அருளமுதம் எனும் அருமருந்து உயிர் வளர்ப்போம்! -21

கதை வழி மருத்துவம்

0
1

பஞ்ச பூதங்களின் தன்மையையும் அதில் உள்ள பாதிப்பையும் நன்கு உணர்ந்து கொண்ட பின் அதனை சீர்படுத்தி பஞ்ச பூதங்களை சமநிலைக்கு கொண்டு வருதல் வேண்டும். ஒருவருடைய உடலில் ஒரு மூலகம் (பூதம்) மிகுந்து விட்டால் கட்டுப்படுத்தவும் குறைந்துவிட்டால் ஊக்கப்படுத்தவும் வேண்டும். ஒரு பூதத்தினை ஊக்கப்படுத்த அதன் ஆதாரத்தை அதே பூதத்தின் ஆதிக்க விரலினால் தூண்டுதல் வேண்டும். ஒரு பூதத்தினை கட்டுப்படுத்த அதன் ஆதாரத்தினை அப்பூதத்தினை கட்டுப்படுத்தும் பூதத்தின் விரலினால் தூண்ட வேண்டும்.

 

உதாரணமாக, ஒருவருடைய உடலில் நீர் பூதம் குறைந்து விட்டால், நீர் பூதத்தின் ஆதாரமாகிய மணிப்பூரகத்தினை நீரின் ஆதிக்க விரலாகிய சுண்டுவிரலால் தூண்ட வேண்டும். அதே போல் ஒருவர் உடலில் நீர் பூதம் மிகுந்து விட்டால் அதனை கட்டுப்படுத்தக்கூடிய பூமி பூதத்தின் விரலாகிய மோதிரவிரலினால் மணிப்பூரகத்தை தூண்ட வேண்டும். இவ்வாறு நாம் தூண்டும் பொழுது நம்முடைய மனதில் அந்த உடலில் வேண்டுகின்ற பஞ்சபூத சமநிலையை தருமாறு இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
அவ்வாறு பிரார்த்திக்கும் போது நம்முடைய மனமானது ஆகாயத்திலும், பார்வையானது தூண்டப்படும் ஆதாரத்திலும் நிலைத்திருத்தல் அவசியம். மேற்கூறிய சரியான முறைப்படி ஒருவருடைய ஆதாரத்தினை தூண்டும் போது உடனடியாக பஞ்சபூதங்கள் அந்த உடலில் சமநிலைப் பெற்று அவருடைய நாடியில் அந்த சமநிலை பிரதிபலிக்கும். அவ்வாறாக நாடி சமநிலைப்படுத்தப்பட்டுவிட்டால் நாம் செய்கின்ற மருத்துவம் அவருக்கு பலித்துவிட்டது என எடுத்துக்கொள்ளலாம். ஒருவருடைய நாடியை சமப்படுத்தும் பொழுது, நம்முடைய மனமும், அதே சம நிலையில் இருத்தல் மிகவும் அவசியமாகும். மனதில் சஞ்சலத்துடன் ஒருவருடைய நாடியை சமநிலைப்படுத்த முயற்சிக்கும் பொழுது, அவருடைய உடலில் வேண்டிய சமநிலை ஏற்படாமல் போகலாம். ஆகவே மனதின் சமநிலை மருத்துவம் செய்பவர்க்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

2

நம் உடலில் பஞ்ச பூதங்களின் ஆற்றல் மிகுந்தாலும் அல்லது குறைந்தாலும் அது நோயாக மாறுகின்றது. ஒரு உடலில் நோய் தோன்றுவதற்கான காரணம் அந்த உடலினால் தன்னுடைய சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள இயலவில்லை என்பதே ஆகும்.

