தேர்தல் களத்தில் மொத்த வேட்பாளர்கள் மக்களவை-845 சட்டமன்றம்-269!

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் 845 பேரும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 269 பேரும் போட்டியிடுகின்றனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 19ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 27ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்தது.
இந்நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியலை மார்ச் 29 தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டார். அதில், தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் 845 பேரும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 269 பேரும் போட்டியிடுகின்றனர். மாநில கட்சிகள் சார்பில் 36 பேரும், இதர கட்சிகள் சார்பில் 46 பேரும், சுயேச்சைகள் 187 பேரும் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் மக்களவைத் தொகுதியில் 42 வேட்பாளர்களும், தென் சென்னையில் 40 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக நீலகிரியில் 10 பேரும், காஞ்சிபுரம் மற்றும் மத்திய சென்னையில் 11 பேரும் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி ஏப்ரல் 10 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்தார்.
