திருச்சி காந்திமார்க்கெட்டில் கடைகளுக்கான வாடகை உயர்வு.

0
1

திருச்சி காந்திமார்க்கெட்டில் கடைகளுக்கான வாடகை உயர்வு.

திருச்சி காந்திமார்க்கெட்டில் 1,300 தரைக்கடைகளும், 890 கட்டிட கடைகளும் உள்ளன. இந்த கடைகள் மாநகராட்சி மூலம் தனியாருக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக குத்தகை எடுத்த நபர் கடந்த 1-ந் தேதி முதல் காந்திமார்க்கெட் கடைகளுக்கு புதிய வாடகை கட்டணங்களை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளார்.

இதற்கு வியாபாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வணிகர் சங்கங்களின் பேரவை, இங்கிலீஷ் காய்கறிகள் வியாபாரிகள் சங்கம், தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம், அனைத்து காய்கனி வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் உள்பட 10 சங்கத்தினர் இணைந்து நேற்று காந்திமார்க்கெட்டில் அவசர செயற்குழு கூட்டம் நடத்தினர். கூட்டம் முடிந்ததும் வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.பி.பாபு நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

2

காந்திமார்க்கெட்டில் தரைக்கடைகளுக்கு முன்பு தலா ரூ.10 வசூலித்த வாடகை தற்போது ரூ.15 ஆக அதிகரித்துள்ளது. கட்டிட கடைகளுக்கு 50 சதவீதம் வரை வாடகை கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். மார்க்கெட்டிற்குள் காய்கறிகள் இறக்க லாரிகள் வரும் போது கட்டணமாக முன்பு ரூ.70 வசூலிக்கப்பட்டதை தற்போது ரூ.140- ஆக உயர்த்தி உள்ளனர். புதிய குத்தகைதாரரின் கட்டண நிர்ணயத்தால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

மார்க்கெட்டில் ஏற்கனவே வியாபாரம் அதிக அளவில் நடைபெறாத நிலையில் புதிய கட்டணத்தால் எங்களுக்கு (வியாபாரிகள்) நஷ்டம் ஏற்படும். புதிய கட்டணத்தினால் நாங்கள் காய்கறிகளின் விலைகளை உயர்த்த வேண்டிய நிலை வரும். இதனால் வாடிக்கையாளர்கள் மீது சுமை விழும்.

புதிய கட்டணம் 50 சதவீதம் உயர்த்தி கடந்த 1-ந் தேதி முதல் குத்தகைதாரர் தரப்பில் வசூலிக்க தொடங்கினர். ஆனால் புதிய கட்டணத்தை நாங்கள் செலுத்த மறுத்துவிட்டோம். பழைய கட்டண முறையே இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அப்படி இல்லையெனில் முன்பு இருந்த கட்டணத்தை விட சற்று கூடுதலாக வேண்டுமானால் உயர்த்தினால் பரவாயில்லை. வாடகை உயர்வு குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையரை சந்தித்து முறையிட உள்ளோம்.

மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் சங்கத்தினரை குத்தகைதாரர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். கடைகளுக்கான வாடகை கட்டணத்தை குறைக்க மறுத்தால் அடுத்தகட்டமாக கடையடைப்பு போராட்டம் நடத்தவும் நாங்கள் தயாராகுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கூட்டத்தில் புதிய வாடகை கட்டணம் நிர்ணயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காந்திமார்க்கெட்டில் கடைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வாடகை குறைக்கப்படாவிட்டால், அத்தொகையை சமாளிக்க காய்கறிகளின் விலையை வியாபாரிகள் உயர்த்தினால் விலைவாசி உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

3

Leave A Reply

Your email address will not be published.