அகத்தியர் ஈயாக மாறி வழிப்பட்ட திருஈங்கோய்மலை

0
Business trichy

திரு ஈங்கோய் மலை எம் எந்தாய் போற்றி என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகரால் பாடப்பெற்ற தலம் திருஈங்கோய்மலை. திருச்சி – நாமக்கல் சாலையில் அமைந்துள்ள இத்தலமானது தற்போது திருவிங்கநாதலை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள 63வது சிவத்தலமாகும். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் இருந்து காவேரி நதியைக் கடந்து செல்கையில் அதன் மறுபுறமான வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது.

முன்பொரு சமயம், ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் தங்களுக்குள் யார் வலிமை மிக்கவர் என்ற போட்டி எழுந்தது. அப்போது ஆதிசேஷனானவன் தனது ஆயிரம் முடிகளாலும் மேரு மலையைச் சுற்றிக் கொண்டு, வாயுவைச் செல்ல முடியாமல் தடுத்தபோது, வாயு சஞ்சாரமற்ற இடங்களில் உயிர்கள் மடியத் தொடங்கின. தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கிய ஆதிசேஷன், தனது முடிகளில் ஒன்றைச் சற்று ஒடுக்கி, வாயு செல்ல வழி ஏற்படுத்தினான். வாயுவும் , தனது முழு வேகத்தோடு, அந்த இடைவெளியில் புகுந்து, மேருச் சிகரங்கள் ஐந்தைப் பிடுங்கியவாறு தென்திசை நோக்கிச் சென்றான். அச்சிகரங்கள் வீழ்ந்த இடங்கள் சிவத்தலங்கள் ஆயின. அவற்றுள் ஒன்றே, இத்தலம்(மரகதாசலம்) ஆகும். அங்கு ஆதிசேஷனின் அம்சமாகப் புளிய மரம் முளைத்தது. அதனைச் சிவ ரூபமாகவும் கூறுவர்.(தல விருட்சம் புளிய மரம்.)
பிரமதேவன் இங்கு வந்து மரகதாசலேசுவரரைப் பூஜித்து , சிருஷ்டித் தொழிலைச் செய்யும் வலிமை பெற்றான் . விஷ்ணுவும் இப்பெருமானை வழிபட்டுக் காக்கும் தொழிலைச் செய்யும் அதிகாரம் பெற்றார். மேலும், யமுனை, ரோமச ரிஷி ஆகியோரும் நற்கதி பெற்றுள்ளனர்.

 

Kavi furniture

சிவராத்திரி தினத்தில் பிரம தீர்த்த ஸ்நானம் செய்து நறு மலர்களாலும், வில்வத்தாலும் இறைவனை அர்ச்சித்தால், பிற தலங்களில் மூன்று கோடி சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதற்கு நிகராகும். புளியடியையும் பெருமானையும் ஒருங்கே வலம் வருபவர்கள் உலகையே வலம் வந்தவர்களாவர். முனிவர்கள் பலர் இங்குத் தவம் செய்திருக்கிறார்கள். இத்தலத்தில் செய்யப்படும் அன்னதானத்திற்கு விசேஷ பலன் உண்டு. அப்படிச் செய்பவர்கள் செல்வந்தர்களாவர். தல விருட்சமான புளிய மரத்தை நெடும் தொலைவிலிருந்து தரிசித்தாலும் முக்தி கிட்டும் என நந்தியெம்பெருமான் அருளி உள்ளார்.

