உயிர் வளர்ப்போம்-22

கதை வழி மருத்துவம் (அருளமுதம் எனும் அருமருந்து)

0
1

அவ்வாறு ஒரு மருத்துவர் எந்த பூதம் மூல பாதிப்புக்கு காரணம் என்பதை கண்டறிந்த பின்னர் அந்த பூதத்தின் ஆதார சக்கரத்தினை சமநிலை படுத்திட வேண்டும். இதுவரை யாம் விளக்கிய கலையில் தம்மில் எவருக்கேனும் சந்தேகம் இருப்பின் தங்கள் கேள்விகளை முன்வைக்கலாம்.” என யோகியார் தன் நீண்ட விளக்கத்தினை முடித்துக் கொண்டார்.

பெரும்பான்மையான மருத்துவர்கள் இக்கலையின் ஆழமான ஞான நுட்பத்தையும் எளிமையான செயல்முறையையும் எண்ணி வியந்தார்கள். ஆனால் ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு. அவர்களில் ஒருவர் எழுந்து யோகியாரை பார்த்து. “மௌன யோகியே, இதுவரை நாங்கள் ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தில் மூன்று தோஷங்களாகிய வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றின் தன்மையை நாடி பரிசோதனை மூலம் அறிந்து கொண்டு அதற்கேற்ற மருந்துகள் வழங்கி வந்தோம். அப்படியிருக்க தம்முடைய இந்த அக்குயோகா எனும் ஞான மருத்துவக் கலையில் இந்த மூன்று தோஷங்களை எவ்வாறு சீர்படுத்துவீர்கள்?” என வினவினார்.

 

அந்த மருத்துவரின் இந்த அறிவுப்பூர்வமான கேள்வியை மனதார பாராட்டிய யோகியார் “அன்பரே மூன்று தோஷங்கள் என அழைக்கப்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்றும் பஞ்ச பூதங்களால் ஆனவையே. வாதம் காற்று மட்டும் ஆகாயத்தின் சேர்க்கையாகும், பித்தம் நெருப்பு மற்றும் நீரின் சேர்க்கையாகும், கபம் மண் மற்றும் நீரின் சேர்க்கையாகும், ஆகவே ஒருவருடைய உடலில் பஞ்சபூதங்களை நாம் சீர் படுத்தும் பொழுது மூன்று தோஷங்களும் இயல்பாகவே சம நிலை பட்டுவிடும்.
ஒருவருக்கு சிகிச்சை அளித்த பின்பு தாங்கள் இந்த மூன்று தோஷங்களின் தன்மையை நாடி பரிசோதனை கொண்டு ஆராய்ந்தால் அவை சமநிலைப்பட்டு இருப்பதை கண்கூடாக காணலாம்.” என விளக்கினார்.

 

4

இதனை தொடர்ந்து அங்கு வந்திருந்த தவ யோகி ஒருவர் அவரை பார்த்து “யோகியாரே தம்முடைய இந்த ஞான மருத்துவ கலையில் ஆறாவது ஆதாரமாக விளங்க கூடிய சகஸ்ர தளம் எனும் ஆயிரம் இதழ் தாமரையை இணைக்காதது ஏன்?” என வினவினார். இக்கேள்விக்கு யோகியார் “அன்பரே, சகஸ்ர தளம் என்பது மேல் ஆறு ஆதாரங்களின் அடிப்படையாகவும் இறைவனை அடையும் அடித்தளமாகவும் விளங்குகின்றது. ஞான மருத்துவம் செய்கின்ற ஒருவர் தன்னுடைய மனதினை விண்ணின் மூலமாக விளங்குகின்ற இறைவனின் மீது வைக்க வேண்டியது அவசியமாகின்றது. அவ்வாறு ஒருவர் தன் கவனத்தை விண்ணில் படிக்கும் பொழுது இயல்பாகவே அவருடைய சகஸ்ரதளம் என்று அழைக்கப்படும் ஆயிரம் இதழ் தாமரை சூட்சமமாக இயக்கத்திற்கு வருகின்றது.

 

மேலும் ஒருவருடைய உடலினை சமநிலைப்படுத்த கீழ் ஆறு ஆதாரங்களில் ஆற்றலை சமநிலை படுத்தினால் மட்டுமே போதுமானது. இதனாலேயே ஞான மருத்துவக் கலையில் நாம் சகஸ்ரதளத்தினை நேரிடையாக புகுத்தவில்லை. எனினும் இறைவனை அடைய முற்படும் ஞான தாகம் கொண்ட அன்பர்களுக்கு சகஸ்ர தளம் குறித்த பரிபாசை விளக்கமும் யோக தீட்சையும் வழங்க தயாராக உள்ளோம்” என பதில் உரைத்தார். அடுத்தபடியாக ஆய்வாளர் ஆனந்தன் எழுந்து “ஐயனே நவீன மருத்துவம் கண்டறியக்கூடிய நோய்கள் யாவற்றையும் இந்த மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த இயலுமா? சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத நோய்கள் என்று கூறப்படுகின்றன.

