அறிவோம் தொல்லியல்-13 பயணங்கள் முடிவதில்லை…

0
1

அகழாய்வுக்குழிகள்:

செம்பியன் கண்டியூரில் கைக்கோடாரியில் கிடைத்த குறியீடுகள் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த குறியீடுகள் பெருங்கற்கால தாழிகள், பாறைஓவியங்களில் மட்டுமே கிடைக்கும்.

முதற்குழி:

4

சண்முகநாதன் ஆசிரியர் தோட்டத்தில் 4×4 மீட்டரில் முதற்குழி தோண்டப்பட்டது. இக்குழி சாம்பல்மேடாக காட்சியளித்தது. இதனுள்ளே கருப்பு, கருப்புசிவப்பு பானையோடுகள் இலகுவாக கிடைத்தது! மேலும் இரும்பு ஆணிகள், உடைந்த கைபிடி, குறியீடுகள் உள்ள பானையோடுகள்  முதலிய பொருட்கள் முதல் அடுக்கில் சேகரிக்கப்பட்டது,

இரண்டாம் அடுக்கில் 

கடினமான களிமண் கிடைக்க ஆரம்பித்ததால் அகழாய்வு  நிறுத்தப்பட்டது, இதில் சிறிய பானையொன்று சேகரிக்கப்பட்டது.

இக்குழியின் மொத்த ஆழம் 1.65 மீட்டர்.

 

இரண்டாம் குழி:

இக்குழி சண்முகம் உடற்பயிற்சி ஆசிரியரின் புஞ்சை நிலத்தில் தோண்டப்பட்டது. இக்குழியும் 4×4 அளவில் அகழப்பட்டது. இக்குழி கடினமான களிமண் கிடைத்தபோதிலும் 8 முதுமக்கள் தாழிகள் கிடைத்தது!

 

தாழிகள் கிடைத்த குழியின் மொத்த தடிமன் 1.20 மீட்டர். இரு தாழிகள் மட்டும் வாய் மூடப்பட்ட நிலையில் இருந்தது, இக்குழியில்தான் அதிகளவு பானையோடுகள், கிண்ணம், தட்டு, குவளை,ஆகியவை சேகரிக்கப்பட்டன. இங்கு கிடைத்த பானையோட்டில் ஸ்வஸ்திக் சின்னம் பொறித்த குறியீடு, உடுக்கை, இருமுக்கோண வடிவங்கள் போன்ற குறியீடுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கடுத்து உள்ளூர் தெருவில் ஒரு ஆய்வுக்குழியும், படையாட்சித்திடல் என்ற பகுதியில் ஒரு குழியும் தோண்டப்பட்டது. இவற்றில் மூன்றாம் குழியில் புதியகற்கால கோடாரி ஒன்று கிடைத்தது, வட்டுச்சில்லுகள், கருப்புசிவப்பு பானையோடுகள், எலும்புத்துண்டுகள் கிடைத்தன.

 

தொல்பொருட்கள்:

 

பெருங்கற்கால பண்பாட்டைச்சேர்ந்த இரும்புப்பொருட்கள் நிறைய கிடைத்தது இங்கு, கோவை, அழகன்குளம்,  விழுப்புரம் பகுதிகளில் கிடைக்கும் சுடுமண்பொம்மைகள் இங்கும் கிடைக்கிறது!

சங்கஇலக்கியத்தில் வரும் பெண்கள் விளையாட்டான வட்டகல்லுச்சில்லுகள் இங்கே அதிகம் கிடைக்கிறது!  சுமார் 25 வகை சுடுமண் கிண்ணங்கள் சேகரிக்கப்பட்டது.

 

இங்கு கிடைத்துள்ள புதியகற்கால கோடாரியை ஆராய்ந்தால் ஒரு உண்மை புலப்படும், இக்கோடாரி பெருங்கற்கால மக்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும், வழிவழியாய் இங்குள்ள மக்கள் தங்கள் மூதாதையர்களின் நினைவாக இவற்றை போற்றிப்பாதுகாத்து வணங்கியிருத்தல் வேண்டும்.

