ஆதிமகள் 15

0
1 full

தனது அம்மா ஜானகி அம்மாளிடம், தன்னை பாதித்த கரணை பற்றி பேசிவிட காயத்ரி முடிவு செய்தாள். வழக்கம் போல் ஜானகி அம்மாளை நாற்காலியில் அமர வைத்து அவளது காலடியில் அமர்ந்து ஜானகி அம்மாளை அண்ணாந்து பார்த்தபடி காயத்ரி பேச ஆரம்பித்தாள். வார்த்தைகள் ஏதும் இன்றி அவளது முகத்திலும், உடலிலும் அவளது உணர்வுகள் திமிறி வெளிப்பட இதழ் திறந்தவள், மௌனித்து பின் வாய்திறந்து பேசினாள்.

நெருப்பில் போட்ட தங்கமென, வெந்து கொண்டிருக்கும் தனது எண்ணங்களை வார்த்தைகளாய் ஆபரணமாக்கி, ஜானகி அம்மாவின் கையில் கொடுக்க, பொற்கொல்லனாக தவமிருந்த காயத்ரி. தவம் கலைந்து வார்த்தைகள் நாவில் ஏற,உள்ளிருக்கும் ஜ்வாலையால் அவளே தங்க ஆபரணமாய் ஜொலித்தாள்.

ஜானகி அம்மாள் காயத்ரியின் அத்தனை போக்கையும் கவனித்து ஆச்சரியத்தில் மௌனித்து போனாள். தன் பெண்ணின் ஆனந்த களிப்பை, ஆட்டத்தை, பார்ப்பதும், ரசிப்பதும் அதனுள் ஊடுருவி தானும் களிப்பதும், ஆடுபவளின் உள்ளே புகுந்து லயித்து அவளின் உணர்வாய் தானும் மாறிப் போவதும் ஜென்ம பந்தத்தின் தொடர்ச்சி அன்றி வேறென்னவாக இருக்க முடியும்.

2 full

காயத்ரி பேசுவதற்கு முன்பே அவள் என்ன சொல்ல போகிறாள் என்பது ஜானகி அம்மாவுக்கு புரிந்து போனது, அவள் பேசப்போவது இந்த இரண்டொரு நாளில்,அவளை பாதித்த ஏதோ ஒரு விசயமாகவும் இருக்கலாம் என ஜானகி அம்மாள் யூகித்தாள்

ஒரு முறை காயத்ரியின் அப்பா சண்முகநாதன், மாப்பிள்ளை பார்க்கும் படலத்தின் போது, காயத்ரி தன்னை பெண் பார்த்து போகும் மாப்பிள்ளை யாரையும் பிடிக்கவில்லை என்றுசொன்னபோது, “நீ வேறு யாரையும் விரும்புகிறாயா என காயத்ரியிடம் கேட்டபோது, அதற்கு காயத்ரி, “எனக்கு யாரையும் பிடித்திருக்கிறது என்றால் உங்களிடம் சொல்வதற்கு எனக்கு என்ன தயக்கம்இருக்கப்போகிறது,” என கூறியது ஜானகி அம்மாளின் நினைவுக்கு வந்து போனது.

காயத்ரி பேச தயங்குவது போல் இருந்தாலும் வார்த்தைகள் தெளிவாகவும், உற்சாகத்துடனும், தீர்க்கமாகவும் பேசினாள். நேற்று இரவு வந்து சென்ற விசாலியை பற்றி பேசினவள், அவர்களின் நிலையை அவர்கள் மூலம் கேட்டறிந்ததை சொல்லிவிட்டு முடிவாக அவர்களது மகன் கரணை தனக்கு பிடித்திருப்பதை நேரடியாக சொல்லாமல் சுற்றிவளைத்து பேசிக்கொண்டிருந்தவள், விசாலிபற்றியோ, அவர்களது குடும்பம்பற்றியோ, கரணைப்பற்றியோ பேசும்போது எந்தவித இடர்பாடும் இன்றி, தன் மனதில் உள்ளதை உள்ளவாறே பேசினாள். ஒவ்வொரு பேச்சின் முடிவிலும், தனக்கு கரணை பிடித்திருப்பதையே மறைமுகமாக ஆனால் அழுத்தமாக கூறிவந்தாள்.

