முகநூல் தறுதலைகள் – ஜாக்கிரதை !

0
D1

முகநூலில் அலையும் தறுதலைகள் – ஜாக்கிரதை !

 

ரோஸ் மேரி. பெயருக்கேற்றவாறு செக்கச்செவேலென்று முகநுால் போட்டோவில் ஜொலித்துக் கொண்டிருந்தாள். சமீபத்தில் எனது முகநுாலில் நண்பியாக இணைந்திருந்தாள். லண்டனில் பிறந்த வெள்ளைக்காரி, என்னோடு நட்பு பாராட்டியது பெருமிதமாக இருந்தது.

D2

அவ்வப்போது ஹாய் என்று கூறிவந்தவள், முகநுாலை தவிர்த்து விட்டு வாட்ஸ் அப்பில் ஒவ்வொரு நாளும் நலம் விசாரித்துக் கொண்டிருந்தாள். தற்போது அமெரிக்காவில் வசிப்பதாகவும், கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றிருப்பதாகவும், 5 வயது மகளுடன் தனியாக இருப்பதாகவும் தனது குடும்ப விஷயங்களை நான் கேட்காமலேயே என்னோடு பகிர்ந்து கொண்டாள்.

 

பேஷன் டிசைனராக பணியாற்றி வருவதாக கூறிய அவள், அது தொடர்பான புகைப்படங்களையும், அந்த மாடல்களோடு நின்று கொண்டிருக்கும் செல்பி போட்டோக்களையும் எனது பார்வைக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள். காதலர்கள் செல்லமாக அழைத்து கொள்ளும் வார்த்தைகளை தனது பதிவில் அதிகமாக பயன்படுத்தி வந்தாள்.

 

அதேபோல் இரவு எந்நேரமாக இருந்தாலும், படுக்கையில் துாங்க சென்றவுடன் தான் அணிந்திருக்கும் மெல்லிய நைட்டி உடையுடன் எடுக்கப்பட்ட செல்பி படத்தை தவறாமல் எனக்கு அனுப்பி வைத்து குட்நைட் என்று கூறி அன்றைய நாளை முடித்து வைப்பாள்.

 

இந்நிலையில், தனது மகளுடன் இந்தியா வர விரும்புவதாகவும், புதிய வீடு ஒன்றை விலைக்கு வாங்க போவதாகவும், அதற்கு நான் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். இரண்டு பெட்ரூமுடன் உள்ள சிறிய அளவிலான வீடு, என்ன விலை இருக்கும் என்று மிகுந்த ஆர்வத்துடன் விசாரித்தாள்.

 

எவ்வளவு லட்சமாக இருந்தாலும் கவலையில்லை என்று கூறிய அவள், விவாகரத்திற்காக கோர்ட் உத்தரவின்பேரில் கணவரிடமிருந்து கிடைத்த தொகையை ஏதாவது ஒன்றில் முதலீடு செய்ய விரும்புவதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறினாள். பேஷன் டிசைனராக இருப்பதால் தேவைப்படும் துணிகளை வாங்க அடிக்கடி இந்தியா வரவேண்டியிருக்கும் என்பதால் தங்குவதற்காக வீடு வாங்கயிருப்பதாகவும், அதன்பின்னர் 10 ஆண்டுகளுக்கு பின்பு அதை விற்றுவிட்டு பணத்தை வேறு ஏதாவது ஒன்றில் முதலீடு செய்து கொள்கிறேன், என்றாள்.

 

N2

இதில் எனது ஆலோசனைதான் முக்கியம் என்று அடிக்கடி கூறிய அவள், எனது வீட்டிற்கு வந்து மனைவி, குழந்தைகளை சந்திக்க விரும்புவதாகவும், ஒருசில நாட்கள் வீட்டில் விருந்தினராக தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். அதன்பின்னர் ஒருநாள் இந்தியா வருவதற்கு விசா பெற்று விட்டதாகவும், நாளை மறுநாள் விமானத்தில் வரஇருப்பதாக தெரிவித்தாள்.