 

2

இவ்வாறான நோய்கள் பற்றிய தங்களின் விளக்கத்தினை நாடுகிறோம்.” என பணிவுடன் வேண்டினார். இதற்கு யோகியார் “அன்பரே நவீன மருத்துவம் கூறும் இந்த வகை நோய்கள் யாவும் ஒருவருடைய உடலில் ஏற்பட்டுவிட்ட பஞ்சபூத சமநிலை இன்மையின் நீண்டகால விளைவுகளே ஆகும். எனவே அடிப்படை பாதிப்பில் உள்ள பூதத்தினை கண்டறிந்து அதனை சமநிலைப்படுத்தி வரும்போது இயல்பாகவே இந்த நோய்கள் யாவும் குணமடைந்து விடும்.” என விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து வயதான தோற்றம் கொண்ட ஒருவர் சித்த மருத்துவர்கள் மத்தியில் இருந்து எழுந்து மெல்ல நடந்து வந்து யோகியாரின் முன் நின்றார். அந்த பழுத்த முதியவர் யோகியாரை பார்த்து “டேய் பொடிப்பயலே, உனக்கும் உன் மருத்துவர் கூட்டத்திற்கும் இந்தக் கிழவன் விடுக்கும் சவால். உனது உடம்பை உனது கை கட்டை விரலால் அளந்து பார்த்தால் 96 அங்குஷ்டங்கள் இருக்கும்.
இதனை சரியான படி அளந்து காட்டுங்கள் பார்ப்போம். உங்களில் யார் வேண்டுமானாலும் இந்த சவாலினை ஏற்கலாம்.

 

ஆனால் சவாலை ஏற்று அதில் தோற்பவர்கள் தலை சுக்கு நூறாக வெடித்துப் போகும் என சாபம் அளிக்கிறேன். உங்களில் நெஞ்சுரம் கொண்ட எவரேனும் இருந்தால் எனது சவாலில் வெற்றி பெற்று காட்டுங்கள்.” என்று கூறி விட்டு அங்கேயே அமர்ந்து கொண்டார். அந்த முதியவரின் சவாலினை செவியுற்ற அனைவரும் வாயடைத்துப் போய் நின்றனர். ஏனெனில் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களது உடல் தம் கை கட்டைவிரலால் 96 அங்குஷ்டங்கள் இருக்கும் என படித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் எவரும் அதனை ஆராய்ந்து பார்த்ததோ அல்லது அளந்து பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டதோ இல்லை. மேலும் பலருக்கு கட்டைவிரலை எந்த கோணத்தில் வைத்து 96 அங்குஷ்டங்கள் அளப்பது? நீள் வாட்டிலா அல்லது நேர் வாட்டிலா? என்ற குழப்பம்.

இதனால் அந்தக் கூட்டத்தில் ஒருவர் கூட முன்வரவில்லை. சிறிது நேரம் அனைவரையும் பார்த்தபடி நின்ற யோகியார் மெல்ல அந்த முதியவரின் அருகில் நடந்து சென்று அவருக்கு அருகில் தனது இரு கால்களையும் நீட்டியபடி அமர்ந்துகொண்டார். பின்னர் தன்னுடைய வலது காலை மடித்து இடது தொடையின் மீது வைத்துக்கொண்டார். தன்னுடைய பாதத்தில் வெண்மையான பகுதி முடிந்து கருமையான தோல் பகுதி ஆரம்பிக்கக்கூடிய குதிகாலின் விளிம்பில் தனது இடது பெருவிரலை நீள்வாட்டில் பதித்தார். இடது பெருவிரலுக்கு மேலாக வலது பெருவிரலினை நீள் வாட்டில் பதித்தார். பிறகு இடது பெருவிரலை வலது பெருவிரலுக்கு மேலாகவும், வலது பெருவிரலை இடதிற்கு மேலாகவும் மாற்றி மாற்றி பதித்தார்.

 

அவ்வாறு அவர் விரலை பதிக்கும் பொழுது ஒவ்வொரு விரலுக்கும் ஒன்று இரண்டு மூன்று என எண்ணியபடி இருந்தார். மெல்ல மெல்ல காலில் மேல் நோக்கி நகர்ந்து தொடை வரை அடைந்தார். தொடையிலிருந்து அடிவயிற்றுக்கு மாறும் பொழுது தனது பெருவிரலை பின்புறமாக திருப்பி நகக்கண் பகுதியை பதிக்கத் தொடங்கி மேல் நோக்கி நகர்ந்தார். மெல்ல மெல்ல வயிறு, நெஞ்சு, கழுத்து, தலை என எண்ணியபடியே தனது கபாலத்தின் முடிவு வரை அளந்து முடித்தார். அவ்வாறு அவர் எண்ணி முடிக்கும் பொழுது எண்ணிக்கை சரியாக 96 ஐ தொட்டிருந்தது. இந்தக் காட்சியினை திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் வியக்கும் வண்ணம் அங்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

தொடரும்

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்