“தமிழ்நாடு நில உரிமையாளர்கள் மற்றும் வாடகை குடியிருப்பாளர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் சட்டம் – 2017″

தமிழ்நாடு நில உரிமையாளர்கள் மற்றும் வாடகை குடியிருப்பாளர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் சட்டம் – 2017 (Tamil Nadu Regulation of Rights and Responsibilities of Landlords and Tenants Act-2017) – வாடகை அதிகாரம் நிர்ணயம் செய்யும் அலுவலர் நியமனம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை கட்டுப்பாட்டு) சட்டம் முந்தைய கட்டுப்பாட்டுச் சட்டத்தை (அதாவது குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாட்டு சட்டம்) நீக்கப்பட்டு புதிய “தமிழ்நாடு நில உரிமையாளர்கள் மற்றும் வாடகை குடியிருப்பாளர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் சட்டம் – 2017″ என்ற சட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் 22.02.2019 முதல் இந்த புதிய சட்டத்தின் நடைமுறை மற்றும் விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், தமிழ்நாடு நில உரிமையாளர்கள் மற்றும் வாடகை குடியிருப்பாளர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் சட்டம் – 2017 பிரிவு 30ன் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ள கோட்ட அளவில் துணை ஆட்சியர் நிலையில் வாடகை அதிகாரம் நிர்ணயம் செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது அதிகார எல்லைக்குள்ள வருவாய் கோட்டங்களுக்கான வாடகை அதிகாரம் நிர்ணயம் செய்யும் அலுவலராக துணை ஆட்சியர் நிலையில் உள்ள அலுவலரை நியமனம்; செய்ய உத்தரவிட்டுள்ளதன்படி, பின்வரும் வருவாய் கோட்டாட்சியர்கள் / துணை ஆட்சியர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் நான்கு வருவாய் கோட்டத்திற்கும் வாடகை அதிகாரம் நிர்ணயம் செய்யும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர் தாலுகாவை உள்ளடக்கிய திருச்சிராப்பள்ளி கோட்டத்திற்கும், ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் , ஸ்ரீரங்கம், மணப்பாறை, மருங்காபுரி தாலுகாவை உள்ளடக்கிய ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கும், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் ,இலால்குடி, மண்ணச்சநல்லூர் தாலுகாவை உள்ளடக்கிய இலால்குடி கோட்டத்திற்கும், முசிறி வருவாய் கோட்டாட்சியர் ,முசிறி, தொட்டியம், துறையூர் தாலுகாவை உள்ளடக்கிய முசிறி கோட்டத்திற்கும் என மேற்கண்ட அலுவலர்கள் வாடகை அதிகாரம் நிர்ணயம் செய்யும் அலுவலராக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விதிகளின்படி நியமனம் செய்யப்பட்டு தாலுகா அதிகார எல்லைக்குள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட “தமிழ்நாடு நில உரிமையாளர்கள் மற்றும் வாடகை குடியிருப்பாளர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் சட்டம் – 2017” சட்டத்தின்படி தங்களுக்கு உரிய பதிவுகளை மேற்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
