ஆதிமகள் 16

காத்திருந்த காயத்ரி, ஜானகி அம்மாளையும் கரணை எதிர்நோக்கும் மனநிலைக்கு ஆட்படுத்தினாள். இவர்களின் நிலை அறியாது அந்த சூழ்நிலையை புரிந்து கொள்ள முயன்ற சண்முகநாதனுக்கு, காயத்ரியின் திடீர் பரபரப்பு ஆச்சரியத்தை கொடுத்தது.
தனது வீட்டின் வாசல் வரை வந்துவிட்ட கரணை கண்ட காயத்ரி, தன்னிலை மறந்தவளாய் சிலையானாள். காயத்ரியின் அவசரத்தை பார்த்து, அவள் பின்னால் எழுந்து வந்த சண்முகநாதன் கரணை கண்டவுடன் அவனை உள்ளே அழைத்தார்.
மிக இயல்பாக இருந்தான் கரண், புன்னகையை கலைக்காமல் மூவரின் அன்பின் பகிர்வை ஏற்றுக்கொண்டான். உள்ளே சென்று அமர்ந்த கரண் வீட்டை சுற்றிலும் நோட்டமிட்டான். காயத்ரியை பார்த்ததும் வண்டியின் சாவியை அவளிடம் கொடுத்தான். சண்முகநாதனுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. ஜானகி அம்மாள் கரணுக்கு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் கொடுத்தாள். அதை வாங்கி பாதி குடித்துவிட்டு மீதியை வைத்தான் கரண். சண்முகநாதனே பேச்சை ஆரம்பித்தார். “விசாலி மேடம் வீட்ல இருக்காங்களா எனக் கேட்டு வைத்தார்”. கரண் சண்முகநாதனை சார் போட்டு பேசினான். “இல்ல சார் இப்ப என்ன கூட்டிட்டு போக இங்க வருவாங்க. அப்பாவோட பழைய கார் கம்பெனிய மாத்திட்டு, புதிய கார்கள் விக்கிறதுக்கான அப்ரூவல் கிடைச்சுருக்கு. அதுக்கான இடம் ஆல்ட்ரேஷனுக்காக உங்க கிட்டயும் அம்மா பேசணும்னாங்க. அதான் உங்களை பார்க்க இங்க வந்திட்டிருக்காங்க” என்றான்.

சண்முகநாதன் தன் இயல்பிலிருந்து சற்று சுறுசுறுப்பானார். காயத்ரி தன்னுள் நிகழும் முரண்பாட்டால் நின்ற இடத்திலே அலைமோதினாள். ஜானகி அம்மாள் கரணை தராசு தட்டில் வைத்துவிட்டு எடை காண முடியாமல் தடுமாறினாள்.
விசாலி வந்தவுடன் இருவருக்கும் ஏதாவது கொடுக்க வேண்டுமே என ஜானகி அமமாள் அடுக்களை நோக்கி சென்றாள்.
அப்போது சண்முகநாதனுக்கு போன் வர பேசிக்கொண்டே , வீட்டின் வாசல் வரை சென்றார்.
கரண் காயத்ரியை பார்த்து தன் எதிரே இருக்கும் சேரில் கையை நீட்டி “ஏன் நிக்கறீங்க உட்காருங்க” என்றான்,விபரீதம் புரியாமல்.
சிகப்பு நிற சுடிதாரில் மிக திருத்தமாக இருந்தாள் காயத்ரி. அதே நிறத்தில் கரணும் சட்டை அணிந்திருப்பதை காயத்ரி கவனிக்க தவறவில்லை. ஏதாவது கரணிடம் பேச வேண்டுமே என எண்ணம் தோன்றினாலும், எண்ணங்களும் வார்த்தைகளும் ஒரு சேர கூடாததால் உரசாத தீக்குச்சியாய் அமைதி காத்தாள் காயத்ரி.
