திருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு

திருச்சி தேசிய கல்லூரியில் இளநிலை மாணவர்கள் வகுப்பு சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெறுகிறது
பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பொறியியல், மருத்துவம் தவிர, கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை அணுகி வருகின்றனர்.
திருச்சியில் உள்ள ஹோலி கிராஸ், எஸ்.ஆர்.சி, மகளிர் கல்லூரிகளிலும், பிஷப் ஹீபர், தேசியக் கல்லூரி, ஜோசப் கல்லூரி, ஆண்டவன் கலைக் கல்லூரிகளிலும் சேர்வதற்கு மாணவ, மாணவிகள் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவ, மாணவியர்களின் ஆர்வத்திற்கு இணையாக, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக நடக்கிறது.


இதுகுறித்து தேசியக் கல்லூரி இயக்குநர் அன்பரசு கூறுகையில்

பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் தேசியக் கல்லூரியில் உள்ள பல்வேறு பிரிவுகளில் சேர்வதற்கு ஆயிரக்கணக்கில் வருகின்றனர். மொத்தம் இளநிலை வகுப்புகளில் ஆயிரத்து 200 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். தேர்வு முடிவுகள் வந்த 2 நாட்களில் 300க்கு மேற்ப்பட்ட இடங்களில் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. இன்னும் ஒரிரு நாட்களில் அனைத்து பிரிவுகளிலும் சேர்க்கை முடிந்துவிடும் என்று ஏதிர்பார்க்கிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக இளநிலை பிரிவில் ஜியாலஜி, கம்ப்யுட்டர் சயின்ஸ், வணிகம் ஆகிய பிரிவுகளில் மாணவர்கள் அதிக அளவில் ஆர்வமுடன் சேருகின்றனர். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட முதுநிலை ஜியோ இயற்பியல் துறையில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்தியாவில் மும்பை, ரூர்கேலா ஐஐடிகளில் மட்டும் இந்த ஜியோ இயற்பியல் வகுப்புகள் உள்ளன. இதில் படிக்கும் மாணவர்களுக்கு எண்ணெய் நிறுவனங்களில் உடனடி பணி வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
