நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் அந்தநல்லூர் ஒன்றியம் கீரிக்கல்மேடு, போசம்பட்டி கிராமத்தில் கடந்த 10ம் தேதி தொடங்கி வரும் 16ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இரண்டாமாண்டு தோட்டக்கலை மாணவிகள் பங்கேற்கும் இச்சிறப்பு முகாமின் நான்காம் நாளான நேற்று காலை டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு பேரணி இவ்வூர் மக்கள் மற்றும் குழந்தைகளுடன் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இலவச பொது மருத்துவ முகாமானது அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவர் டாக்டர். ஓ. அஜிதா அவர்களால் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் சாந்தி வழிநடத்துதலின்படி சிறப்பாக நடைபெற்றது.

இதில் 120 பேர் பயனடைந்தனர். மருத்துவ முகாம் நடைபெற்று முடிந்தவுடன் மகளிர் சுகாதாரம் மற்றும் நலம் பற்றிய விழிப்புணர்வு பற்றி டாக்டர் ஓ. அஜிதா உரையாற்றினார்.
ரத்ததானம் மற்றும் உடல் உறுப்புதானம் பற்றி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆற்றுப்படுத்துனர் ஜான்மேரி எடுத்துரைத்தார். மாலை விவசாயிகளுக்கான மத்திய மற்றும் மாநில அரசு தோட்டக்கலை திட்டங்கள் குறித்து தகவல் பரிமாற்ற கருத்தரங்கில் விராலிமலை, தோட்டக்கலை உதவி இயக்குநர் முருகன் கலந்து கொள்வார்.