ஒரு காலத்தில், பிருங்கி ரிஷியானவர் அம்பிகையைத் துதியாமல் சிவனை மட்டுமே துதித்து வந்தார். அது கண்டு வருந்திய அம்பிகை, மரகதாசலத்தை அடைந்து, லக்ஷ்மி தீர்த்தம் உண்டாக்கிப் பன்னிரண்டு ஆண்டுகள் ஈசனைக் குறித்துத்தவம் செய்து வந்தாள். கிருபாநிதியாகிய எம்பெருமான் தேவிக்கு முன்னர் தோன்றி, அவள் வேண்டியபடியே தனது நீங்காத பாகமாக ஏற்றதால் அர்த்தநாரீசுவரன் என்று அழைக்கப் பட்டான்.
இத்தலம் போக மோக்ஷத்தைத் தரவல்லது. கார்த்திகை சுக்கிர வாரத்தில் இத்தீர்த்தத்தில் நீராடி, பாயசான்னம் தானம் செய்தால், துன்பங்கள் எல்லாம் நீங்கும். நவராத்திரியின்போது வரும் நவமியில் கருநெய்தல் மலர்களால் தேவியின் பாதங்களை அர்ச்சித்தால் கலைகளில் நிபுணர்கள் ஆவார்கள்.

 

அகத்தியர் தன் சிஷ்யர்களாகிய பிற முனிவர்களோடு ஒரு சமயம் தீர்த்த யாத்திரையாக திருக்கேதாரம் முதல் ராமேசுவரம் வரை சென்று கொண்டிருக்கும்போது வழியில் கடம்பவனத்தை அடைந்து காவிரியிலிருந்து பன்னிரண்டு குடம் நீர் எடுத்து வந்து கடம்பவன நாதருக்கு அபிஷேகம் செய்து, மலர்களால் அர்ச்சனை செய்து வந்தார். பின்னர், அருகிலுள்ள இரத்தினகிரிக்குச் சென்று, சூரிய தீர்த்தத்தில் நீராடிவிட்டு, காவிரியிலிருந்து புனிதநீரை மூன்று குடங்களில் எடுத்துவந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்காரமும் அர்ச்சனையும் செய்து, துதித்து, ஆலயத்தை மும்முறை வலம் வந்து, மீண்டும் கடம்பவனத்தை அடைந்தார். மாலை நேரம் ஆனவுடன் காவிரியைக் கடந்து, மரகதாசலத்தை அடைந்தார்.

அவ்வேளையில், கோயில் அர்ச்சகர்கள் பூஜையை முடித்துக் கொண்டு, ஆலயக் கதவுகளைப் பூட்டிக் கொண்டு, சென்று விட்டனர். இதனை அறிந்த அகத்தியர், இறைவனைத் தரிசிக்க முடியாமல் போனது பற்றி மிக்க வருத்தமடைந்தார். அப்போது ஒரு அசரீரி வாக்கு ஒலித்தது. நீ இப்போது ஈ உருவில் உள்ளே சென்று இறைவனை வழிபடுவாயாக. இம்மலையின் மேற்புறம் சர்ப்ப நதி வடிவில் நாகராஜன் இருக்கிறான். அங்கு ஸ்நானம் செய்பவர்கள் தாம் விரும்பிய வடிவைப் பெறுவார்கள். ஆகவே நீ அத்தீர்த்தத்தை நாடிச் சென்றால் உன் கருத்து நிறைவேறும் ” என்று கூறியது. மகிழ்வுற்ற அகத்தியர், அப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடி ஈ வடிவம் பெற்று இவ்வடிவுடன் ஆலயத்தினுள் சென்று, பெருமானைக் கண்ணாறத் தரிசித்தார். மனத்தினால் அனைத்து பூஜைகளையும் செய்தார். பிறகு வெளியில் வந்து சர்ப்ப நதியில் ஸ்நானம் செய்தவுடன் முந்திய முனிவடிவம் பெற்றுத் தனது இருப்பிடம் சென்றடைந்தார். அது முதல் இம்மலை ஈங்கோய் மலை எனப் பெயர் பெற்றது.