அங்கும் இங்கும் வீட்டை கவனித்தபடி விசாலியை எதிர்பார்த்து அமர்ந்திருந்த கரண், திடீரென காயத்ரியின் மீது பார்வையை அகற்றாமல் உற்று நோக்கினான். தலை குனிந்து அமர்ந்திருந்த காயத்ரி கரணின் பார்வை கனம் தாங்காமல் தன் எண்ணம் உடைத்து கரணை பார்க்க, இருவரின் பார்வையும் ஒருமித்து லயித்தது சிறிது நேரம். கரண் பிடறி சிலிர்த்து பதறிப்போனான், என்னை மீறி, என்னுள் சென்று, விழி திறக்காமல், புது உயிராய், என் மன ஆழத்தில் உறங்கும் என் ஜீவனை எழுப்பும் இவள் யார், இவளது எந்த லயம் இப்போது என்னை மீட்டுகிறது, அசைவற்ற குளமாக இருந்த என்னை, எது வசீகரித்து இவளையே பார்க்க வைத்தது. இவள் எதை ஜெபித்திருந்தாள் என்னைக் கலைக்க, திடீரென எப்படி இந்த இடமே கனவுலகமாக மாறிப்போனது. இவள் எதிரில் இருந்தால் எல்லோருக்குமே நிகழும் விந்தை தானா இது, மீள முடியா ஜ்வாலைக்குள் நான் மட்டும் எப்படி உறைய முடியும். சில நொடிகள் மட்டுமே அவள் மீது நிலைத்திருந்த என் கண்கள் எதை வாங்கி என்னுள் கொட்டி தீர்த்தது .நான் இப்படி ஆக போன சந்திப்பின் போதே இவள் பார்வையால் என்னுள் மாய விதையை புதைத்து விட்டாளோ, சிறுக சிறுக என்னை இழுத்து கட்டிப்போடும் மந்திரம் இவளிடம் உள்ளதா? இல்லை மந்திரமே இவள்தானா, என பழுக்க காய்ச்சிய உடலாய் அவன் தன்னை உணர்ந்தபோது, அவன் மீது வார்த்தை எனும் நீரை தெளித்தாள் காயத்ரி. அவன் முன்னால் இருக்கும் இனிப்பை எடுத்து சாப்பிட சொன்னாள். தடுமாறினான் கரண்.
அவனுள் தோன்றிய, உணர்ந்த ,எண்ணங்களை இயல்பிலேயே அவன் ஏற்றுக்கொள்ள மறுத்தான். அவனையே அவனாலே நம்ப முடியவில்லை. அவளது முன்னால் அவனால் அமர்ந்திருக்க முடியாமல், அவள் ஜொலிப்பின் வீரியம் தாளாமல் , அவளிடமிருந்து தப்பித்து ஓடி விட வேண்டும் போலிருந்தது அவனுக்கு. தன்னை முழுதுமாய் சிறைப்படுத்தி வசீகர சூழலுக்குள் அவனை அழுத்தும் அவளின் அழகிலிருந்து மீள முடியாமல் தத்தளித்தான். இந்த பிரபஞ்சத்தில் யாருமே இதுவரை இவளை கண்டிராமல், தான் மட்டுமே முதன் முதலாய் இவளை காணும் அதிசயமாய், ஆதிமகனாய் அவன் தன்னை உணர்வதை, தான் உணர்ந்தபோது , அவன் சிலிர்த்துப் போனான்.
எதிரில் அமர்ந்திருந்த காயத்ரிக்கு, சண்முகநாதன் போன் பேசி முடித்துவிட்டு, அவர்களுடன் அவரும் இணைந்து கொண்டது, எண்ணங்களில் சிறு மாற்றத்தை காயத்ரிக்கு தந்தது. கரணுக்கும், நீண்ட நேரம் மூச்சு முட்ட, மூழ்கி இருந்த கடலின் ஆழத்திலிருந்து வெளிவந்த ஆசுவாசம் ஏற்பட, சகஜநிலைக்கு சிந்திக்க துவங்கினான். அவனால் மீண்டும் மீண்டும் காயத்ரியை பார்ப்பதை தன்னால் கட்டுப்படுத்த முடியாததை எண்ணி கலங்கிப் போனான். தனது அம்மா விசாலியை தீவிரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது விசாலி கரணுக்கு போன் செய்து, தான் இன்னும் அரை மணி நேரத்தில் அங்கு வந்து விடுவதாக கூறினாள்.
அவள் வர அரைமணி நேரமாகும் என்று சொன்னதை, கரண் சண்முகநாதனிடம் பகிர்ந்து கொண்டான் , சண்முகநாதனோ கரணை அங்கிருக்கும் உணவையும், காபியையும் சாப்பிட சொல்லிவிட்டு, விசாலி மேடம் வருவதற்குள் தானும் அவர்களுடன் வர தயாராவதாக கூறிவிட்டு , அவர் தனது அறைக்கு சென்றுவிட்டார். ஜானகி அம்மாள் அடுக்களையை விட்டு வந்தபாடில்லை. காயத்ரி கரணிடம் கேட்டாள்.
தொடர்வாள்…
