
மதுரையில் சித்திரை திருவிழா
பழங்காலத்தில் வர்த்தகத்திற்கு பெயர் பெற்ற தூங்கா நகரமான மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. சைவ மதத்தையும், வைணவ மதத்தையும் இணைக்கும் ஒரு பெருவிழா.
ஏப்ரல் 17ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 18ஆம் தேதி தேரோட்டமும் மறுநாள் 19ஆம் தேதி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவமும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரைத்திருவிழா. ஆண்டு தோறும் சித்திரை மாதம் பவுர்ணமியை முன்னிட்டு மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தினந்தோறும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல்15ஆம் தேதி இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 16ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக்விஜயமும் நடைபெற உள்ளது.

விழா நிகழ்வுகள்:
ஏப்ரல் 8, கொடியேற்றம் கற்பக விருக்ஷ் வாகனம், சிம்ம வாகனம். ஏப்ரல் 9, பூத, அன்ன வாகனம் ஏப்ரல் 10 கைலாச பர்வதம், காமதேனு வாகனம் ஏப்ரல் 11, தங்கப்பல்லக்கு ஏப்ரல் 12 வேடர் பறிலீலை, தங்கக் குதிரை வாகனம் ஏப்ரல் 13, ரிஷப வாகனம் ஏப்ரல் 14 நந்திகேஷ்வரர், யாழி வாகனம் ஏப்ரல் 15, ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் ஏப்ரல் 16 மீனாட்சி திக் விஜயம் சித்திரைத் தேரோட்டம் ஏப்ரல் 17 ஆம் தேதி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்றைய தினம் யானை வாகனத்திலும் புஷ்ப பல்லாக்கிலும் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பவனி வருவதைக் காண கண்கோடி வேண்டும். 18ஆம் தேதி, மீனாட்சி, பிரியாவிடை சமேதராக சுந்தரேஸ்வரர் பிரம்மாண்ட தேரில் ஏறி நான்கு மாட வீதிகளிலும் வலம் வருவார். 29ஆம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
கள்ளழகர் வைகையில் இறங்கும் விழா
வைகையில் இறங்கும் கள்ளழகர் அழகர்மலையில் இருந்து வைகையில் இறங்குவதற்காக ஏப்ரல் 17ஆம் தேதி கண்டாக்கி சேலை கட்டி கையில் வேல் கம்புடன் தங்கப்பல்லாக்கில் புறப்படுவார் அழகர். அவரை பக்தர்கள் மூன்று மாவடியில் எதிர்கொண்டு வரவேற்பார்கள். ஏப்ரல் 19ஆம் தேதியன்று வைகையாற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அன்றைய தினம் இரவு வண்டியூரில் ஆயிரம் பொன் சப்பரத்தில் காட்சியளிப்பார்.
விடிய விடிய திருவிழா அழகர் மதுரைக்கு வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக ஏப்ரல் 20ஆம் தேதி மாண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்து அவரது சாபத்தை நீக்குகிறார். இரவு முழுதும் தசாவதாரக்காட்சி நடைபெறுகிறது. ஏப்ரல் 21ஆம் தேதி புஷ்ப பல்லாக்கில் ஏறி மலைக்கு திரும்புகிறார் அழகர். 22ஆம் தேதி அழகர் மலைக்கு சென்றடைகிறார். ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை மதுரையே விழாக்கோலம் பூண்டு காட்சி தரும்.