இங்கு கிடைத்த தொல்பொருட்கள் அடிப்படையில் இதன் தொன்மை கி.மு500 முதல் கி.பி300 வரை தொடர்ச்சியான Settlement அமைந்தது தெரியவருகிது. இங்கு கிடைத்த பொருட்கள், மற்றும் பூகோள அமைப்பின்படி ஆராய்ந்தால் விவசாயம் இங்கு பிரதான தொழிலாக இருந்திருக்கும். வாழ்விடம் சார்ந்த சான்றுகள் நிறைவாக கிடைக்காததால், பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் அடிப்படையிலேயே ஆராய முடிகிறது.

 

செம்பியன் கண்டியூர் குறியீடுகள் ஒரு ஒப்பாய்வு:

 

இங்கு கிடைத்த குறியீடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது, ஆதிச்சநல்லூர், சிந்துசமவெளி இரு  இடங்களிலுள்ள குறியீடுகள் இங்கே வருகிறது!

 

செம்பியன்  கண்டியூர்  பெருங்கற்படைக் கால  வட்டிலில்  உள்ள குறியீடுகளோடு  ஹரப்பா  குறியீடுகள்  ஓர்  ஒப்பாய்வு

 

செம்பியன் கண்டியூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், பெருங்கற்படைக் காலத்திய தாழிகள், கருஞ்சிவப்பு பாண்டங்கள், குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், மனித எலும்புகள் மற்றும் சாம்பல் மட்பாண்டங்களும் கிடைத்தன. முழு வடிவ மட்கலங்களில் மீன், சூரியன், விண்மீன், உடுக்கை, ஸ்வஸ்திகா போன்ற குறியீடுகளும், கோண வடிவியல் குறியீடுகள் காணப்படுகிறது!

 

 

அகழாய்வு செய்யப்பட்ட பானைகள் மற்றும் வட்டில்கள் சிலவற்றில், அம்புக் குறியீடுகள் இருமுறை அடுத்தடுத்து செதுக்கப்பட்டுள்ளது, அதுவும், சிந்து வெளித் தகடுகளில் அமைந்தது போன்று அதேபோல் இருமுறை மீண்டும் மீண்டும் பதிவிடப்பட்டிருக்கிறது. அம்புக்குறியீடுகள் சிந்துசமவெளி குறியீட்டை ஒத்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இந்தக் கண்டுபிடிப்புகள், ஹரப்பாவில் வாழ்ந்த வேளிர்களின் தென்னோக்கிய வரவை மேலும்பறைசாற்றும் வண்ணம் உள்ளது.

(நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி,

செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை,

2

உவரா ஈகை, துவரை ஆண்டு,

நாற்பத்தொன்பது வழிமுறை வந்த

வேளிருள் வேளே.

என வேளீர் தோற்றம் குறித்து கபிலர் பாடியது)

 

ஒரு வட்டிலில், இரண்டு குறியீடுகள் என்னை மிகவும் கவர்ந்தன. நாம அமைப்பு கொண்ட குறியீடு இரண்டு முறை தொடர்ந்து பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொன்று ஏர்முனை போன்ற அமைப்பு.

 

தீட்டல் செதுக்கப்பட்ட மற்பாண்டம்: 

 

மட்கலம், வட்ட வடிவ கருஞ்சிவப்பு நிறத்தால் ஆனது. கோயம்பதூரைச் சேர்ந்த சூலூர் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தட்டில் போன்று அகப்பக்கமாய் குறியீடுகள் பொறிக்கப்படாமல் பாண்டத்தின் வெளிப்புறம் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பு. கடைசி இரண்டு குறியீடுகளும் ஒன்றற்கொன்று இணைக்கப்பட்டிருப்பது, ஒரு வாசகமாக இருக்கலாம் எனும் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.

 

பெருங்கற்படை குறியீடுகள்:

 

வட்டிலில் இடப்பட்ட கீறல்கள் இரண்டும் கீழே விளக்கப்பட்டுள்ளன. (இடமிருந்து வலமாக)

 

1, மூன்று அகடுகளும் மூன்று முகடுகளும் கொண்ட ஒரு அலை வடிவ

வளை கோடு.

  1. ஒரு U வடிவ அமைப்பினுள்ளே, ஒரு மையக் கோடு U வடிவத்தை

இரண்டாகப் பிரிக்கிறது. மையக் கோடு மேல் பகுதியில் நீண்டு

துருத்திக் கொண்டு நிற்கிறது. இரண்டு U  வடிவக் கீறல்கள், ஒன்றை

ஒன்று மேல் விளிம்பில் இணைக்கின்றன..