காயத்ரி, யாரை பற்றியும் இப்படி ஆணித்தரமாக பேசி ஜானகி அம்மாள் பார்த்ததில்லை. காயத்ரி எதற்காக இப்படி சுற்றி வளைத்து பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதை புரிந்துகொண்ட ஜானகி அம்மாள், காயத்ரி பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தவள், பின்பு காயத்ரியிடம் நிதானமாக கேட்டாள். கரண் குடும்பத்தைப்பற்றி தெரிந்து கொண்ட உனக்கு கரணைப் பற்றி என்ன தெரியும் என்று கேட்டாள். ஒரே முறை. அதுவும் சில நிமிடங்கள் வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து, உனக்கு சரியானவன் இவன் என்று எப்படி முடிவெடுத்தாய் என்று கேட்டாள் ஜானகி அம்மாள்.

இந்த கேள்வியை எதிர்பார்க்காத காயத்ரி சற்று தடுமாறி போனாள். பின்பு சுதாரித்துக்கொண்டு, “ஜாதி, மதம், குடும்பம் பார்த்து ஒருவனை நேரில் நிறுத்தி இவனை பிடித்திருக்கிறதா என கேட்கும் அந்த சில நிமிட நேரத்திற்கும் நான் கரணை பார்த்து பிடித்திருக்கிறது என்று சொன்னதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது” என ஜானகி அம்மாளிடம் கேட்டாள் காயத்ரி, ஜானகி அம்மாளுக்கு யோசித்து பதில் கூற அவகாசம் தேவைப்பட்டது.

நிலைமையை சமாளிக்க முடியாதபோது, கேள்விகளுக்கு பதில் கிடைக்க யோசிக்க முடியாமல் போகும் போது, கடந்த காலங்களில் பழகிப்போன, ஆனால் இன்னும் உயிரோட்டமுள்ள வார்த்தைகளாக தனக்குள் விதைத்து வைத்திருக்கும் “சரி சரி எதாக இருந்தாலும் அப்பாகிட்ட பேசிக்கலாம்” என பேசி அந்த சூழலுக்கு ஜானகி அம்மாள் முற்றுப்புள்ளி வைத்தாலும், காயத்ரி விடுவதாக இல்லை.

மேலும் அவளே தொடர்ந்தாள். “நான் அவனை பிடித்திருக்கிறது என்று தானே சொன்னேன். கல்யாணம் செய்துக்கறேன்” என்று சொன்னேனா?” என பேச்சை மழுப்பினாள். ஜானகி அம்மாள் காயத்ரியை உற்றுப் பார்த்தாள். அவளுக்கு  தனது மகள் தன்னுடைய பேச்சை ஒரு போதும் மீற மாட்டாள் என நம்பிக்கை கொண்டாள். அதே நேரம் காயத்ரியின் ஆசை விருப்பம் சரியானபடி இருந்து அதை நிறைவேற வேண்டுமே என ஆதங்கப்பட்டாள்.

ஏதோ மிகப்பெரிய கனத்த பாரத்தை தான் மனதில் ஏற்றுக் கொண்ட உணர்வை அடைந்திருந்தாள் ஜானகி அம்மாள். ஆனால் காயத்ரி, மனதில் கனத்த சுமையை இறக்கி விட்டது போல் லேசாக இருந்தாள். அப்போது வீட்டிற்கு வெளியே யாரோ வரும் சத்தம் கேட்க, காயத்ரி பரபரப்பானாள். வேகமாக வீட்டிற்கு வெளியே சென்று பார்த்தபோது அப்பா ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டிற்குள் வந்தார். வந்தவர், தன் எதிரில் நின்றிருந்த காயத்ரியை பார்த்துவிட்டு “என்னம்மா ஏதும் விசயமா” என சகஜமாக கேட்டார். காயத்ரி எங்கோ வெளியில் செல்ல கிளம்பி இருப்பதாக நினைத்துக் கொண்டார்.” ஆட்டோவை நிக்கச் சொல்லட்டுமா” என கேட்டுவிட்டு காயத்ரியை பார்த்தார். காயத்ரி அம்மாவை பார்த்தாள்.

சண்முகநாதனும் ஜானகி அம்மாளை பார்க்க, ஜானகி அம்மாள் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.  சண்முகநாதன் அங்குள்ள சோபாவில் அமர்ந்தார்.  ” நம்ம வீட்டுக்கு யாரும் வர்ராங்களா?” என ஜானகி அம்மாளை பார்த்து கேட்டார்.

ஜானகி அம்மாள் காயத்ரியை பார்த்தாள், காயத்ரி சண்முகநாதனிடம் கரண் தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வருவதாக விசாலி சொன்னதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வீட்டிற்கு வெளியே ஸ்கூட்டியின் சத்தம் கேட்டது. காயத்ரி வேகமாக சென்று வெளியே பார்த்தாள். அங்கு கரண் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு கேட்டை திறந்து கொண்டு நின்றிருந்தான்.

3 half

Leave A Reply

Your email address will not be published.