மரியாதை கொடுக்காதவருக்காக எப்படி பிரச்சாரம் செய்வது ? வழக்கறிஞர் பொன்.முருகேசன்

0
1 full

திருச்சியில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் கடந்த 2016 ம் ஆண்டிலிருந்து அங்கம் வகித்து வருபவர் மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் பொன்.முருகேசன், இவர் தேவேந்திர குல சமுதாயத்தை சார்ந்தவர்.
தென் தமிழகத்திலும், டெல்டா மாவட்டங்களிலும் இவருக்கு தேவேந்திர குல இளைஞர்கள் மத்தியிலும் பட்டியலின மக்களிடமும் மதிப்பை பெற்றவர்.
குறிப்பாக திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இளைஞர் களையும், பொதுமக்களையும் உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வருகின்றார்.

 

இவர் திருச்சி மாவட்ட திமுக வின் மாவட்ட செயலாளர் கே.என்.நேருவுடன் நெருக்கமானவர், பொன்.முருகேசன் நடத்திய மாநாடு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த பாராளுமன்ற தேர்தலில் பொன்.முருகேசன் கே.என்.நேரு மூலமாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவை திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தெரிவித்தார்.
ஆதரவு தெரிவித்தவுடன் தனது ஆதரவாளர் களை அழைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உத்தரவிட்டிருந்தார் அதேபோல் திருநாவுக்கரசர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது தனது ஆதரவாளர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டவர்களுடன் வந்திருந்தார், வேட்புமனு தாக்கலின் போது பெரிய அளவில் யாரும் கலந்து கொள்ளாத போதிலும் பொன்.முருகேசன் 50 க்கும் மேற்பட்ட பெண் ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டது அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

 

இந்நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருந்த வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் செல்வகுமார் தனக்கு தி.மு.க.கூட்டணியில் உரிய மரியாதை இல்லை என்று கூறி சமீபத்தில் புதுக்கோட்டை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் அதிமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்நிலையில் கூட்டணி சார்பாக அடிக்கப்பட்ட நோட்டீஸ்களில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் புகைப்படமும், பொன்.முருகேசனின் புகைப்படமும் இடம் பெறாததால் தேவேந்திர குல இளைஞர்கள் மத்தியிலும், பொன்.முருகேசனின் ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிருப்தி ஏற்படவும், பொன்.முருகேசன் உடனடியாக கே.என் நேருவை சந்தித்து தனது புகைப்பபடத்தை கூட நீங்கள் போட வேண்டாம் ஆனால் நான் சார்ந்த சமூக தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் புகைப்படத்தை அச்சிட வேண்டுமென கோரிக்கையை வைத்தார்.

 

2 full


பொன்.முருகேசனின் கோரிக்கையை ஏற்று இரவோடு இரவாக தியாகி இம்மானுவேல் சேகரனாரின் புகைப்படத்தை அச்சிட சொல்லி பொன்.முருகேசனை சமாதானம் படுத்தினார் கே.என் நேரு. அப்போதைக்கு சமாதானம் அடைந்த பொன்.முருகேசன் தன்னை தேர்தல் பிரச்சாரத்திற்கு காங்கிரசார் அழைப்பார்கள் என்று எதிர் பார்த்து வந்தார், ஆனால் காங்கிரசார் அவரை இதுநாள் வரை அவரை மரியாதை நிமித்தமாக கூட சந்திக்கவில்லை.பொன்.முருகேசனுக்கும் மேற்படி கூட்டணியில் உரிய மரியாதை இல்லாததால் கூட்டணியை விட்டு வெளியேறுவார் என்கிற பேச்சு அடிபட துவங்கியது.
இந்த நிலைகுறித்து வழக்கறிஞர் பொன்.முருகேஷனிடம் பேசிய போது, ‘‘சார் திமுக, காங்கிரஸ் கூட்டணியை தேவேந்திர குல சமுதாய மக்கள் அனைவரும் புறக்கணித்த போதும் நான் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எங்கள் ஆதரவை தெரிவித்தோம், ஆனால் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் எங்களை மதிப்பது கிடையாது. மாறாக அவர் சார்ந்துள்ள சாதிக்காரர்களுக்கே உரிய மரியாதை கொடுத்து வருகிறார். இதனால் நான் சார்ந்துள்ள தேவேந்திர குல சமுதாய மக்களும், இளைஞர்களும் கடுமையான கோபத்தில் இருந்து வருகிறார்கள்.

எமது கழகத்தையும், எமது சமுதாய மக்களையும் மதிக்காத திருநாவுக்கரசருக்கு ஆதரவாக திருச்சியில் பிரச்சாரம் செய்வதா? அல்லது முடிவை மாற்றி அவருக்கு எதிராக செயல்படுவதா? பொதுக் குழுவை கூட்டி முடிவு எடுக்க போகிறோம்.
நாங்கள் பணம் எதுவும் கேட்கவில்லை, மரியாதை தானே கேட்கிறோம். இந்த குறைந்தபட்ச மரியாதை கூட இல்லை என்றால் எப்படி’’ என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.