லால்குடியில் மக்கள் அதிகாரம் அரங்கு கூட்டம்

0
D1

 

லால்குடி பெரியார் திருமண மண்டபத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் அரங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜவரவேற்புரையாற்றினார். மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமை தாங்கினார். விவசாய அணி அயிலை சிவசூரியன் திராவிட கழக தலைமைப்பேச்சாளர் வழக்கறிஞர் பூவை புலிகேசி லால்குடி சட்டமன்ற விடுதலை சிறுத்தையின் ஒன்றிய செயலாளர் மரிய கமல் செம்பரை மக்கள் அதிகாரம் மணியரசன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு சிறப்புரை ஆற்றியதாவது.  கடந்த ஆண்டில் பணமதிப்பிழப்பு,பெட்ரோல் வரி மற்றும் டோல் பிளாசா கொள்ளை, ஜி.எஸ்.டி முதலான சிறுதொழில்கள், சிறுவணிகர்கள் முதல் எல்லா தரப்பு மக்கள் மீதுமான தாக்குதல்கள். லவ் ஜிகாத், பசுக்கொலை எனப் பலவாறாக குற்றம் சாட்டி சிறுபான்மை மக்கள் மற்றும் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், கல்வி நிறுவனங்களையும், கல்வி திட்டங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கைகள்.ள அரசுக்கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு ! ஆளை மாற்றும் தேர்தலால் என்ன பயன். நமது நாட்டின் அரசியல்இ பொருளாதார, சமூக கட்டமைப்பு முழுவதும் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கிக் கொண்டு விட்டது. ஆளும் வர்க்கங்கள் ஆளத் தகுதியிழந்துவிட்ட நிலையில், ஒட்டு மொத்த அரசுக்கட்டமைப்பும் திவாலாகி, தோற்றுப் போய், நிலைகுலைந்து எதிர்நிலைச் சக்திகளாக மாறிவிட்டது.

நாடாளுமன்ற அரசியலுக்கும் அரசு நிர்வாக அமைப்புக்கும் வெளியே, நேரடியாக மக்கள் பங்கேற்கும்  நிர்வாக அரசியல் அமைப்புக்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பதே மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கை.

D2

கொள்கைகளை தீர்மானிப்பதிலும், அதை அமல்படுத்துவதிலும், மக்களின் கையில் அதிகாரம் இருப்பதுதான் உண்மையான ஜனநாயகம். ஆனால் நமது நாட்டின் தேர்தல்களோ மக்களை மென்மேலும் அதிகாரம் அற்றவர்களாக மாற்றி வருகிறது.  யோசித்துப் பாருங்கள். வாக்காளர்களில் பெரும்பான்மையினர் ஏழைகள். ஆனால் தேர்ந்தெடுக்கப் படுபவர்களில் பெரும்பான்மையினர் யார்? தொழிலதிபர்கள், மணல் கொள்ளையர்கள்,  சுயநிதிக் கல்லூரி அதிபர்கள் போன்ற கோடீசுவரர்கள்தான். இந்த தொழிலதிபர்கள் சின்னவீடு வைத்துக் கொள்வதுபோல, ஆளுக்கொரு கட்சியும் வைத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

தொழிலாளியின் உழைப்பை விலைக்கு வாங்குவது போல, இவர்கள் நம்முடைய வாக்கையும் விலை கொடுத்து வாங்குகிறார்கள். பொதுச் சொத்தை கொள்ளையடிக்கிறார்கள். பிறகு சொத்தை பாதுகாக்க மீண்டும் மீண்டும் தேர்தலில் நிற்கிறார்கள். பெரும்பான்மையான வேட்பாளர்களுக்கு தேர்தல் என்பது அரசியல் நடவடிக்கை அல்ல, அது ஒரு பிசினஸ் நடவடிக்கை.

“சாதி, மதம், பணம் ஆகியவற்றை பயன்படுத்தி வெற்றி பெறுவது சட்டவிரோதம்” என்று தேர்தல் விதிகள் சொல்கின்றன. ஆனால் இந்த மூன்றையும் வைத்துத்தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். மொத்த கார்ப்பரேட் நன்கொடையில் 80% சுருட்டிக்கொள்ளும் பாஜக, கட்சிகளையே மொத்தமாக விலை பேசுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் மோடி வெளிப்படையாக மதவெறியை தூண்டுகிறார். பாஜக கலவரம் நடத்தித்தான் ஆட்சிக்கே வருகிறது. சாதிக்கட்சிகளோ வெளிப்படையாகவே சாதி வெறியைத் தூண்டி ஓட்டு கேட்கின்றன. இவை அனைத்தையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது. நடுநிலை என்று சொல்லிக்கொண்டு மோடியின் கையாளாகவே செயல்படுகிறது. மொத்தத்தில் எல்லா விதிமுறைகளையும், அரசியலமைப்பு சட்டத்தையும் மீறித்தான் இந்தத் தேர்தலே நடக்கிறது. தேர்தல் மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பும் தோற்றுவிட்டது என்பதே உண்மை.

