திருச்சி தென்னூர் மேம்பாலம் இணைப்பில் பள்ளம்

மேம்பால இணைப்பில் பள்ளம் விபத்துக்கு முன் சீரமைக்க கோரிக்கை
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட தென்னூர் மேம்பாலம் இணைப்புகளுக்கிடையே “தார்’ இல்லாததால், மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டு, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், வாகனங்கள் பாலத்தில் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது.திருச்சி மாநகராட்சி நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே வருகிறது. புறநகர் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. மாநகரின் வளர்ச்சியை போலவே, வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. டூவீலர், கார், வேன், டிராவலர்ஸ், பஸ், லாரி, டிரக் என, லட்சக்கணக்கான இலகு மற்றும் கனரக வாகனங்கள் திருச்சி நகருக்குள் பயணிக்கின்றன. வாகனங்கள் தங்குதடையின்றி செல்வதற்காகவும், எளிதில் பயணிக்கவும், திருச்சியில் பல்வேறு இடங்களில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் தென்னூர் பிரதான சாலையில் இருந்து மதுரை சாலை வரை அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் ஒருதூணுக்கும், மற்றொரு தூணுக்கும் இடையே உள்ள இணைப்பு பள்ளத்தை கான்கிரீட் கலவை, தார் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன. சில பாலங்களில் இந்த இணைப்புகளுக்கு இடையே உள்ள கான்கிரீட் கலவை, தார் பூச்சுகள் பெயர்ந்து வெளியே வந்துவிட்டன. சரியாக பூசாததாலும், அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்களால் இவை பெயர்ந்துவிட்டன.குறிப்பாக பாலத்தில் இணைப்புகளுக்கும் இடையே உள்ள தார் கலவைகள் பெயர்ந்தும் சில இடங்களில் மெகா சைஸ் பள்ளங்களாக இருந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

சிறிய பள்ளத்தால் பெரிய விபத்து ஏற்படும் முன், அதை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினர் எடுக்க வேண்டும்’ என, வழக்கறிஞர் சித்ரா மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
