ஆதிமகள் 14

வெகு நேரம் விசாலியுடன் பேசிவிட்டு, வீட்டிற்கு வந்த காயத்ரிக்கு உறக்கம் பிடிக்காமல் கரணின் நினைவுகளில் உழன்று கொண்டிருந்தாள்.
உடலை பல கோணங்களில் வளைத்தும், சாய்த்தும், புரண்டும், கண்களை இறுக மூடி படுத்தும், உறக்கம் இன்றி, தனது அறையின் கதவை திறந்து, ஹாலைக் கடந்து, மாடிக்குசெல்லும் படியேறி, மொட்டை மாடிக்கு சென்றாள் காயத்ரி. மணி என்னவாக இருக்கும் என யோசித்தாள். வானத்தை பார்த்தாள். காவேரிபாலத்தில் நின்று பார்த்த அந்த நிலவை தேடினாள். அவள் நின்றிருந்த இடத்திலிருந்து பார்த்த போது ஒரு தென்னை மரம் அந்த நிலவை மறைத்திருந்தது. அதனால் சற்று தள்ளி நின்று பார்த்தாள். நிலவு பளிச்சென்று தெரியவில்லை. நிலவின் மீது மேகங்களின் மிச்சங்கள் குழப்பங்களாக படிந்திருந்தது. அது அவளின் மன நிலையை குறிப்பிடுவது போல் காயத்ரிக்கு தெரிந்தது.
கடந்த சில மாதங்களாக காயத்ரியை பெண் பார்த்து சென்ற சடங்குகளாலும், சம்பிரதாயங்களாலும் அவளது மனம் திருமண எதிரினத்திற்கான தேடலில் லயித்திருந்ததால், கரணை கண்டவுடன் அவள் தடுமாறினாள். அந்த தடுமாற்றம் அவளுள் நிலை கொண்டதால் உறக்கம் பிடிக்காமல் அலைமோதினாள். மொட்டை மாடியில் தூக்கம் பிடிக்காமல் அலைமோதியபடியே, அங்கும் இங்குமாக நடந்தவாறிருந்தாள். அங்கிருந்த கைப்பிடி சுவரில் சாய்ந்தவாறு சம்மணமிட்டு, கண்களை மூடி அமர்ந்து கொண்டாள். உடலில் அயர்ச்சி மேலிட்டது. அப்படியே சற்று சாய்ந்து படுத்துக் கொள்ளலாம் போலிருந்தது அவளுக்கு. அம்மா விழித்துக்கொண்டு தன்னைத் தேடினால், நேராக மாடிக்குத்தான் வருவாள். இதுபோல்

ஏற்கனவே பலமுறை, பல சந்தர்ப்பங்களில், தூக்கம் பிடிக்காமல், தான் மொட்டை மாடியில் இருந்த போது அம்மா “என்னடி இது, பசங்க மாதிரி தன்னந்தனியாக மொட்டை மாடியில் இந்த ராத்திரி நேரத்தில உலாத்திக்கிட்டு இருக்க, கீழே இறங்கி வா” என எச்சரிக்கும் தொனியில் பேசிவிட்டு போவாள். ஆனால் காயத்ரி பெரும்பாலும் அந்த வார்த்தைகளை காதில் போட்டுக் கொண்டவளில்லை. ஆனால் இன்று, தான் மொட்டை மாடிக்கு வந்த காரணம், கரணின் நினைவு என்பதால் காயத்ரிக்கு ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தியது. அம்மா விழித்துக் கொண்டு தேடுவதற்கு முன்பே கீழிறங்கி சென்று விடலாம் என்று யோசித்தவள், தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திரிக்க மனமின்றி எழுந்து, கீழே இறங்கிச் சென்றாள்.
மாடியிலிருந்து காயத்ரி கீழிறங்கி செல்லும்போது கடிகாரம் மணி நான்கை ஓசை எழுப்பி உணர்த்தியது. மெதுவாக தனது அறைக்கு சென்று படுத்தவள். நாளை காலையில் தான் எத்தனை மணிக்கு விழிப்பது, என்ன ஆடை உடுத்துவது, காலையில் விசாலிக்கு போன் செய்து கரண் வருவதைப் பற்றி விசாரிக்கலாமா? வேண்டாமா? என யோசித்தவாறே உறங்கிப் போனாள்.
காலை வெகு நேரமாகியும் காயத்ரி எழவில்லை. ஜானகி அம்மாள் காயத்ரியின் அறையின் கதவை திறந்து உள்ளே சென்று காயத்ரியை எழுப்பினாள். காயத்ரி விழித்துக்கொண்டு மணியை பார்த்தாள். மணி ஒன்பதாகியிருந்தது. ஜானகி அம்மாள் காயத்ரியை பார்த்து பேசினாள். “ராத்திரியில் தூக்கம் வரலைன்னா என்கிட்ட வந்து படுத்துக்க வேண்டியதுதானடி எதுக்கு மொட்டை மாடிக்கும் வீட்டுக்குமா அலைமோதுற” என சாதாரணமாக கேட்டு விட்டு காயத்ரியின் அறையை விட்டு வெளியே போனாள். ஆமாம். இவள்தான் எனது அம்மா! என்னைப் பார்க்காமல் கூட எனது பெருமூச்சைக் கூட அளவிடுவாள். பூமிக்குள் கிடக்கும் நீராய் அவளுக்குள் நான் பரந்து, விரிந்து, அவள் உடல் முழுதும் ரத்த நாளங்களாய் பிரவேசிக்கிறேன். எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் என் எண்ணங்களைக் கூட கணக்கிட்டுவிட முடியும் இவளால், எப்படி எனது விழிப்பை உணராமல் இருப்பாள். வயிற்றில் சுமந்து, உடலில் சுமந்து, இறக்கும் வரை மனதில் சுமக்கும் நீ, உன் வாழ்க்கை முழுவதும் சுமக்க பிறந்தவள் தானா? நானும் உன்னைப்போல் ஆவதற்காகத்தான் இப்போது நீ என்னை சுமக்கிறாயா என அம்மாவைப் பற்றிய சிந்தனை மேலோங்க. மெதுவாக எழுந்து கண்ணாடியில் தன்னை முழுதுமாய் பார்த்துக் கொண்டாள். நைட்டியை பின்புறமாக இறுக்கிப்பிடித்து முன்னும் பின்னும் தன்னைப் பார்த்துக் கொண்டவள் தனக்குத்தானே திருப்தி அடைந்து கொண்டவளாய், தான் கிளம்பி ரெடி ஆனவுடன், விசாலிக்கு போன் செய்ய வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டாள்.

