ராகுலின் ரகசியம்!

0

“காங்கிரஸும் அதிமுகவும் மோதும் தொகுதி. அதிமுக வேட்பாளர் தம்பிதுரையும் அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கரும் திறந்தவெளி ஜீப்பில் நின்றபடியே வீதி வீதியாக போகிறார்கள். வழியில் கிராமங்கள் இல்லாத இடங்களில் மட்டும் ஜீப்பில் இருந்து இறங்கி இன்னோவா காருக்கு மாறிக் கொள்கிறார்கள். தம்பிதுரை பாக்கெட்டில் வைத்திருக்கும் சீப்பை எடுத்து பிரச்சாரத்துக்கு இடையிலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தலையை சீவுகிறார். அடிக்கடி தம்பிதுரை தலை சீவும் காட்சியை அருகில் இருந்தபடியே கவனிக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

‘உங்களுக்கு நல்லது செய்யணும்னா நல்லது நடக்குணும்னா நான் ஜெயிக்கணும். நான் ஊருல இல்லைன்னாலும் என்னோட ஆபீஸ்க்கு வந்து நீங்க இந்த 5 வருஷமா பார்த்துட்டுதானே இருக்கீங்க. வேற யாருக்காவது ஓட்டு போட்டீங்கன்னா ஜெயிச்ச பிறகு உங்களை திரும்பி கூட பார்க்க மாட்டாங்க… இங்கே நான் இருக்கேன். இதோ அமைச்சர் விஜயபாஸ்கர் இருக்காரு. நாங்க எல்லாமே உங்களுக்கு நல்லது பண்ணத்தான் இருக்கோம்.’ என்று தம்பிதுரை பேச பேச தலையாட்டுகிறார் விஜயபாஸ்கர்.
‘குடிக்க தண்ணீரே இல்ல…’ என்ற குரல் மட்டும் கரூரில் திரும்பிய பக்கமெல்லாம் கேட்கிறது. ‘அதெல்லாம் சரி பண்ணிடுவோம்…’ என்று சொன்னபடியே போகிறார் தம்பிதுரை.

செந்தில்பாலாஜி திமுகவுக்கு வந்த பிறகு சந்திக்கும் முதல் தேர்தல். அதனால் திமுக கூட்டணி வேட்பாளர் ஜோதிமணியை ஜெயிக்க வைத்தே ஆக வேண்டும் என தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளார். ஜோதிமணிக்கு சீட் கொடுத்ததில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலருக்கே உடன்பாடு இல்லை. ஊழியர் கூட்டத்துக்கே காங்கிரஸ் பல தலைகள் ஆப்செண்ட். ஜோதிமணியின் பிரச்சாரம் என்பது இன்னும் மக்களிடம் போக வில்லை. நிர்வாகிகளை சந்திப்பதில் மட்டுமே இருக்கிறது. அதுவும் காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் என எல்லோரையும் திரட்டிக் கொண்டு நகர்வதற்குள் ஜோதிமணி பாடு திண்டாட்டமாகிவிடுகிறது.
அமமுகவில் இருந்து செந்தில்பாலாஜி கிளம்பிய பிறகு, கரூரில் சொல்லிக் கொள்ளும்படியாக அமமுகவின் நிலவரம் இல்லை. அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சத்தமே இல்லாமல் இருக்கிறார். கரூரில் தம்பிதுரையா… ஜோதிமணியா என்பதுதான் போட்டி.

food

‘ஜோதிமணியை தவிர வேற யாரையாவது போட்டு இருந்தால் கூட எங்களுக்கு கடுமையான போட்டியாக இருந்திருக்கும். ஜோதிமணியை போட்டதால எங்களுக்கு வேலையே இல்லை. நாங்க படுத்துகிட்டே ஜெயிச்சுடுவோம்..’ என்று வெளிப்படையாகவே அதிமுகவினர் பேசுவதை கரூரில் கேட்க முடிகிறது.

இதற்குக் காரணமாக திமுகவினரும், காங்கிரஸாரும் சொல்வது என்னவென்றால் தம்பிதுரைக்கு ஈடுகொடுத்து செலவு செய்யும் அளவுக்கு ஜோதிமணி வசதி இல்லாதவர் என்பதுதான். ஜோதிமணி உள்ளாட்சிப் பொறுப்பில் இருந்து படிப்படியாக உழைத்து கட்சியில் மெல்ல மெல்ல இந்த இடத்துக்கு வளர்ந்திருக்கிறார்.

கரூரில் ஜோதிமணி விருப்ப மனு போட்டதில் இருந்தே அவர்தான் வேட்பாளர் என்று பலமாக பேசப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் தரப்பில் இருந்தே டெல்லி வரைக்கும் போன புகார்களில் முக்கியமானது, ‘ஜோதிமணிக்கு நல்ல பெயர் இருக்கிறது என்றாலும், அவர் தேர்தலை பொருளாதார ரீதியில் எதிர்கொள்ளும் அளவுக்கு இல்லை’ என்பதுதான். இதைக் கேட்ட ராகுல், ‘அப்படின்னா கோடீஸ்வரர்கள் மட்டும்தான் தேர்தல்ல போட்டியிடணுமா? கட்சிக்காக உழைக்கிறவங்களுக்கும் நாம அங்கீகாரம் கொடுக்கணும்.
ஜோதிமணிதான் கரூர்ல போட்டியிடுவார். அவருக்கான தேர்தல் செலவைப் பற்றி நானே பார்த்துக்குறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பே ஜோதிமணியும் ராகுல் காந்தியிடம் தனது பொருளாதார நிலைமை பற்றி சொல்லியிருக்கிறார். அப்போதும் ராகுல், ‘பணம் இருக்கிறவங்களுக்குதான் சீட்டுன்னா தொழிலதிபர்களுக்கு மட்டும்தான் கொடுக்கணும். நீங்க தைரியமா வேலை பாருங்கள்’ என்று ஜோதிமணியை ஊக்கப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் கர்நாடகாவில் அமைச்சர் சிவகுமாரை அழைத்த ராகுல், ’கரூர் தொகுதிக்கான செலவை நீங்க கவனிச்சுக்கங்க’ என்று உத்தரவிட்டிருக்கிறார் . இதை ஏற்றுக் கொண்ட சிவகுமாரும் அதற்கான பணிகளில் இறங்கிவிட்டார்.

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.