ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்

முன்பெல்லாம் செய்தித்தாளில் ஏதாவது ஒரு செய்தி தகவல் பிடிக்கவில்லை என்றால் அது பற்றி ஆசிரியருக்கு கடிதம் பகுதிக்கு வாசகர்கள் கடிதம் எழுதி அனுப்புவார்கள். ஆனால் இப்போதோ இதழியல்துறை, செய்தியாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடிதங்களுக்குப் பதிலாக குண்டுகளும் அரிவாள், கத்திகளும் செய்தியாளர்களைப் பதம் பார்க்கின்றன. உலகின் கிழக்கு, மேற்கில் முதிர்ச்சி பெற்ற ஜனநாயக நாடுகளில் கூட இந்த நிலைதான் காணப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் ஊடகங்கள் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகின்றன என்பது குறித்து “எல்லைகள் இல்லாத நிருபர்கள்” (ஆர்எஸ்எப்) அமைப்பு ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த அமைப்ப 180 நாடுகளில் ஆய்வு நடத்தி அண்மையில் வெளியிட்ட பட்டியலில் சுமார் 75 சதவீத நாடுகளில் ஊடகங்களின் நிலைமை அபாய நிலையில் இருப்பதாக எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது. எட்டு சதவீத நாடுகளில் மட்டுமே ஊடக சுதந்திரம் மேம்பட்ட நிலையில் உள்ளது.
ஆர்எஸ்எப் தரவரிசைப் பட்டியலில் அமெரிக்கா மூன்று இடங்கள் இறங்கி 48வது இடத்தில் உள்ளது. முஅந்த நாட்டில் ஊடக சுதந்திரம் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. தனக்கு எதிராக செய்தி வெளியிட்ட ‘கேபிடல் கெஜட்’ பத்திரிக்கை அலுவலகம் மீது கடந்த ஜுனில் தாக்குதல் நடத்திய ஒருவர், 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அதிபர் டொனால்டு ட்ரம்பின் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்க ஊடகங்களின் சுதந்திரம் கேள்விக்குறியாகி உள்ளது.

உலக நாடுகளின் நிலவரம் குறித்து ஆர்எஸ்எப் பொதுச் செயலாளர் கிறிஸ்டோபி டெலோரி கூறிய போது, “ஜனநாயகம் ரோபத்தில் உள்ளது. ஆதிக்க சக்திகள், மக்களையும், ஊடகங்களையும் அச்சுறுத்துவதை தடுக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார். உலக அளவில் கடந்த 2016-ம் ஆண்டில் 49 செய்தியாளர்கள், 2017-ம் ஆண்டில் 80 செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 350க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ளனர். ‘தி வாஷிங்டன் பேஸட்’ பத்திரிகையாளர் ஜமால் கஸோகி, துருக்கியின் இங்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் மிகக் கொரூரமாக கொலை செய்யப்பட்டார்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று போற்றப்படும் இந்தியா, ஆர்எஸ்எப் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் 2 இடங்கள் கீழிறங்கி 140வது இடத்துக்கு வந்துள்ளது. பாகிஸ்தானைவிட 2 இடங்கக்கு முன்னால் மட்டுமே நாம் உள்ளோம். இந்தியாவைப் பொறுத்தவரை போலீஸ், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், ஊழல் அரசியல்வாதிகள், ரவுடி கும்பல்களால் செய்தியாளர்கள் அதிகம் தாக்கப்படுவதாக ஆர்எஸ்எப் கட்டிக்காட்டியுள்ளது.கடந்த 2018ம் ஆண்டில் இந்தியாவில் 6 செய்தியாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் இந்திய பெண் செய்தியாளர்களுக்கு எதிராக அவதூறு கருத்துகள் பரப்பப்படுகின்றன. பாலியல், கொலை மிரட்டல்களும் எடுக்கப்படுகின்றன.
ஆர்எஸ்எப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த வடகொரியா தற்போது ஒரு படி முன்னேறியுள்ளது. இந்த ஆண்டு கடைசி இடத்துக்கு துர்க்மெனிஸ்தான் தள்ளப்பட்டுள்ளப்பட்டுள்ளது. அதே நேரம் ஆப்பிரிக்க நாடுகளில் ஊடக சுதந்திரம் மேம்பட்டு வருகிறது.எத்தியோப்பியா 40 இடங்கள் மன்னேறி 110வது இடத்தையும், காம்பியா 30 இடங்கள் முன்னேறி 92வது இடத்தையும் பிடித்துள்ளன. ஊடகத்துறை நிர்வாகத்தில் இரு நாடுகளும் பல்வேறு மாற்றங்களை செய்திருப்பதை ஆர்எஸ்எப் வரவேற்கிறது. இதேபோல ஆசியாவில் மலேசியா, மாலத்தீவில் ஊடக சுதந்திரம் மேம்பட்டிருக்கிறது. ஒரு நாட்டில் சமுதாயமும், அரசியல் தலைமையும் மனம் வைத்தால் மட்டுமே ஊடக சுதந்திரம் காப்பாற்றப்படும்.
-டாக்டர் ஶ்ரீதர் கிருஷ்ணசாமி
நன்றி : இந்து தமிழ் திசை