MDMK

பாற்கடல் கடையப்பெற்ற போது அதிலிருந்து எழுந்த திவலை இங்கு வந்து விழுந்த வேகத்தால் இத்தீர்த்தம் உண்டாயிற்று கோபில முனிவரும் வீதிஹோத்திரனை மரகதாசலத்திற்கு அழைத்துச் சென்று சர்ப்ப நதி சங்கமத்திலும் சுதா புஷ்கரணியிலும் நீராடச் செய்தவுடன் வீதி ஹோத்திரனது பிதுர் தோஷத்திற்கு உதவாது குருவால் சபிக்கப்பட்டு பிசாசாக மாறிய பாவம் நீங்கியது.

தீர்த்த சிறப்பு

இத்தீர்த்தத்தை உட்கொண்டால் எல்லாவித விஷங்களும் நீங்கும். பிறவித் துயரும் நீங்கும். இயமனும் இவ்விடத்தில் பொன்னி நதியின் வடபுறம் தீர்த்தம் அமைத்தான். அதில் மார்கழி மாத மங்கள வாரத்தில் நீராடினால் பிறவித்துயர் நீங்கும். பித்ருக்கள் மகிழ்வர். தீர்த்தக்கரையில் செய்யப்படும் தானங்கள் அளவற்ற பலன் கொடுக்கும். அங்கு கிருஷ்ணனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம் உள்ளது மாத பௌர்ணமி ஸ்நான விசேஷம்.


தேன் அபிஷேகம்

முன்பு அகத்திய முனிவர் , தாமே ஈ வடிவம் கொண்டு கானகம் சென்று, தேன் கூடுகளிலிருந்து பெற்ற தேனைக் கொண்டு வந்து பல்லாண்டுகள் மரகதாசலேசுவரரை அபிஷேகித்து வந்ததால் இம்மலை ஈங்கோய் மலை எனப்பட்டது. முன்பு ஒரு குரங்கானது இங்குள்ள (திருப்) புளிய மரத்தின் மீதிருந்த தேன் கூட்டை இழுக்கும்போது அங்கிருந்த தேனீக்கள் வெளிப்பட்டு அக்குரங்கைக் கடித்தன. அத்துன்பத்தால் குரங்கானது, தன் கையிலிருந்த தேன் கூட்டைக் கை நழுவ விட்டு விட்டது. அக்கூடானது அம்மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின் மீது விழவே, அதில் இருந்த தேன், பெருமானுக்கு அபிஷேகமாயிற்று. அப்புண்ணியத்தால் அக்குரங்கானது மறு பிறப்பில் சுப்பிரபன் என்ற அரசனானது.

சிறப்புகள்

அம்பிகை வழிபட்டதால் இதற்கு சிவசக்திமலை என்றும் பெயர் வழங்குகிறது. சிவலிங்கம், பெயருக்கேற்ப மரகதக்கல் போல நல்ல பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கிறது. நக்கீரர் இம்மலை மீதுள்ள பெருமான் மீது ‘ஈங்கோய் எழுபது ‘ என்ற நூலைப் பாடியுள்ளார். சிவராத்திரியன்று அல்லது முன்நாளில் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படுகின்றது.

ஈங்கோய்மலைக் கோயில் அருகில் உள்ள வாட்போக்கிமலை, கடம்பந்துறையை பார்க்கிறது. கடம்பந்துறைக் கோயில் ஈங்கோயைப் பார்த்த வண்ணமுள்ளது. இம்மூன்று மலைகளும் சோமாஸ்கந்த வடிவில் உள்ளது. ஒரேநாளில் காலையில் கடம்பர் கோயிலையும் (கடம்பத்துறை) நண்பகலில் வாட்போக்கியையும், மாலையில் திருஈங்கோய் மலையையும் தரிசித்தல் விஷேசமாகும். ‘காலைக் கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் ‘ என்னும் வழக்குள்ளது. இவ்வாறு தரிசிப்பது எல்லா நாட்களும் ஏற்றவையெனினும் கார்த்திகைச் சோமவாரம் சிறப்பான நாளாகச் சொல்லப்படுகிறது.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.