
திருச்சி விமானநிலையத்தில் ரூ.5½ லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்.
திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சிலர் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் போன்றவற்றை கடத்தி வரும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகமாக நடந்து வருகிறது. இதை தடுக்க திருச்சி விமான நிலைய மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று தினம் இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு பெண் பயணி தனது உடலில் மறைத்து அணிந்து தங்க சங்கிலிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தஞ்சாவூரை சேர்ந்த கவிதா(வயது 47) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.5½ லட்சம் மதிப்பிலான 174 கிராம் தங்க சங்கிலிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
