பரிசுப் பெட்டியை தேர்ந்தெடுத்தது ஏன்? தினகரன் அசத்தல் விளக்கம்

0
full

அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை தேர்ந்தெடுத்ததன் காரணத்தை தினகரன் விளக்கியுள்ளார்.

சின்னம் தொடர்பான வழக்கில் தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னத்தை வழங்க உத்தரவிட முடியாது என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அமமுக வேட்பாளர்களுக்கும் பொது சின்னத்தை வழங்க உத்தரவிட்டது. இந்த நிலையில் அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. சமூக வலைதளங்களில் சின்னத்தை கொண்டு சேர்க்கும் வேலைகளிலும், சுவர் விளம்பரத்தில் சின்னம் வரையும் பணிகளையும் அமமுகவினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் சின்னத்தை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன், “மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 59 வேட்பாளர்களுக்கும் பொது சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, தேர்தல் ஆணையத்திடமிருந்து 36 சின்னங்கள் அடங்கிய பட்டியல் மெயில் அனுப்பப்பட்டது.

poster
ukr

அதில் பரிசுப் பெட்டி சின்னத்தை பார்த்தவுடன், ஜெயலலிதா 2016ஆம் ஆண்டில் 16 பொருட்கள் அடங்கிய தாய்-சேய் நல பரிசுப் பெட்டகம் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்த ஞாபகம்தான் வந்தது. அதுவும் எம்.ஜி.ஆர் நகரில் இருக்கும்போது வந்ததால் சென்டிமென்ட் கருதி பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்வு செய்து அனுப்பினேன். சின்னம் கிடைத்து இரவே எங்களுக்கு பதில் வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் அறிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்ட தினகரன், “எங்களுடைய வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியனிடம் ஊடகத்தினர் சின்னம் கிடைத்துவிட்டதா என்று தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறார்கள். அதனால் அவரையே சின்னத்தை அறிவிக்கச் சொன்னேன். அவரும் காலை அறிவித்தார்.

ஏனெனில் ராஜா செந்தூர் பாண்டியன் வழக்கறிஞர்- கிளையண்ட் என்பதைத் தாண்டி சகோதரத்துவத்துடன் பழகக் கூடியவர். அவர் அமமுகவில் உறுப்பினராக இல்லை. இருப்பினும் நான் டெல்லியில் இருந்தால் எப்படி வழக்கை நடத்தியிருப்பேனோ அதுபோல ஈடுபாட்டுடன் செயல்பட்டார். அவர் அறிவித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் அறிவிக்கச் சொன்னேன்” என்றும் குறிப்பிட்டார்.

half 1

Leave A Reply

Your email address will not be published.