கடல்நுரையால் ஆன பிள்ளையாரை தரிசிக்கலாமா?

0
Business trichy

தலப் பெருமை:

பிற்கால சோழ பேரரசு உருவாக காரணமான சிறப்புமிக்க போர் நடந்த ஊர் இது. இப்போரின் வெற்றியின் நினைவாக முதலாம் ஆதித்த சோழன் இங்கிருந்த செங்கற்கோயிலை அழகிய கருங்கல் கோவிலாக கட்டினார். இங்குள்ள பிரளயம் காத்த விநாயகர் சிறப்பானவர். சிவபெருமான் கிருதயுக முடிவில் உண்டான பிரளயத்தில் இருந்து இவ்வாலயத்தை காக்கும் பொறுப்பை விநாயகரிடம் ஒப்படைத்தார். ஆணையை ஏற்று ஓங்காரத்தைப் பிரயோகம் செய்து ஏழு கடலின் ஆக்ரோஷத்தை ஒரு கிணற்றுக்குள் அடக்கினார். திருக்குளத்தின் கிழக்கே இந்த ஏழு கடல் கிணறு அமைந்துள்ளது.

பிரளயத்திற்கு புறம்பாய் இருந்ததால் இத்தலம் திருப்புறம்பியம் என்ற பெயரைப் பெற்றது.  அதனால் இத்தலத்து விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

 

Kavi furniture

மதுரையைச் சேர்ந்த அரதனகுப்தன் என்னும் வணிகன் இவ்வாலய வன்னி மரத்தின் கீழ் பாம்பு தீண்டி இறந்தான். இவருடன் வந்த இளம் கன்னி ரத்தினாவளி இவ்வாலய ஈசனிடம் அழுது புலம்பினாள். ஈசன் காட்சி அளித்து வணிகனை உயிர்பித்து மடைப்பள்ளி, வன்னிமரம், கிணறு, ஆகியவற்றை சாட்சியாக வைத்து திருமணம் நடத்தி வைத்தார். மதுரை சென்ற வணிகனின் மூத்த மனைவி இவளை ஏற்காத நிலையில் இறைவன் சாட்சிகளுடன் அவர் முன் தோன்றி உண்மை உரைத்தார். மதுரை சுந்தரேசர் ஆலயத்தில், சாட்சியாக வந்த மடைப்பள்ளி, வன்னிமரம், கிணறு ஆகியன இன்றும் உள்ளது. இந்த வரலாறு திருவிளையாடல் புராணத்திலும், சிலப்பதிகாரத்திலும் வருகிறது. இக்கதையை ஒட்டியே புன்னைவனநாதர், சாட்சிநாதர் என அழைக்கப்படுகிறார்.

அகத்தியர், புலத்தியர், சனகர், சனந்தனர், விஸ்வாமித்திரர் ஆகியோர் வழிபட்ட லிங்கத்திருமேனிகள் இருக்கின்றன. ஆறுமுகனை குழந்தை வடிவில் தன் இடையில் தாங்கி நிற்கும் ஸ்ரீகுகாம்பிகை சந்நிதி சிறப்பு வாய்ந்தது. இந்த அன்னைக்கு சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்தப்படும். இது திருமண பரிகாரத் தலமாகும். நால்வர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை சந்நிதிகள் இங்கு விசேஷம்..

வணிகப் பெண்ணின் பொருட்டு மதுரைக்கு எழுந்தருளி சாட்சி கூறியதால் இத்தல இறைவனுக்கு சாட்சிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடற் புராணத்திலும், தலபுராணத்திலும் வருகிறது. இன்றும் மதுரையில் சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் ஈசான்ய மூலையில் சாட்சி கூறிய படலத்திற்குச் சான்றாக இப்போதும் வன்னிமரமும், மடப்பள்ளியும் கற்சிலையாக இருப்பதைக் காணலாம்.

செட்டிப்பெண்ணுக்கு இறைவன் திருமணம் நடத்தி வைத்ததற்கு சாட்சியாக இருந்த வன்னிமரம் இத்தலத்தின் இரண்டாம் பிரகாரத்திலுள்ளது. ஆனால் இம்மரம் தலமரமன்று. தலமரம் புன்னைமரமே.

MDMK

தல இறைவன், இறைவி

சாட்சிநாதர், சாட்சிநாதேசுவரர், புன்னைவனநாதர். இறைவி கடும்படுசொல்லியம்மை, இட்சுவாணி.

கோவில் அமைப்பு:

இவ்வாலயத்தின் இராஜகோபுரம் 5 நிலைகளுடன் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறது. கோபுர வாயிலுக்கு வெளியே வலதுபுறம் தனிக்கோவிலில் அனுக்கிரக மூர்த்தியாக குரு பகவான் குடி கொண்டுள்ளார். தமிழகத்திலேயே தனிக்கோவிலில் குரு பகவான் எழுந்தருளி அருள் வழங்கும் திருத்தலம் இது ஒன்று தான்.

கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால், விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரம். நேரே பலிபீடம், நந்தி மண்டபம், கொடிமரம் ஆகியவற்றைக் காணலாம். நந்தி மண்டபத்தின் விமானத்தில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சுதை சிற்பங்களைக் காணலாம். முதற்பிராகாரத்தில் நால்வர், அகத்தியர், புலஸ்தியர், சனகர், சனந்தனர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சுவாமி கருவறை சுற்றுச் சுவர்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுடன் கூடிய சிற்பங்களைக் காணலாம்.

ஆனால் அநேக சிற்பங்கள் பின்னப்பட்டு காட்சி தருவது வேதனைக்குரிய விஷயம். இரண்டாவது பிராகாரத்தில் அம்பாள் கோயில் உள்ளது. குளத்தின் தென்கரையில் தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. கோவிலுக்கு விறகு கொண்டுவந்த ஒரு ஏழைக்கு இறைவன் தட்சிணாமூர்த்தி ரூபமாகத் தரிசனம் கொடுத்தவர். இதற்கு மேலே சட்டைநாதர் சந்நிதி உள்ளது. தட்சிணாமூர்த்திக்குரிய முக்கியத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.

 தேனபிஷேகப்பெருமான் எனப் போற்றப்படும் பிரளயம் காத்த விநாயகர் தனி சன்னதியில் உள்ளார். இந்த விநாயகர் வருண பகவானால் உருவாக்கப் பட்டவர். நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை போன்ற கடல் சார்ந்த பொருட்களால் விநாயகர் திருமேனியை உருவாக்கினார். இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியன்று இரவு முழுவதும் தேன் கொண்டு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் செய்யப்பெறும் தேன் யாவும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்பட்டுவிடும். வேறு நாட்களில் இந்த விநாயகருக்கு எந்த விதமான அபிஷேகமும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அபிஷேக வேளையில் விநாயகர் செம்பவள மேனியராய் காட்சி தருவதும் வேறு எங்கும் காணமுடியாதது.

திருப்பிறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்  சம்பந்தர்,  அப்பர்,  சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்ற சிவாலயமாகும். அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில்  அமைந்துள்ளது.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.