சமூக நலத்துறையும், தமிழக குழந்தைகள் நலனும்!

2008-09 – 2017-18 காலத்தில் தமிழக அரசு செய்த மொத்த செலவில் சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் (Social Welfare and Nutritious Meal Department) பங்கு சராசரியாக 3 விழுக்காடாக இருந்தது. குறிப்பாக, தமிழக அரசு குழந்தைகள், தாய்மார்களுக்கு செய்யும் மொத்த செலவில் சமூகநலத் துறையின் பங்கு சராசரியாக 10-12 விழுக்காடாக இருந்தது. இந்த காலத்தில் இத்துறையின் மொத்த செலவு கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு அதிகரித்தது; குழந்தைகளுக்கு செய்யப்பட்ட செலவும் அதே அளவிற்கு அதிகரித்தது.
பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள், திருநங்கையர், ஆதரவற்ற மக்கள் என பலதரப்பட்ட மக்களின் நலனுக்காகவும் சமூக நலத்துறை செலவு செய்கிறது. ஆனால், இத்துறையின் மொத்த செலவில் குழந்தைகளுக்கான செலவின் பங்கு 80 விழுக்காடு.
இந்த பத்தாண்டுகளில் சத்துணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டம் (ICDS)இவை இரண்டுக்கும் செய்யப்படும் செலவு இருமடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த இரு திட்டங்களுக்கும் செய்யப்படும் செலவு, சமூக நலத்துறை செய்யும் மொத்த செலவில் 90 விழுக்காடு. மேலும் இவ்விரு திட்டங்களுக்கும் செய்யப்படும் செலவின் பங்கு சமமாகவே இருந்துள்ளது.

சத்துணவுத் திட்டத்தால் பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 2010-11 இல் 54.8 லட்சம்; 2016-17 இல் இத்திட்டத்தால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 55.05 லட்சம். சிறுபிள்ளைகள், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பதின்வயதுப் பெண்கள், முதியவர்கள் அனைவரையும் சேர்த்தால், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டத்தால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 2010-11 இல் 28.82 லட்சம்; இது 2016-17 இல் 35.36 லட்சமாக அதிகரித்தது.
தேவையான ஊட்டச்சத்து பெற்று இயல்பாக இருக்கும் சிறுபிள்ளைகளின் பங்கு ஏப்ரல் 2013 – செப்டம்பர் 2016 காலத்தில் 79 விழுக்காட்டிலிருந்து 92 விழுக்காடாக உயர்ந்துள்ளது. சிறிதளவு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள சிறுபிள்ளைகளின் பங்கு இதே காலத்தில் 21 விழுக்காட்டிலிருந்து, 8.2 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது. கடுமையாக ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள சிறுபிள்ளைகளின் பங்கு 0.17 விழுக்காட்டிலிருந்து 0.05 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது என்று தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பல நலத்திட்டங்களுக்கு தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாகத் திகழ்ந்துள்ளது. இவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி சரியான முறையில் செலவிடப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். காரணம், இந்தத் திட்டங்களை அமல்படுத்துவதில் முறைகேடுகள் இருப்பதாக சமீப காலங்களில் தெரியவந்துள்ளது. சத்துணவுத் திட்டத்திற்காக முட்டை கொள்முதல் செய்வதில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்று சென்றாண்டின் இறுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனைகள் நமக்குத் தெரிவிக்கின்றன.