காலை எழுந்தது முதல் சற்று பரபரப்புடனே காணப்பட்டாள் காயத்ரி, இடை இடையே அம்மா தன்னை நிச்சயமாக கவனித்துக் கொண்டுதான் இருப்பாள் என்ற எண்ணம் சில சந்தர்ப்பங்களில் அவளை அடக்கி, அடங்கி இருக்க செய்தாலும், அவளையும் மீறி வீட்டின் வாசலுக்கும், அவளது அறைக்குமாய் நடந்தவள், கையால் மொபைலை காரணமின்றி நோண்டியவாறே திரிந்தாள்.
இதை கவனித்தும், கவனிக்காதது போல் இருந்த ஜானகி அம்மாள், “நில்லுடி? எதுக்கு அங்கும் இங்குமா அலை மோதுற? யார் வரா வீட்டுக்கு? என கேட்டே விட்டாள்.
அம்மா இதைக் கேட்டது, காயத்ரிக்கு பெருமூச்சு விட்டது போல் இருந்தது.
காயத்ரி இதுவரை எதையுமே அவள் மனதில் மறைத்து வைத்ததில்லை. குறிப்பாக அவள் அம்மாவிடம் எதுவாக இருந்தாலும் கூறிவிடுவாள். அதுதான் அவளுக்கு இதுவரை சந்தோசத்தையும், நிம்மதியையும் உணரச் செய்திருந்தது. அதேபோல் எந்த விசயமாக இருந்தாலும் காயத்ரியிடம் ஜானகி அம்மாளும் அவள் மனதுக்கு தோன்றியதை உள்ளது உள்ளபடி சொல்லிவிடுவாள். அந்த நேரத்தில் அவர்கள் இருவரும் தோழிகள் போல் பேசிக்கொள்வது பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.
அதுபோல் ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்த காயத்ரி அவளது அம்மாவின் கையை பிடித்து அங்குள்ள ஒரு நாற்காலியில் அமர வைத்து ஏதோ ஒரு கனத்த விசயத்தை ஆரம்பிப்பதற்கான முத்தாய்ப்புடன் ஆழமாக ஜானகி அம்மாளைப் பார்த்தவாறு பேச ஆரம்பித்தாள்.
காயத்ரி இப்படி நடந்து கொள்வது ஒன்றும் ஜானகி அம்மாளுக்கு புதிதில்லை. ஏதேனும் காரியம் ஆகவேண்டும் என்றால், சிறுவயதில் தன் கால்களை பிடித்து அன்னாந்து தன் முகத்தை பார்த்துக் கொஞ்சுவதும், கெஞ்சுவதும், பின் வயதாக வயதாக முதுகில் உப்பு மூட்டை ஏறுவது போல் கழுத்தைக் கட்டிக் கொண்டு, முகம் உரசி, காரியம் சாதிப்பதும், சமீபகாலமாக தன்னை உட்கார சொல்லி காலடியில் அமர்ந்து, அவள் சொல்வதை மறுபேச்சின்றி கேட்க வைத்து காரியம் சாதித்துப் புன்னகைப்பதும், காயத்ரியின் இயல்பாகி போனது. ஜானகி அம்மாளும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் வாழ்க்கையின் உயிரோட்டத்தை உணர்ந்தாள். பல சமயங்களில் இது போன்ற சம்பவங்களை சண்முகநாதனிடமும் பகிர்ந்து கொண்டு பூரித்தும் போவாள்.
இன்று ஜானகி அம்மாளும் வழக்கமான நிகழ்வாய், காயத்ரி பேசப் போவதை கூர்ந்து கவனிக்க தனது முக வடிவை மாற்றிக் கொண்டாள்.
