் இறைவன், இறைவி வீதியுலா வருவதுண்டு. தல விருட்சமான வன்னி மரத்தையும் அருகேயிருக்கும் வன்னிமர விநாயகரையும், வலமாக வரும்போது கன்னிமார்களையும் வேண்டிக் கொண்டால் கன்னிப் பெண்களுக்கு விரைந்து திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம்.

கிழக்கு திருச்சுற்றிலிருக்கும் நாகாபரண விநாயகர் தனது இடுப்பில் நாகப்பாம்பினை சுற்றியபடி காட்சி தருகிறார். இவரை அபிஷேகம், அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்வதால் நாக தோஷம் விலகும்.

மிகவும் பழமையான ஸ்தலம்

சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். வாஸ்து தலமான இந்த ஆலயத்திற்கு வந்து வாஸ்து நாயகனான பூலோகநாத ஸ்வாமியையும் ஜகதாம்பாளையும் வணங்குபவர்களுக்கு வாஸ்து தொடர்பான அனைத்து குறைபாடுகளும் நீங்கி அவர்கள் வாழ்வில் வளம் பெறுவார்கள் என்பது நிசர்சனமான உண்மையாகும்.

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.