மணப்பாறை மக்களின் இல்லத்தில் ஒரு பெண்ணாக நின்று நிலைத்திருப்பாள் வேப்பிலை மாரி….

0
D1

மணப்பாறை மக்களின் இல்லத்தில் ஒரு பெண்ணாக நின்று நிலைத்திருப்பாள் வேப்பிலை மாரி….

திருச்சி மாவட்டம்…எங்கள் ஊர் மணப்பாறை. வந்தாரை வாழ வைக்கும் ஊர்..சாதி..மத..சகதிக்குள் சிக்காத சமத்துவம் நிலைக்கும் ஊர்…டெல்லிக்கு முன்பே அரசியல் கடந்து நட்பு பாராட்டும் கட்சி நண்பர்கள் நிறைந்த ஊர்…ஒரே இடத்தில் மும்மத கடவுளர்கள் வீற்றிருக்கும் திருவூர் மணப்பாறை.

மணப்பாறை நகரின் மையமாய் வீற்றிருக்கும் வேப்பிலை மாரியம்மன், பின்புறம் முகமதியர் தொழுகை நடத்தும் பள்ளி வாசல், அதன் பின்பு கிறித்தவர்களின் கண்கண்ட தெய்வமாம் புனித லூர்தன்னை தேவாலயம்.

D2

இப்படி ஒரு சிறப்பை இந்தியாவில் வேறெங்கும் கண்டதாக செய்தியில்லை. அன்னை வேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் நாள் முதல் 22 நாள் திருவிழா..காப்புக் கட்டுதலில் இருந்து 16 நாட்கள் வேப்பிலை மாரியம்மன் பல்வேறு அலங்காரங்களில் ராஜவீதி வழியாக பள்ளிவாசல் கடந்து கோயில் நிலையை அடையும்.

தற்போது ரமலான் மாதம் தொழுகை இயல்பாக நடந்து கொண்டிருக்கும். வேப்பிலை மாரியம்மன் கோயிலில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். தேவாலயத்தில் அட்டியின்றி திருப்பலி பூசை நடக்கும்.

கடந்த பல வருடங்களுக்கு முன்பு நடந்த வேப்பிலை மாரியம்மன் கோயில் ராஜகோபுர குடமுழுக்கு விழாவானது புனித ரமலான் தினத்தன்று வந்ததால், முஸ்லிம் ஜமாத்தார் அவர்களுக்குள் பேசி ரமலான் தொழுகையை ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் அன்று நடத்தினார்கள் என்பது பெரும் சிறப்பு.

வேப்பிலை மாரியம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணியிலிருந்து பள்ளிவாசல் பக்கத்தில் இருக்கும் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து பால்குடங்கள் புறப்பட்டு ராஜ வீதிகளின் வழியாக கோயிலை பகல் 11 மணி வரை வந்தடைந்தன. கிட்டத்தட்ட 3 வயது குழந்தை முதல் 90 வயது பெரியவர் வரை பால்குடம் தாங்கி வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். இதில் முஸ்லிம்…கிறித்தவர்களும் அடக்கம். இவ்வருடம் 15000 பேர் பால் குடம் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

மணப்பாறை வேப்பிலை மாரியம்மனை தெய்வமாக பார்ப்பதை விட தமது வீட்டுப் பெண்ணாக மக்கள் பார்க்கின்றனர். இதனால், வருடா, வருடம் பால்குடம் எடுப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் கூடுகிறது.

உறவினர் வீடுகளுக்கு வருகை தரும் விருந்தினர்கள் ஏதாவது கோரிக்கையை வைத்து அம்மனை வேண்டுகின்றனர். அது நடந்து விட்ட நம்பிக்கையில் மறுவருடம் குடும்பத்துடன் பால் குடம் எடுக்கின்றனர். ஒரு குடும்பத்தில் மூன்றிலிருந்து, ஐந்து பேர் வரை கையில் காப்புக் கட்டி, மஞ்சள் உடையுடன் பால் குடம் எடுக்கிறார்கள்.

திங்கள்கிழமை அதிகாலை வேப்பிலை மாரியம்மனுக்கும், காவல் தெய்வமான முனியப்ப சாமிக்கும் பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் மக்கள் வழிபடுவார்கள்.

N2

பின்னர், ஏராளமான பெண்களும், ஆண்களும் அக்கினிச் சட்டி ஏந்தி வந்தும், வேல், சிலா குத்தி வந்தும் வேப்பிலை மாரியை வழிபடுகின்றனர்.

அன்றைய தினம் மாலையில் தெருவாரியாக பெண்கள் குலவைச் சத்தத்துடன், தப்பாட்டம் நடக்க, கொம்பு வாத்தியங்கள் முழங்க முளைப்பாரி எடுத்து வந்து அம்மனை வழிபடுகின்றனர். அதன்பின்னர், காட்டு முனியப்பன் கோயிலில் இருந்து குதிரை வாகனத்தில் அம்மன் கையில் அம்புடன் எழுந்தருளும் வேடுபரி நிகழ்ச்சி காண பல்லாயிரக் கணக்கான மக்கள் திரள்கின்றனர்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அம்மனிடம் முறையிட்டு வேண்டுகின்றனர். மறுவருடம் குழந்தை பிறந்த மகிழ்வில் கரும்பிலே தொட்டில் கட்டி, குழந்தையை அதில் கிடத்தி கோயிலுக்குத் தூக்கி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய இருதினங்களும் மணப்பாறை நகரெங்கும் பல்லாயிரம் பேர் திரள்வதால் ஊரே சிரமப்பட்டு மூச்சு விடும் நிலையில் இருக்கிறது.

ஆனபோதும், அன்னை வேப்பிலை மாரியவள் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தையாக…வயது வந்த பெண்ணாக..தாயாக…காக்கும் தெய்வமாக என பல வடிவங்களில் உயிரோடும்…உணர்வோடும் கலந்திருக்கிறாள்..

வெறும் தெய்வ கோசம் என்பதைக் காட்டிலும், தமது கொடி வழி உறவு எனும் பந்த கோஷம் இங்கு கேட்கும். தாயே..தமிழே..அம்மா…அன்பே.. மகமாயி எனும் மந்திரச் சொல்லே எல்லோர் வாயிலும் வந்து ஒலிக்கும்..

சாதியும்…மதமும்…மணப்பாறையை நெருங்க விடாமல்.. சமத்துவத் தாயாக வேப்பிலை மாரியம்மன் திகழ்வது எம் மக்களுக்கு பெரும் பாதுகாப்பு..

அன்பையும்…சகோதரத்துவத்தையும்..ஒற்றுமையையும் நிலைநாட்டும் இந்தத் திருவிழா போல் இன்னும் ஆயிரமாண்டுகள் தொடர வேண்டும்…!

நட்புடன்

மணவை தமிழ்மாணிக்கம்

N3

Leave A Reply

Your email address will not be published.