ஆவேச அய்யாக்கண்ணு அமைதியான கதை…

0
Business trichy

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து டெல்லி தலைநகரில், அரை நிர்வாண போராட்டம், எலும்புத் தின்னும் போராட்டம், எலி கறி தின்னும் போராட்டம், மொட்டையடித்து பட்டை நாமம் போட்டுக்கொண்டு பிச்சையெடுக்கும் போராட்டம் என விதவிதமான போராட்டங்களை நடத்தி இந்தியாவைத் திரும்பிப் பார்க்கவைத்தார் அய்யாக்கண்ணு.

டெல்லியில் நடைபெற்ற இந்த விவசாயிகள் போராட்டத்தில் பாஜக, அதிமுக, தவிர அனைத்துக் கட்சியினரும் சந்தித்து ஆதரவு கொடுத்தார்கள். இந்தியத் தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உட்பட பல தலைவர்கள் நேரில் வந்து ஆதரவு அளித்தனர். கடந்த மாதம் திருச்சியில் நடைபெற்ற விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் அய்யாக்கண்ணுவைத் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடச் சொன்னார்கள் நிர்வாகிகள்.
அப்போது அவர்களிடையே பேசிய அய்யாக்கண்ணு, “நாம் தனித்துப் போட்டியிட்டால் வெற்றிபெறமுடியாது. நமது கோரிக்கையை ஏற்பவர்களுக்கு ஆதரவு கொடுப்போம், பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் நமது விவசாயிகள் 111 பேர் சுயேச்சையாகப் போட்டியிடுவோம்” எனத் தீர்மானம் நிறைவேற்றினார்.

 

இச்செய்தி திருச்சி முதல் காசி வரை பரபரப்பாக பேசப்பட்டது. விவசாயிகளுக்கு நன்மை செய்த ஆட்சி என்று மோடி பேசி வரும் நிலையில், பிரதமர் மோடியை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிட்டால் அது சர்வதேச அளவிலும் செய்தியாகும் சூழல் ஏற்பட்டது. தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் இந்த மாதம் 22 ஆம் தேதி காசிக்கு செல்லும் ரயிலில் திருச்சியிலிருந்து செல்ல 111 பேருக்கு டிக்கட் பதிவுசெய்துவிட்டார் அய்யாக்கண்ணு.

Kavi furniture


இந்த நிலையில் ஏப்ரல் 7ந் தேதி, ஞாயிற்றுக் கிழமை இரவு டெல்லி சென்று பாஜக தலைவர் அமித்ஷாவை அவரது வீட்டிலேயே சந்தித்து சரண்டர் ஆகிவிட்டார் அய்யாக்கண்ணு. காசி செல்ல ரயில் டிக்கெட் வரை போட்டவர் யு டர்ன் அடிக்க என்ன காரணம்?
சென்னை முதல் டெல்லி வரை விசாரித்தோம்.
”மோடி போட்டியிடும் தொகுதியில் 111 பேர் மோடிக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட்டால் பிரதமரின் இமேஜ் பாதிக்கும். அதுமட்டுமல்ல… 63 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்தமுடியாது, ஓட்டுச் சீட்டுதான் பயன்படுத்த வேண்டும்.

இதனால் பல சிக்கல்கள் வரும் என நினைத்த பாஜக தலைமை அய்யாக்கண்ணுவை ஆஃப் பண்ண முடிவுசெய்தனர். அந்த அசைன்மென்ட் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
தங்கமணி, திருச்சியில் உள்ள முன்னாள்
எம்.எல்.ஏ. பரஞ்ஜோதி மூலமாக அய்யாக்கண்ணுவிடம் பேசச் சொன்னார். அதன்படியே பரஞ்சோதியும் அய்யாக்கண்ணுவை நேரில் சந்தித்து, அமைச்சர் தங்கமணியிடமும் போனில் பேசவைத்தார், அதன் பிறகு பாஜகவின் முக்கியமான இரண்டு தலைவர்களிடமும் போனில் பேசினார் அய்யாக்கண்ணு.