 

சிந்துச் சமவெளி குறியீடுகளுடன் ஓர் ஒப்பீடு:

 

(குறியீட்டு எண்கள் ஐராவதம் மகாதேவனின் சிந்து வெளி குறியீடுகளின் அட்டவணைப்படி எடுத்தாளப்பட்டுள்ளன)

 

குறியீடு 1:

 

இது சிந்து வெளிக் குறியீட்டு  குன்றை  ஒத்துள்ளது. குன்று அமைப்பின் சற்றே திரிந்த நிலை  கொண்ட கீறல் ஆகும். பொதுவாக மூன்று முக்கோணங்கள் பக்கவாட்டில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டால் போன்ற அமைப்புடையது.  அடித்தளத்திலிருந்து கிளம்பிய மூன்று முக்கோணங்கள் போன்று காட்சி அளிக்கும். இதனின்றும் திரிந்த குன்று  அமைப்புகளும் மகாதேவனால் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன.   (மூன்று முக்கோணங்களும் அதன் ஒவ்வொரு சிகரத்திலும் மூன்று கோடுகளும் அமைந்த வடிவம்),  (மூன்று முக்கோணங்களும் சற்றே 45 பாகை இடப்புறம் சரிந்தது போன்ற அமைப்பு),  (இடப்பக்கம் இருந்து 90 பாகை செங்குத்தாக நிலை நிறுத்தியது போன்ற உருவம்) மற்றும்  (அடிகோடு இல்லாத மூன்று முக்கோணங்கள் நிமிர் நிலையில் உள்ள கோலம்). இந்த கோலம் 90 பாகை வலது புறம் திருப்பியது போன்ற நிலை செம்பியன் கண்டியூர் வட்டிலில் உள்ள வடிவம் என்பது தெளிபு.

 

குறியீடு 2:

 

உரல் உலக்கை அல்லது நாம வடிவத்தைக் கொண்ட குறியீடு. ஐந்துக்கும் மேற்பட்ட திரிநிலைகளைக் கொண்ட ஆம் அட்டவணை எண் ஆகும். சில உலக்கைகளின் அடிப்பகுதி (பிடங்கு) குமிழ் அமைப்பிலும், சில முக்கோண வடிவு தலைகீழாகப் புரட்டப்பட்ட நிலையிலும், சிலவற்றில் நடுக்கோடு ஒன்று U  மற்றும் V வடிவ உரலுக்கு மத்தியில் இருப்பதுபோன்ற நிலையிலும் இருக்கின்றன. திரிபு எண் மற்றும்  ஒன்றற்கொன்று சிறு மாற்றங்கள் உடைய குமிழ் தோற்றம் கொண்ட பிடங்கையும்,  கவிழ் நிலையில் உள்ள முக்கோணப் பிடங்கையும்,  உலக்கைக்குப்பதில் வெறும் முக்கோணமாகவும்,  U வடிவ உரலும் வரி வடிவ உலக்கையையும்,  U  தோற்றம் கொண்ட குழாயும் நீள் கோட்டு வடிவ சற்றே வெளி நீண்ட உலக்கையையும்,  V  வடிவ கூம்பும், மத்தியில் உலக்கையும் கொண்ட மாற்று அமைப்புகள் ஆகும். பெருங்கற்படைக் காலத்தைச் சார்ந்த குறியீட்டுக் கீறல்கள் கொண்ட செம்பியன் கண்டியூர் வட்டில் ஒன்றும், சிந்து வெளி தகடுகளில் பொறிக்கப்பட்டுள்ள கீறல்களுக்கு ஒத்த அமைப்பு கொண்ட குறியீடுகளும், அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள பண்பொத்த குறியீடுகள்  மற்றும் அவற்றின் திரிபுகளும்  காட்டப்பட்டுள்ளன.

 

நாமம் அல்லது உரல் உலக்கை இடுகுறி இரு முறை மீண்டும் மீண்டும் வருவது,இது வரை எந்த சிந்து வெளித் தகட்டிலும் அல்லது படத்திலும் இப்படி வந்ததில்லை.

 

 

இவ்வூரை சுற்றியிலுள்ள ஊர்கள் இன்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாய் உள்ளது கூடுதல் சிறப்பு.

 

வரும் வாரம் முதல் தொல் தமிழ் எழுத்துகளான பிராமி எனப்படும் தமிழி எழுத்துக்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியினை பார்ப்போம்.

 

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்