 

இரண்டொரு நாளுக்கு பின்பு விமானத்தில் ஏறிவிட்டதாக தகவல் அனுப்பினாள். அதன் பின்னர் டில்லி விமான நிலையத்தில் இறங்கி விட்டதாகவும், கஸ்டம்ஸ் அலுவலகத்திற்குள் நுழைய இருப்பதாக கூறிவிட்டு செல்போனை சுவிட்ஸ் ஆப் செய்து விட்டாள். சிறிது நேரத்துக்கு பின்பு எனது செல்போனில் ஒரு அழைப்பு வந்தது.

 

டில்லி விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பெண் ஒருவர், ரோஸ் மேரி என்பவரை உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார். ‘அவர் யார்’ என்று நான் திருப்பி கேட்டவுடன், அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார். இந்தியாவில் உங்களை மட்டும்தான் தெரியுமாம். அவரது கைப்பையில் அளவுக்கு அதிகமாக 50 லட்சம் வரை பணம் உள்ளது. இங்கு முதலீடு செய்வதற்காக அதை கொண்டு வந்ததாக கூறியுள்ளார். அந்த பணத்தோடு அவரை விடுவிக்க வேண்டுமென்றால் நீங்கள் அவருக்கு பொறுப்பேற்றுக்கொண்டு ரூ.35 ஆயிரத்தை இந்த அலுவலகத்திற்கு செலுத்த வேண்டும் என்றார்.

 

இதையடுத்து எனது போனில் பேசிய ரோஸ்மேரி, குழந்தையோடு கஸ்டம்ஸ் அலுவலகத்தில் தவித்து கொண்டிருப்பதாகவும், அவர்கள் கேட்ட பணத்தை உடனடியாக செலுத்தி விட்டு தன்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டாள். அவளது குரலில் அழுகையும், கெஞ்சலும் அதிக அளவில் இருந்தது.

 

நேரம் கடந்து கொண்டிருந்ததே தவிர நான் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. மீண்டும் என்னை தொடர்பு கொண்ட ரோஸ்மேரி, எப்படியாவது இந்த சிக்கலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கூறியதோடு, பணத்தை நீங்கள் கட்டி விட்டால் நான் நேரடியாக உங்கள் வீட்டுக்கு வந்து இரண்டு மடங்காக திருப்பி தருகிறேன். என்னை நம்புங்கள் என்று தனது குழந்தை மீது சத்தியம் வைத்து கதறி கொண்டிருந்தாள்.

 

இனிமேலும் மவுனமாக இருந்தால் நன்றாக இருக்காது என்று நினைத்த நான், டில்லியில் உள்ள பத்திரிகை நண்பரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தேன். ஒரு மணி நேரத்திற்கு பின்பு என்னிடம் பேசிய அந்த நண்பர், டில்லி விமான நிலைய கஸ்டம்ஸ் அலுவலகத்தில் ரோஸ்மேரி என்ற பெயரில் எந்த பெண்ணோ, குழந்தையோ இல்லை என்று கூறினார்.

 

இந்த சந்தேகம் எனக்கு ஆரம்பத்திலேயே இருந்தது. மிக நிதானமாக அவரின் பெயரை பிளாக் லிஸ்ட்டிற்கு மாற்றினேன். அதன் பின்பு ஒரு வாரத்திற்கு பின்பு அமெரிக்காவில் இருந்து ரூபி என்ற பெண் புதிதாக எனது முகநுாலில் அறிமுகமாகி ஹாய் என்ற தகவலோடு வாட்ஸ் அப்புக்கு வரமுடியுமா என்று கேட்டுக்கொண்டிருக்கிறாள்

 

MB Arul Selvan தன்னுடை முகநூலில்

 

N3

Leave A Reply

Your email address will not be published.