மன அழுத்தமா; டான்ஸ் ஆடுங்க..!

0

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்/ள் என்று எழுதுவதோ, சொல்வதோ இப்போதும் வழக்கத்தில் உள்ளது. நடனம் என்பது மகிழ்ச்சியோடு சம்பந்தப்பட்டதாக உள்ளது. ஆனந்த நடனம் என்று சொல்லும் வழக்கம் நம் மரபில் உள்ளது. நடனத்தை வடிவமைப்பதும் இசைக்கேற்ப ஆடுவதும் மட்டுமல்ல, அதைப் பார்ப்பதும் அது குறித்த நினைவுகளை அசைபோடுவதும்கூட ஆனந்தத் தருணங்கள்தாம்.

நடனம் என்பது உடற்பயிற்சியைவிடப் பல வகையில் மேலானது; நமது விருப்பத்தினால் விளைவது, உடலை இலகுவாக்குவது, மனதைச் சாந்தமாக்குவது, ஆற்றலை மேம்படுத்துவது, அற்புதமான அனுபவத்தைத் தருவது என்று பல்வேறு விளக்கங்கள் தரலாம். இவையனைத்தையும்விட நடனத்தைக் காதலிப்பவனுக்கு, அது மிகச் சிறந்த நற்போதை. கலைகள் அனைத்துமே போதை என்ற போதிலும், இசையும் நடனமும் அதில் முதலிடம் பிடிக்கும்.

நடனத்தை ஒருவித சிகிச்சையாகவும் நவீன உலகம் மாற்றி வைத்திருக்கிறது. மகிழ்ச்சியாக ஆட வேண்டுமென்பதில்லை; மகிழ்ச்சியைப் பெறவும் ஆடலாம் என்கிறது நவீன உலகம். சோர்வு, சோகம், ஆற்றாமை, கோபம், அச்சம் என்று எந்த வகை நஞ்சையும் அறுக்கவல்லது நடனம். உங்களுக்குப் பிடித்த இசையை ஒலிக்கவிட்டு கண்ணை மூடி கை கால்களை அசைத்துப் பாருங்கள். சில நொடிகளில் மனம் இலகுவாவதை உணர முடியும்.

food

என் மனதை இலகுவாக்க எந்தப் பயிற்சியையும் பின்பற்ற முடியவில்லை என்பவர்கள், ஒருநாளில் ஒரு சில நிமிடங்களையாவது நடனத்துக்கென்று ஒதுக்கலாம். அதற்காக பரதம், கதகளி, கதக், குச்சுப்புடி, பாலே, ஹிப்ஹாப், தப்பாட்டம் என்று கற்றுக்கொள்ள முடியுமா என்று ஆயாசப்பட வேண்டாம். நீங்கள் ரசித்த சினிமா பாடலுக்கேற்ப, உங்களது உடலசைவுகளைப் பிரதியெடுத்தாலே போதும். இன்னும் எளிதாக நடனமாட வேண்டுமென்று ஆசைப்பட்டால், சேரன் பாண்டியன் படத்தில் தூக்கிலிடுவது போலப் பாவனை செய்துகொண்டு ‘ஹவா.. ஹவா..’ என்று செந்தில் தோள்பட்டையைக் குலுக்குவாரே, அப்படி ஆடினால்கூடப் போதும்.

நடனமாடும் கணத்தில் உங்களை நீங்கள் கண்ணாடியில் பார்த்தால் புன்னகை சிரிப்பாக மாறிப் பீறிடும். உடலிலும் மனதிலும் சுணக்கம் நீங்கும். மன அழுத்தம் அதிகமிருக்கும் நேரத்தில் இதைத் தாராளமாக முயன்று பார்க்கலாம்.
மனைவி, சிறு குழந்தைகள் என்றிருப்பவர்கள் வாரத்துக்கு ஒரு முறை அல்லது நேரம் வாய்க்கும்போதெல்லாம் கூட்டாகச் சேர்ந்து நடனமாடித் திளைக்கலாம். நடனமாடும்போது உங்களுக்குள் இருக்கும் நீங்கள் வெளிப்படுவீர்கள். நாம் அறியாத இயல்புகள் மெல்ல முகம் காட்டும்.
வாருங்கள், நடனமாடுவோம். மன இறுக்கத்தைத் தளர்த்துவோம், நம்மை நாமே அறிவோம்.

பா.உதய்

gif 4

Leave A Reply

Your email address will not be published.