“அனைத்து துறைகளிலும் ஊழல் அகற்றப்பட வேண்டும்’

0
1

“அனைத்து துறைகளிலும் ஊழல் அகற்றப்பட வேண்டும்’

நாடு வளர்ச்சி பெற அனைத்து துறைகளிலும் ஊழல் அகற்றப்பட வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் இ.பாலகுருசாமி வலியுறுத்தினார்.
திருச்சி தேசியக் கல்லூரியில் முதுநிலை மற்றும் கணினி அறிவியல் துறை சார்பில், பத்மவிபூஷன் வி.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை சொற்பொழிவு “உலக அளவிலான முன்னேற்றத்தில் இந்தியாவின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இ.பாலகுருசாமி பேசியது:
ஒரு நாடு வல்லரசாக வேண்டுமெனில் அது தனது செல்வாக்கை நிரூபிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஏராளமான இயற்கை வளங்கள், சிறந்த விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆற்றல், கல்வி முறை, மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஆன்மிக மதத் தலைவர்கள் மற்றும் செல்வந்தர்கள் நிறைந்த நாடு வல்லரசாகும். மேலும், கல்வி, சுகாதாரம், வேளாண் உற்பத்தி, பணியாளர்களின் உற்பத்தித் திறன், உட்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றில் மேம்பாடு, பண வீக்கத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தகம் போன்ற சவால்களை கையாள வேண்டும். தொழில் நுட்பத்துறையின் முன்னேற்றமானது துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அதன் மேம்பட்ட வளர்ச்சியைப் பொருத்து அமைகிறது.

2

எனவே இந்தியாவை மேம்படுத்திட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. இந்தியாவை உலகளாவிய வல்லரசாக மாற்ற இளைய தலைமுறையின் படைப்பாற்றல், புதுமையான திறன்களை மேம்படுத்துவதன் மூலம் கல்வித்துறை உள்பட அனைத்து துறைகளிலும் ஊழலை அகற்றுவதன் மூலமும் சவால்களை சமாளிக்க முடியும் என்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலளர் கே.ரகுநாதன் தலைமை வகித்தார். கல்லூரியின் இயக்குநர் அன்பரசு முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஆர்.சுந்தரராமன் வரவேற்றார். துணை முதல்வர் பி.எஸ்.எஸ்.அகிலாஸ்ரீ நன்றி கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.