இன்றைய மாசுபட்ட சூழலில் நமது உடலில் உணவு, நீர், காற்று, மண் ஆகிய மாசுபட்ட பூதங்களின் தன்மைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் வலிமை குறைந்து காணப்படுகிறது. அகால உணவு பழக்கம், அகால உறக்கம், சீரற்ற சுவாசம், முறையற்ற பானங்கள் ஆகியவை நம் உடலில் நோயை தோற்றுவிக்கின்றன. மேலும், வெல்லவே முடியாத பிணிகள் இரண்டு உள்ளன. அவை முதுமை மற்றும் மரணம் ஆகியன ஆகும். மருத்துவத்தில் மனம் பெரும் பங்கு வகிக்கின்றது மனதின் உணர்வுகளால் உடலில் உண்டாகும் நோய்கள் உள்ளன. உடல் பாதிப்பால் மனதில் தோன்றும் பாதிப்புகளும் உள்ளன. இந்த இரண்டு பாதிப்புகளுக்கும் ஒருவருடைய மனதினை இனிய வார்த்தைகளினால் தேற்றி நம்பிக்கை அளித்து ஊக்கப்படுத்த வெண்டும்.
ஒரு பூதம் தன்னுடைய ஆற்றலை இழந்தோ அல்லது ஆற்றல் மிகைப்பட்டோ இருந்தால், அது ஒற்றை பூத சீர்கேடு ஆகும். ஒற்றை பூதச் சீர்கேட்டில் பதிக்கப்பட்ட பூதத்தினை சமநிலை படுத்தினால் போதுமானது.
ஆனால் ஒரு பூதம் தனது பாதிப்பால் தன்னோடு தொடர்புடைய மற்ற பூதங்களில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ பாதித்தால், அதனை இரட்டை பூத சீர்கேடு, முப்பூத சீர் கேடு, நாற்பூத சீர்கேடு, ஐம்பூத சீர் கேடு என வகைப்படுத்தலாம். ஒன்றுக்கு மிகைப்பட்ட பூத சீர்கேடுகளில் எந்த பூதம் மூல பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதோ, அந்த பூதத்தினை சமநிலைப்படுத்துதல் வேண்டும். உதாரணமாக ஒருவருடைய உடலில் நீர் குறைகிறது என்று கொள்வோம்.

 

4

அவருடைய உடலில் இயல்பாகவே நெருப்பு சக்தியானது மிகுந்துவிடும். அவ்வாறு நெருப்பு சக்தி மிகும் பொழுது நெருப்பு சார்ந்த உறுப்புகளில் பாதிப்பினை ஏற்படுத்தும். இது இரட்டை பூத சீர்கேடு ஆகும்.நெருப்பு சக்தி அவருடைய உடலில் அதிகரிக்கும் பொழுது இயல்பாகவே காற்று சக்தி குறைந்து போகின்றது. அப்பொழுது காற்று சார்ந்த உறுப்புகளில் அது பாதிப்பினை ஏற்படுத்தும். இது முப்பூத சீர்கேடு ஆகும். அதை உடலில் காற்று குறையும்பொழுது, இயல்பாகவே ஆகாயம் மிகுந்து விடுகின்றது. அப்பொழுது அந்த உடலில் ஆகாயம் சார்ந்த உறுப்புகளில் அது பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. இது நாற்பூத சீர்கேடு ஆகும். அதே உடலில் ஆகாயம் மிகுந்து விடும் பொழுது, இயல்பாகவே பூமியின் ஆற்றல் குறைந்து விடுகின்றது. அப்பொழுது அந்த உடலில் பூமி சார்ந்த உறுப்புகளில் அது பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

இது ஐம்பூத சீர்கேடு ஆகும். இவ்வாறாக சீர்கேடுகளை உடலில் தோன்றும் அறிகுறிகளைக் கொண்டு அவற்றை வரிசைப்படுத்தி இவற்றில் எந்த பூதத்தில் முதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய வேண்டும் அப்படி முதல் பாதிப்பை கண்ட பூதமே மூல பாதிப்பு பூதம் ஆகும். அந்த பூதத்தினை சமநிலை படுத்தினால், மற்ற பூதங்களில் இயல்பாகவே சமநிலை திரும்பிவிடும்.

இப்பொழுது யாம் கூறிய பாதிப்புகள் யாவும் கட்டுப்பாட்டு சுற்றின் அடிப்படையில் கூறினோம் ஆனால் ஆக்கச் சுற்று, எதிர்வினை சுற்று கட்டுப்பாட்டு எதிர்வினை சுற்று என எந்த சுற்றினாலும் ஒரு பூதம் மற்றொரு பூதத்தினை பாதிக்க வாய்ப்பு உள்ளது. இதனை மருத்துவர் தன்னுடைய சீரிய ஞானத்தைக் கொண்டு கண்டறிய வேண்டும்.

தொடரும்

3

Leave A Reply

Your email address will not be published.