மொத்த அரசுக் கட்டமைப்புமே தோற்றுவிட்டது !

நாம் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகள் மட்டும்தான் எல்லா தீமைகளுக்கும்  காரணம் என்று பார்ப்பதற்கு பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம். ஜனநாயகத்தின் மற்ற மூன்று தூண்களான அதிகார வர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் ஆகியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவை. அவை எப்படி இருக்கின்றன? அரசியல்வாதி தவறு செய்தாலும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டியவர்கள் என்று சொல்லப்படும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் சட்டத்தை மீறுவதற்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆற்றுமணலை பாதுகாக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள்தான் மணற்கொள்ளையர்களுக்கு வழி சொல்லிக் கொடுக்கிறார்கள். பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே அந்த குற்றங்களில் ஈடுபடுவதுடன், வல்லுறவு குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள். குற்றத்தை வெளியே கொண்டு வந்த பத்திரிகையாளர் மீது குற்றவிசாரணை நடத்துகிறார்கள். ஸ்டெர்லைட் முதல் எண்ணெய்க் கிணறுகள் வரை எல்லா சுற்றுச்சூழல் விதிமீறல்களுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்தான் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள்.

நீதிமன்றங்களில் கீழிருந்து மேல் வரை நீதி விலைபேசப்படுகிறது. மோடி ஆட்சியில் எல்லா இந்துத்துவ பயங்கரவாதிகளும் வரிசையாக விடுதலை செய்யப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களே குற்றவாளிகளாக்கப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள். சிபிஐஇ வருவாய்த்துறை ஆகிய அனைத்துமே குற்றங்களுக்கு துணை நிற்கும் துறைகளாகவும், திருடியவனிடம் பங்கு வாங்கும் துறைகளாகவுமே இயங்குகின்றன. ஊடகங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளே கட்டுப்படுத்துவதால் அவை கண்முன்னால் நடக்கும் அநீதிகளை மறைக்கின்றன. மோடி அரசின் ஊதுகுழல்களாக செயல்படுகின்றன.

இதனை மீறி உண்மையைப் பேசமுயன்ற பத்திரிகையாளர்கள்,  சட்டத்தை அமல்படுத்த முனைந்த அதிகாரிகள், லஞ்சம் வாங்க மறுத்த நீதிபதிகள் ஆகியோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அல்லது நீதிபதி லோயாவைப் போல மர்மமான முறையில் மரணம் அடைந்திருக்கிறார்கள்.

தேர்தல் அரசியலின் சீரழிவுகளை மேற்கூறிய அனைத்தோடும் சேர்த்துப் பார்க்கவேண்டும். அதை விடுத்து அரசியல்வாதி மட்டும்தான் வில்லன் என்றும் அவர்களைத் திருத்திவிட்டால், இந்த தேர்தலையும் ஜனநாயகத்தையும் திருத்தி விட முடியும் என்ற மாயையையும் ஆளும் வர்க்கங்கள் பரப்புகின்றன.

ஜனநாயகம் அற்ற தேர்தல் !

N2

இந்த தேர்தலில் ஜனநாயகம் கிடையாது. இந்த தேர்தல் முறை மூலம் அதனை சாதிக்க முடியாது என்று கூறுகிறோம். நேர்மையான சிலர் வந்து இதனை திருத்தி விட முடியாது என்று கூறுகிறோம்.

“ஸ்டெர்லைட் வேண்டாம்” என்று தூத்துக்குடி மாவட்டமே முழங்கியது. ஆனால் அனில் அகர்வால் என்ற ஒரு முதலாளிக்காக 14 பேரைக் கொன்று பல நூறு பேரை சிறையில் அடைத்தது போலீசு.  இதைப்போல ஓராயிரம் எடுத்துக் காட்டுகளை சொல்ல முடியும்.

சமீப காலமாக நடைபெறும் மக்கள் போராட்டங்களின் கோரிக்கைகளைப் பாருங்கள். எட்டு வழி சாலைக்காக நிலத்தைப் பிடுங்காதே, பொதுத்துறையை விற்காதே, பி.எஃப் பணத்தை திருடாதே, நூறு நாள் வேலைத்திட்ட சம்பள பாக்கியை கொடு, வேலையை விட்டு நீக்காதே – எல்லா கோரிக்கைகளின் பொருளும் ஒன்றுதான். “அரசே எங்களை வழிப்பறி செய்யாதே” என்பதுதான்.

இன்றைய அரசுக்கட்டமைப்பில் மக்கள் நல அரசு  சாத்தியமில்லை !

தனியார்மய தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தியது மட்டுமின்றி அதனை எதிர்த்துப் போராடுவோர் மீது தடுப்புக்காவல் சட்டங்களை ஏவி ஒடுக்கிய காங்கிரஸ் கட்சி, அத்தகைய சட்டங்களை திருத்துவதாகவும், மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துவதாகவும், வெறுப்பரசியலை தண்டிக்க தனிச்சட்டம் இயற்றுவதாகவும் வாக்குறுதி அளிக்க நேர்ந்திருப்பதற்கு காரணம் மக்களின் போராட்டங்கள்தான்.