MDMK

சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சரும் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தமிழகத்திற்கு வந்தார். அய்யாக்கண்ணுவைத் தொடர்புகொண்டு பேசியபின் பாஜக தலைவர் அமித்ஷாவிடம் தகவல் சொல்லியிருக்கிறார்.
இந்தத் தகவல் பரிமாற்றங்களுக்குப் பின் பரஞ்சோதியை தொடர்புகொண்ட அமைச்சர் தங்கமணி, ‘நீங்க அய்யாக்கண்ணுவை கூட்டிக்கிட்டு சென்னை வீட்டுக்கு வந்துடுங்க. நான் நாமக்கல்லில் இருக்கிறேன். உடனே சேரன் எக்ஸ்பிரஸில் புறப்பட்டு வந்துர்றேன்” என்று சொல்லியிருக்கிறார்.
அதன்படி சென்னை வந்த தங்கமணியை அய்யாக்கண்ணுவும், பரஞ்சோதியும் சந்தித்தார்கள். அப்போது தங்கமணியின் போனில் இருந்தே அமித் ஷாவிடம் பேசியிருக்கிறார் அய்யாக்கண்ணு. ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி நலம் விசாரிப்பு செய்துகொண்டார்கள்.


அதையடுத்து உடனே தங்கமணி, அய்யாக்கண்ணு மற்றும் சிலருடன் ஏர் இண்டியா விமானத்தில் டெல்லிக்குப் பறந்தார்கள். இரவு 11.00 மணிக்கு அமித்ஷா வீட்டுக்குப் போனவர்கள் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு 12.15 மணிக்கு வெளியில் வந்தார்கள்.
அதன் பிறகு அய்யக்கண்ணு பத்திரிகையாளர்களிடம் “எங்கள் முக்கியமான கோரிக்கை, கங்கை காவிரி இணைப்புதான், இதுபோன்ற பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி 141 நாள் போராட்டம் செய்தோம்.
அப்போது பாஜக தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் எங்களையும் என்னையும் கேவலமாகப் பேசினார்கள், அவதூறுகளைப் பரப்பினார்கள்.
கர்நாடகாவில் ஒரு லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்தவர்கள் இன்று 30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்துவருகிறார்கள் ஐந்து டேம் கட்டியுள்ளார்கள். தமிழகத்தில் 30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்தவர்கள் இன்று 90 ஆயிரம் ஏக்கரில்தான் சாகுபடி செய்துவருகிறோம் தண்ணீர் இல்லாமல்.

அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்தபோது கங்கை காவிரி இணைப்பு பற்றிப் பேசியபோது அது சாத்தியம் இல்லை, சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்றார், அதன் பிறகு ராகுல்காந்தியைச் சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதினோம், ராகுல் உதவியாளரிடம் தொடர்புகொண்டு கேட்டோம் பலனில்லை. பாஜக தலைவருக்கும் கடிதம் எழுதினோம், அவர்களே வந்து என்னை டெல்லிக்கு அழைத்துப் போய் பேசினார்கள்.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், முரளிதர் ராவ் பேசினார்கள். நமது அமைச்சர் தங்கமணி பேசினார். கோயல் மற்றும் அமைச்சர் தங்கமணியுடன் டெல்லிக்குச் சென்று அமித்ஷாவை அவர் வீட்டில் சந்தித்தோம்.
தேர்தல் அறிக்கையைக் கொடுத்துப் படித்து பார்க்கச்சொன்னார், எங்கள் கோரிக்கையை ஏற்று ஒரு வாரியத்தையும் அமைப்பதாகச் சொல்லியுள்ளார். அவரை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி, யார் எதுசொன்னாலும் எனக்குக் கவலை இல்லை. வரும் புதன் கிழமை திருச்சியில் செயற்குழு கூட்டம் வைத்துள்ளேன்.

அதில் தெளிவுபடுத்துவேன். பாஜக விவசாயிகளுக்கு அதிகமான சலுகைகளைத் தேர்தல் அறிகையில் அறிவித்துள்ளது” என்றார் அய்யாக்கண்ணு.
காசி அரிச்சந்திர மைதானத்திலிருந்து 111 பேரும் புறப்பட்டுப் பிச்சையெடுத்து அந்தப்பணத்தில்தான் சுயேச்சையாகப் போட்டியிடக் கட்டணம் செலுத்த இருந்தார்கள் அய்யாக்கண்ணு குழுவினர். ஆனால் அதை அமித் ஷா சாமர்த்தியமாகக் கையாண்டு தவிர்க்கச் செய்துவிட்டார்.
அமித்ஷா அய்யாக்கண்ணு சந்திப்பின் விளைவாக, தேர்தலுக்குப் பிறகு அய்யாக்கண்ணுவுக்கு பாஜகவில் நல்ல பொறுப்பும் வழங்கப்படும் என்கிறார்கள். அதே நேரத்தில் புதன்கிழமை கூடும் விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்புகளும் வரும் என்கிறார்கள் முக்கிய நிர்வாகிகள்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.