ஜெ.பிரான்சிஸ் கிருபா வாழ்க்கையை தெளிப்படுத்த உதவுங்கள்..!

0
Business trichy

ஜெ.பிரான்சிஸ் கிருபா வாழ்க்கையை தெளிப்படுத்த உதவுங்கள்..!

நேற்று கொலையாளி என்ற சந்தேக முத்திரைக் குத்தப்பட்ட கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர்,பிரான்சிஸ் கிருபாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம். இவருக்குத் திருமணமாகவில்லை. சென்னையிலேயே தங்கியிருந்தார். மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக்காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். மேலும், கன்னி என்கிற புதினத்தை எழுதியுள்ளார். 2008-ல் சுந்தரராமசாமி விருதும் 2017-ல் சுஜாதா விருதும் பெற்றுள்ளார். `கன்னி’ என்ற புதினத்திற்காக 2007-ல் ஆனந்த விகடன் விருது பெற்றுள்ளார்.

அவரின் படைப்பில் ஒரு சாம்பிள் இதோ:

Image

மழை பெய்யும் போதெல்லாம்

Rashinee album

மழை பெய்யும் போதெல்லாம்
நிலைகுலையும் ஒருமனிதன்
இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவான்
சின்னஞ்சிறு மழையோடு.
குடையேதும் கண்டிராதவன்.
வானம் ஒரு ஒப்பந்தம்
அவனோடு செய்வதாக நம்புகிறான்
சற்றே நீளமான கையெழுத்தைத்தான்
கால்களால் இட்டபடி திரிகிறான்
நீரோட்டமோ அவன் அடையாளங்களைப்
புரட்டிப் போட்டுக்கொண்டே ஓடுகிறது
அவனது ஒரே லட்சியம்
மழையில் நனைவதுதான்
எத்தனையோ மழைக்காலங்களுக்குள்
ஏங்கி அலைந்தும்
ஒரு துளிகூட அவன் நனைந்ததேயில்லை.
துரும்புபோல் மெலிந்தவனாக
உடல் வாய்த்ததால்
மழைத்துளிகளின் இடைவெளிகளே
எங்கும் வாய்த்தன.
எல்லா மழைக்காலங்களிலும்
அவனுக்கு முன்னே பெருமழையொன்றும்
நடந்து வருவதுண்டு.
அதோ வெள்ளத்தில் படகுபோல
ஒரு துளி கூட நனையாமல்
பெரும் மழையின் பெரும் இடைவெளியில்
ஆடி வருகிறது அவன் வீடு

இந்த சூழலில் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஒருவரின் சடலத்தின் அருகில் பிரான்சிஸ் கிருபா அமர்ந்திருந்தார். இதனால் சடலமாக கிடந்தவரை பிரான்சிஸ் கிருபா கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது. இந்தத் தகவல் தமிழ் வாசகர் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அங்கிருந்த சிசிடிவி கேமாராவை சோதித்த போலீஸார், மாரடைப்பால் மரணமடைந்ததும் அவரை காப்பாற்ற பிரான்சிஸ் கிருபா முயற்சி செய்ததும் தெரிய வந்தது. ஆனாலும் இறந்து கிடந்தவருக்கும், கிருபாவுக்கும் முன்பின் தெரியாது. அப்படியிருக்க, ஏன் அவரை இவர் கொல்ல வேண்டும் என்கிற கோணத்தில் விசாரித்து வந்த போலீஸாருக்கு இன்றுதான் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின் தகவல் வந்தது. அதில் இறந்து கிடந்தவர் இயற்கையாகத்தான் மரணம் அடைந்திருக்கிறார். அவரை பிரான்சிஸ் கிருபா கொலை செய்யவில்லை என்றும் அதில் உள்ள நிலையில் போலீஸார் அவரை விடுதலை செய்து விட்டார்கள்.

சமீபகாலமாக குடிப் பழக்கத்தால் கொஞ்சம் தன்னிலை மறக்கும் சூழலில் வாழும் பிரான்ஸிசுக்கு எழுத்தாளர் சங்கம் அல்லது இயக்குநர்கள் சங்கம் உரிய உதவி செய்து சிகிச்சை அளிக்கும் பட்சத்தில் தமிழுக்கும் உதவி செய்யும் நிறைவுக் கிடைக்கும் என்று தமிழ் படிப்பாளிகள் ஏங்குகிறார்கள்..

Ukr

Leave A Reply

Your email address will not be published.