கோமதி சொன்ன அந்த ’பாப்பாத்தி அக்கா’ யார்?

0

தங்கம் வென்ற கோமதி சொன்ன அந்த ’பாப்பாத்தி அக்கா’ யார்? ஒரு நெகிழ்ச்சிக் கதை

பிரான்ஸிஸ் மேரி பகிர்ந்து கொண்ட அந்த நெகிழ்ச்சிக் கதை…

தங்கம் வென்ற உடனே கோமதி முதல் போன் கால் எனக்கு செய்தார். அழுது கொண்டே பேசினார். நானும் இங்கு அழுதுகொண்டே பேசினேன். ‘எல்லாவற்றிற்கும் நீங்கள்தான் காரணம் அக்கா’ என்றார். ‘அப்படிச் சொல்லாதே உனது கடின உழைப்புக்கு நம்பிக்கைக்கும் கிடைத்த பலன்’ என்றேன்.

முதன் முறையாக 2009இல் தான் கோமதி எனக்கு அறிமுகமானார். கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போதுதான் தடகள விளையாட்டில் பங்கெடுக்கத் துவங்கினார் கோமதி. அப்போது சக போட்டியாளராகத்தான் கோமதி எனக்கு அறிமுகமானார். பொதுவாக போட்டியாளர்கள் மைதானத்திற்கு வெளியேயும், உள்ளேயும் நல்ல நட்புடன் இருப்பார்கள். அந்தப் போட்டியில் கலந்துகொள்ள வந்த கோமதி எப்போதும் அமைதியாக இருந்தார். மிகவும் வெகுளியாகத் தெரிந்தாள். யாருடனும் அதிகம் பேச மாட்டார். ஆனால், கடுமையாக உழைக்கக் கூடியவர், ஒழுக்கத்தைக் கடுமையாக கடைப்பிடிப்பார். இந்த செயல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.
தேர்வுக்குழுவிடம் முறையாக கேட்டுப்பெற வேண்டிய உரிமைகளைக்கூட கேட்க மாட்டார். அப்போதெல்லாம் நான் கண்டிப்பேன். உன் உரிமைகளை நீதான் கேட்டுப்பெற வேண்டும் என அறிவுறுத்துவேன். அவர் சோர்வடையும் போதெல்லாம், அவர் மனம் தளரக்கூடாது என நான் நினைத்தேன். கோமதி மீது நான் எடுத்துக்கொண்ட அக்கறைதான் எங்களுக்குள் நல்ல நட்பை உருவாக்கியது. எங்களுக்குள் நல்ல நட்பும் வளர்ந்தது.

என் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர். என் அப்பா அரிசி ஆலையில் மூட்டை தூக்கும் வேலை பார்த்து வந்தார். அம்மா கூலி வேலைகளுக்குச் செல்வார். பொருளாதாரச் சிக்கல்கள் ஒருபுறம் இருந்தாலும், என் கனவுகளுக்கு வீட்டில் எப்போதும் தடை இல்லை. பி.டி.உஷா சாதித்தது போல நீ சாதிக்க வேண்டும் என்று என் அப்பா என்னிடம் அடிக்கடி கூறுவார். சிறுவயதில் இருந்தே விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

food

ஆனால், சூழ்நிலை என் கனவுகளைப் புரட்டிப்போட்டது. சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு விபத்தில் காயம் ஏற்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அது என் தடகள கனவை பெரிய அளவில் தொய்வடையச் செய்துவிட்டது. இப்போது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் என் கடமைகளைச் செய்து வருகிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் பணி நியமனம் பெற்றேன். எனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். என் மகனுக்கு 7 வயதாகும்போது நான் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றேன். சேகர், லோகநாதன், லதா, நாகராஜ், சகோதரர் பிரான்ஸிஸ் சகாயராஜ் போன்ற பலரிடம் பயிற்சி பெற்றேன். ஆனாலும் தடகள போட்டிகளில் முழு வீச்சாக பயிற்சி எடுக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இப்போதும் இருக்கிறது.

எந்த விபத்தால் என் கனவு தடைபட்டதோ, அதே போன்றதொரு விபத்தால் கோமதியின் கனவும் என் கண்ணெதிரே தடைபட்டது. அதை என்னால் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியவில்லை. எனவே கோமதி நம்பிக்கை இழந்து விடக்கூடாது என நினைத்தேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் கோமதி பலத்த காயம் அடைந்தார். சிகிச்சை எடுத்துக்கொள் என நான் கட்டாயப்படுத்தி சென்னைக்கு வரவழைத்தேன். பின் சென்னை வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்த விபத்து நடந்த உடனேயே, கோமதியின் பெயர் போட்டியாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. அப்போதைய பயிற்சியாளர் ரஷ்யாவைச் சேர்ந்தவர். கோமதி பற்றி முழுதாக விசாரிக்காமல் நீக்கிவிட்டார். கோமதி கதை முடிந்துவிட்டது இனி அவர் ஓடமாட்டார் என முடிவுக்கு வந்துவிட்டார்கள். அது மிகப்பெரும் பாதிப்பை கோமதிக்கு ஏற்படுத்தியது. அழுதுகொண்டே இருந்தார். அப்போது என்னால் முடிந்த அளவுக்கு அவருக்கு ஆறுதல் கூறி நம்பிக்கை அளித்தேன். என் சகோதரர் பிரான்ஸிஸ் சகாயராஜிடம் கோமதியை அறிமுகம் செய்து வைத்தேன். சில மாதங்கள் அவரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டார். கோமதி பதக்கம் வாங்குவாள் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு எப்போதும் இருந்தது.

எங்கள் ஊருக்கு அருகில்தான் கோமதியின் ஊரும் இருக்கிறது. கோமதியின் அம்மா எங்கள் ஊருக்கு கூலி வேலைகளுக்கு வருவார். கோமதி பயிற்சிக்கு வந்த பிறகு, நன்கு அறிமுகமாகிக் கொண்டோம்.

நம் பகுதியில் இருந்து ஒரு பெண் தேசிய அளவில் தடகள போட்டிகளில் பங்கெடுக்கிறார் என்பதால், என்னால் முடிந்த அளவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். எனவே கோமதிக்கு அவ்வப்போது தேவைப்படும் உதவிகளைச் செய்து கொடுத்து, பக்கபலமாக இருந்தேனே தவிர வேறு எதையும் பெரியதாக நான் செய்துவிடவில்லை.

கோமதியின் வெற்றிக்குக் காரணம் அவரின் கடும் உழைப்பு மட்டும்தான். கோமதியின் அப்பா மட்டும்தான் அவரின் ஒரே நம்பிக்கை. அவர் இறந்த பிறகு, கோமதிக்கு பக்கபலமாக இருந்தே ஆகவேண்டும் என முடிவெடுத்தேன். தற்போது கோமதி வென்றுள்ள தங்கம் ஒட்டுமொத்த பெண்களின் நம்பிக்கை. கோமதியுடன் சேர்ந்து ஓட நானும் தயாராகிவிட்டேன்.

 

நன்றி:tamil.asiavillenews.com

gif 4

Leave A Reply

Your email address will not be published.