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலுமா? இந்திய அரசின் வரவு செலவுத்திட்டத்தை கண்காணிக்கும் ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது கூடுதல் வரி விதிப்பதையோ மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துவதற்காக பற்றாக்குறை பட்ஜெட் போடுவதையோ அனுமதிப்பதில்லை. அதேபோல,இத்தனை காலமாக இந்து வெறியர்களுக்கு உடந்தையாக இருந்து வரும் இந்த அரசமைப்பின் உறுப்புகள், வெறுப்பரசியல் வன்முறைக்கு எதிரான சட்டத்தை வைத்து இந்து வெறியர்களைத் தண்டிக்கவும் போவதில்லை. தீண்டாமைக் குற்றத்துக்கு எதிரான சட்டங்கள் எவ்வளவு கடுமையாக்கப்பட்ட போதும், அதன் காரணமாகவே சாதிவெறியர்கள் தண்டிக்கப்படுவதில்லை என்பதைப் போன்றதே இதுவும்.

உண்மை நிலை இவ்வாறிருக்க புதிய தாராளவாதக் கொள்கைக்கும், இந்த அரசுக்கட்டமைப்புக்கும் உட்பட்டே வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்று காங்கிரசின் தேர்தல் அறிக்கை நம்பிக்கையூட்டுகிறது. கார்ப்பரேட் கொள்ளையையும் அரச பயங்கரவாத ஒடுக்குமுறையையும் கடுகளவும் குறைத்துக் கொள்ளக்கூடாது என்பதையே தனது கொள்கையாகக் கொண்ட பாசிச பாஜக-வோ இந்த வாக்குறுதிகள் ஆபத்தானவை என்று எச்சரிக்கிறது.

அதிகரித்துவரும் மக்கள் பிரச்சினைகளுக்கு தேர்தல் தீர்வு அல்ல !

தேர்தல் என்ற வரம்புக்குள்ளேயே யோசித்துப் பழகிவிட்ட காரணத்தினால் இது மட்டுமே தீர்வு என்று தோன்றக்கூடும். ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி காரணமாக எதிர்க்கட்சிக்கு ஓட்டுப் போடுவதை மக்களே காலம் காலமாக செய்து வருகிறார்கள். அவ்வாறு வாக்களிப்பதன் மூலம் கார்ப்பரேட்- காவி பாசிசத்தை முறியடிக்க முடியுமா என்று யோசிக்க வேண்டும்.

பாரதிய ஜனதாவைப் போல எதிர்க்கட்சிகளெல்லாம் பார்ப்பன பாசிசக் கட்சிகள் அல்ல என்பது உண்மைதான். ஆனால் இவர்கள் அதை எதிர்த்துப் போராடியதும் இல்லை. காங்கிரஸ் என்பது மிதவாத இந்துத்துவத்தை நடைமுறைப்படுத்தும் கட்சி. அவர்கள் ஆட்சியில் இருந்த பத்து ஆண்டுகளில் இந்து பயங்கரவாதிகளை தண்டிக்கவோ, அந்த அமைப்புகளை முடக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எப்போதுமே தேர்தல் ஒரு உடனடித் தீர்வு போன்ற மயக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. ஆனால் உண்மையில் நடப்பது என்ன? தேர்தல் என்பது ஒரு நாள் விவகாரம். மீதி 5 ஆண்டுகளும் எல்லா பிரச்சினைகளுக்காகவும் நாம் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். மக்களுடைய வாழ்வாதாரங்கள் மீதான ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தியவை தேர்தல்கள் அல்ல, சிங்கூர் முதல் தூத்துக்குடி வரையிலான மக்கள் போராட்டங்கள்தான் இதனை சாதித்திருக்கின்றன.

ஆகவே, தனித்தனியான சிக்கல்களுக்கு தனித்தனி  தீர்வுகளை இந்த அரசமைப்புக்குள்ளேயே வழங்கிவிட முடியும் என்ற பிரமையிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். அனைத்துப் போராட்டங்களும் மக்கள் அதிகாரத்தை நிறுவுகின்ற அரசியலை நோக்கியதாக இருக்க வேண்டும். இந்தக் கட்டமைப்பு நெருக்கடிக்கான தீர்வாக ஒரு புறம் கார்ப்பரேட் காவி பாசிசம் ஆளும் வர்க்கத்தால் திணிக்கப்படுகிறது. மறுபுறம் அதற்கு மாற்றாக இந்தக் கட்டமைப்புக்குள்ளே மனித முகம்  கொண்ட உலகமயத்தை அமல்படுத்திவிட முடியும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கையூட்டுகின்றன.

தற்போதுள்ள அரசியல் கட்டமைப்புக்கு வெளியே, முற்றிலும் வேறான மாற்று அரசியல் கட்டமைப்புதான் நாட்டுக்குத் தேவை. ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலம் நிறுவப்படும் மக்கள் அதிகாரம்தான் பாசிச அபாயத்தை முறியடிக்கும்.

 

 

 

N3

Leave A Reply

Your email address will not be published.