அறிவோம் தொல்லியல்-11 பயணங்கள் முடிவதில்லை…

0
1

சேரநாட்டையாண்ட உதியஞ்சேரலின் மகன் யவனரை வென்றவன் என பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படுகிறான். யவனர் என்ற சொல்லாடல் ரோமானியரை குறிப்பதாகும், இதிலிருந்து சேரர்-ரோமானியர் தொடர்பை உணரலாம், இதற்கு வலுசேர்க்கும் விதமாய் அமராவதி படுகையில் நிறைய ரோமானிய நாணயங்கள் கிடைத்தது, சங்க இலக்கியங்கள் பலவும் கரூரை ஆண்ட சேரர்களின் அரண்மனை பற்றிய குறிப்புகளை நிறைய தருகிறது.

தமிழகஅரசு மேற்கொண்ட 1973-74, 1979 ல் கரூரில் நடைபெற்ற அகழாய்வில், கோட்டைச்சுவர், ரோமானியகாசுகள், ரோமானிய அலங்காரஜாடிகள் வெளிக்கொணரப்பட்டது. கரூரின் அருகே நொய்யல்ஆற்றங்கரையில் வணிகநகரமான கொடுமணலில் நிறைய வெளிநாட்டுப்பொருட்கள் கிடைத்தது, இது குறித்து விரிவாக முன்னர் கண்டோம்.

 

நெடுங்கூர் அகழாய்வு :

4

கரூர்மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில், கோவை செல்லும் நெடுஞ்சாலை யில் அமைந்துள்ளது இவ்வூர். சுமார் 20 ஏக்கருக்கு மேல் தொல்லியல் மேடுகள், கல்வட்டங்கள் பரவிகிடக்கிறது. 50 ஏக்கருக்குமேல் வாழ்விடப்பகுதி இருந்த சான்றுகள் நத்தமேடு என்ற பகுதியில் இருக்கிறது, ஆங்காங்கே இன்றும் சங்ககால  கருப்பு, சிவப்பு பானைச்சிதைவுகள், இரும்பு சிதைவுகளாக உள்ளது, இவற்றை நோக்குங்கால், சேரர்களின் எழுச்சிகாலம் தொட்டு, வீழ்ச்சியடைந்த கி.பி 4 வரை சிறந்த நகரமாய் இருந்திருக்கக்கூடும். வாழ்விடம், மற்றும் ஈமக்காடு என பிரித்து அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

வாழ்விட அகழாய்வு:

நத்தக்காடு எனும் பகுதியில் மொத்தம் நான்கு குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுவமேற்கொள்ளப்பட்டது, முதல்குழியில் மொத்தம் 140 செ.மீ ஆழம் வரை தோண்டப்பட்டது,  20 செ.மீ.ல் இருந்து, நிறைய சங்ககால மட்பாண்ட சிதைவுகள் கிடைக்க ஆரம்பித்தது, மட்பாண்டங்களில் உடுக்கை, ஏணி, மலைமுகடு போன்ற குறியீடுகள் கிடைத்தது, இரும்பாலான கத்தி, ஆணி, செம்பு பொருட்கள், சங்கு வளையல்கள் போன்றவை சேகரிக்கப்பட்டன. 140 செ.மீ க்குமேல் எதுவும் கிடைக்காததால் அகழ்வதுநிறுத்தப்பட்டது.

2

முதல் குழியின் 15 மீட்டர் மேற்கே இரண்டாம் குழி தோண்டப்பட்டது, 4×4 மீட்டர் அளவில் சுமார் 70. செ.மீ ஆழத்தில் குழி அகப்பட்டது. 5 செ.மீ வரையிலும் அதிகம் கிடைத்த பானையோடுகள் அதன்பின் படிப்படியாக குறைந்து 65 செ.மீ ல் முற்றிலும் நின்றுவிட்டது. ஆகவே இக்குழி மூடப்பட்டது. இதில் அலங்கரிக்கப்பட்ட மட்கலங்கள், பூச்சாடிகள், எழுத்துப்பொறிப்புள்ள ஓடுகள் சேகரிக்கப்பட்டது.

மூன்றாம் குழி இதேஅளவில் 160 செ.மீ ஆழம்வரை தோண்டப்பட்டது. இதில் சங்கு வளையல்களும், அதிக அளவில் எலும்புகளும் கிடைத்தது.

நான்காம் குழி முதல் மூன்று குழிகளுக்கு மேற்கே சுமார் 3 கி.மீ தொலைவில் தோண்டப்பட்டது, 250 செ.மீ வரை அகழப்பட்டது, 140 செ.மீ மேல் படிப்படியாக குறைந்து 240 மீட்டரில் முற்றிலும் நின்றுவிட்டது, இதில் சுடுமண் பொருட்கள்,தக்கிளி, மான்கொம்புகள் போன்ற விலங்கின எலும்புகள்  அதிகம் கிடைத்தது.

ஈமக்காடு அகழாய்வு:

சுமார் ஐம்பதிற்கு மேற்ப்பட்ட கல்வட்டங்கள் நெடுங்கூரை ஒட்டிய நெடுஞ்சாலையில் பரவிகிடக்கிறது.  ஆனால் முழுமையாக மூன்று மட்டுமே உள்ளது, மற்றவை காலப்போக்கில் சிதைந்துவிட்டது. காருடையாம்பாளையம் எனும் இடத்தில் முழுமையாய் உள்ள கல்வட்டம் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. இதன் விட்டம் 9.20 மீட்டர்,  இக்கல்வட்டம் நிலப்பரப்பிலிருந்து சுமார் 80 செ.மீ உயரமாய் காணப்படுகிறது!

இவை நான்கு பிரிவாக ஒழுங்குடன் அமைத்துள்ளனர். அவற்றை பற்றி விரிவாக அடுத்த இதழில் காண்போம்…

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்