மலைக்கோட்டை தாயுமானசுவாமி சித்திரை தேரோட்டம் வடம் பிடித்து இழுத்தனர் பக்தர்கள்!

0

மலைக்கோட்டை தாயுமானசுவாமி சித்திரை தேரோட்டம் வடம் பிடித்து இழுத்தனர் பக்தர்கள்

 

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம் இது. ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

பல்வேறு சிறப்பு மிகுந்த மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 10-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாள் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 14-ந்தேதி சிவபக்தியில் சிறந்த செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு இறைவன் அவளது தாயாக வந்து பிரசவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சியும், 15-ந்தேதி மதியம் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது.

food

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 4.55 மணிக்கு கோவிலில் இருந்து சாமி புறப்பாடு செய்யப்பட்டு, மலைக்கோட்டை உள்வீதி வழியாக தேர் நிலைக்கு வந்தது. பின்னர் பரிவார தெய்வங்களான விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் ஒரு சப்பரத்திலும், சுவாமி-அம்பாள் (சோமாஸ் கந்தராக) சுவாமி தேரிலும், அம்பாள் தனியாக அம்மன் தேரிலும் காலை 5.45 மணிக்கு மீன லக்னத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்கள்.

இதைத்தொடர்ந்து தேரோட்டத்தை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காலை 5.55 மணியளவில் சுவாமி தேரும், 6.10 மணியளவில் அம்மன் தேரும் நிலையில் இருந்து புறப்பட்டது. இதில் வாத்தியங்கள் முழங்க, யானை முன்னே செல்ல திரளான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் கீழ ஆண்டாள் வீதி, சின்ன கடை வீதி, என்.எஸ்.பி.ரோடு, நந்தி கோவில் தெரு, வடக்கு ஆண்டாள் வீதி வழியாக மலைக்கோட்டை வெளி வீதியில், பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்தவாறு சென்றது. 10.50 மணிக்கு அம்மன் தேரும், 11 மணிக்கு சுவாமி தேரும் நிலையை சென்றடைந்தன. இந்த தேர் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு தரப்பினரும், சிலம்பம், கத்தி சண்டை போட்டவாறும், நடனம் ஆடியும் மற்றும் சிவனடியார்கள் பாடல்களை பாடிக்கொண்டும், பெண்கள் கைகளில் நந்தி கொடியுடன் ஆடிப்பாடிக் கொண்டும், சாம்பிராணி வாசனையுடன் புகை போட்டுக் கொண்டும் தேருக்கு முன்னால் சென்றனர்.

தொடர்ந்து மாலை வரை சுவாமியும், அம்பாளும் தேரில் இருந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேர் நிலைக்கு வந்தவுடன் பக்தர்கள் அங்கு தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி சாமியை வழிபட்டனர். பின்னர் இரவில் தேரில் இருந்து சுவாமி-அம்பாள் இறங்கி கோவில் ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தனர்.

தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை திருச்சி மண்டல இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் சந்திரசேகர் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள், 7 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசாரும், குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர் சென்ற பகுதிகளில் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடராஜர் தரிசனமும், பகலில் பிரம்ம தீர்த்தமாகிய தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.